You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி - உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி
- எழுதியவர், டேவிட் ஸ்கூமன்
- பதவி, அறிவியல் ஆசிரியர்
கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது "ஆச்சரியமாக" இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
காற்றில் உள்ள ஈரப்பதம்தான் மழைக்கு பதிலாக பனியாக பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும்.
விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தனர்?
எந்தெந்த இடங்களில் எல்லாம் பனி உருகுகிறது என்று காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
மழை பொழிவு பதிவு செய்யப்பட்டபோது, 20 தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளோடு, இந்தப் புகைப்படங்களை சேர்த்தனர்.
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், The Cryosphere என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அதில், ஆரம்பக்கட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது இரண்டு முறை மழை பொழிந்தது. அதுவே 2012ஆம் ஆண்டு இது 12 முறையாக உயர்ந்துள்ளது.
1979-2012 ஆம் ஆண்டிற்குள், 300 தடவைகளுக்கு மேல், மழைப் பொழிவானது பனிக்கட்டிகள் உருகுவதை தூண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மழை பொழிந்தால் என்ன ஆகும்?
குளிர்காலத்தில் மழைப் பொழிவு இருப்பது எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார் ஜெர்மனியில் உள்ள GEOMAR கடல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மரிலெனா ஒல்ட்மான்ஸ். இவர்தான் இந்த ஆராய்ச்சியையும் வழிநடத்துகிறார்.
"இது ஏன் நடக்கிறது என்பது புரிகிறது. தெற்கில் இருந்து வரும் வெப்பக்காற்றுதான் இதற்கு காரணம். ஆனாலும், இது மழைப் பொழிவுடன் தொடர்புப் படுத்தப்பட்டிருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு பேராசிரியரான கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்கோ டெடெஸ்கோ கூறுகையில், மழை அதிகரிப்பு இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
குளிர்காலத்தில் மழை பொழிந்தாலும், அது மீண்டும் உடனடியாக உறைந்து, அம்மழை மேற்பரப்பின் தன்மையை மென்மையாகவும் அடர்த்தியாகவும் மாற்றிவிடும். வெயில்காலத்தில் விரைவாக பனி உருகும் சூழலை முன்கூட்டியே இது ஏற்படுத்திவிடும்.
பனி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ, அவ்வளவு வெப்பத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். இது பனியை விரைவாக உருகச் செய்யும்.
இது ஏன் முக்கியம்?
அட்லான்டிக் பெருங்கடலின் வடக்கு மூலையில் இருக்கும் பெரும் பகுதிதான் கிரீன்லாந்து. அங்கு பெரும் அளவிலான பனி இருப்பதால், அங்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
நிலையான நேரங்களில், கோடைக்காலத்தில் உடைந்து உருகும் பனிக்கட்டிகளை, குளிர்காலத்தின் பனிப்பொழிவு சமன்படுத்தும்.
ஆனால், கடந்த சில தசாப்தங்களில், பெரும் அளவிலான பனிக்கட்டிகளை அப்பகுதி இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இது கடல் மட்ட உயர்வில் சிறு பங்கு மட்டுமே வகிக்கிறது என்றாலும், காலநிலை மாற்றத்தால், உருகும் நீரின் அளவு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது.
அதிகளவில் பாசி வளர்வதால், அங்கிருக்கும் பனி அடர்த்தியாகி, இதனால் கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளால் ஏற்படும் அபாயம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
ஆரக்டிக் பகுதிக்கு செல்லும் மாசு கலந்த காற்றால், அங்கு பாசி உருவாகிறது. உலகின் மற்ற பகுதிகளை விட, ஆர்க்டிக் பகுதி இருமடங்கு அதிகமாக வெப்பமாகி வருகிறது.
இது ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் காலநிலை அமைப்புகளை மாற்றலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்