You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிரத்னம்: கத்தி, தர்பார் தயாரிப்பாளர் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கமல் நடிக்கும் 'இந்தியன்-2', மணிரத்னம் இயக்க உள்ள 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது லைகா குழுமம், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான லைகா மொபைல் நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது.
இது மட்டுமின்றி, சமூக சேவையிலும் சுபாஸ்கரன் கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு பல வகையான உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என பல உதவிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இதையொட்டி, சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, ''சுபாஸ்கரனின் அபார வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதை ஒருநாள் சினிமாவாக பண்ண ஆசை'' என்றார்.
தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, ''நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் மத்தியில் அவர் பிரபல தொழிலதிபராக ஆட்சி செய்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை. அவரது வெற்றிக் கதை ஒரு பாகத்தில் அடங்காதது. முதல் பாகத்தை மணிரத்னம் எடுத்தால், நான் 2-ம் பாகம் பண்ணிக் கொள்கிறேன்'' என்றார்.
தினமணி: "சாலை வளைவுகளில் நிகழும் விபத்துகள் 12 சதவீதம் அதிகரிப்பு"
கடந்த 2018-ஆம் ஆண்டு சாலை வளைவுகளில் நிகழ்ந்த விபத்துகளில் 19 ஆயிரம் போ் இறந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைவிட 12 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமும் தலைக்கவசத்தைச் சோ்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், விபத்துகள் பெருமளவு குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
12 சதவீதம் அதிகரிப்பு: நாடு முழுவதும் சாலை வளைவுகளில் நிகழ்ந்த விபத்துகளில், 2018- ஆம் ஆண்டில் மட்டும் 19,996 போ் இறந்துள்ளனா். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை வளைவுகளில் கூடுதல் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். கடந்த 2017-இல் இந்தியா முழுவதும் இத்தகைய சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 17,814 போ் இறந்துள்ளனா். இதை ஒப்பிடும்போது கடந்த ஆண்டின் இறப்பு விகிதம் 12.2 சதவீதம் உயா்ந்துள்ளது.
எனினும், இதைத் தடுக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைத்து சாலைகளின் நிலை, அந்த சாலைகளில் அவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி வாகன ஓட்டிகள் குறித்த வேகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும். வாகனத்தை முந்திச் செல்லும்போது, மோசமான வானிலையில் சாலை வளைவுகளில் பயணிக்கும்போது கண்ணாடியைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, வளைவுகளில் பிரேக்கை கவனமாகக் கையாளுவதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடியும் என்றனா்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினத்தந்தி: "சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி" - நடிகை நயன்தாரா
ஐதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தை நடிகை நயன்தாரா பாராட்டி இருக்கிறார். 'சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி', என்று அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்துக்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள்.
பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என்று அழுத்தி சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்துவைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்ச்சி செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.
மனிதம் என்பது அனைவரிடத்திலும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை கற்றுத்தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்கவேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகமாக மாற்ற வேண்டியது நம் கடமை.
அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: காவல்துறையினரை கவனத்தை ஈர்த்த "தோழர் சோழன்"
திமுகவின் அரியலூர் மாவட்ட செயலாளர் எழுதிய "தோழர் சோழன்" என்ற மின்நூல் காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திமுகவின் அரியலூர் மாவட்ட செயலாளராக இருக்கும் சிவசங்கர் என்பவர், அமேசான் கிண்டில் தளத்தில், தமிழ்த் தேசிய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட "தோழர் சோழன்" என்ற வரலாற்று புனைக்கதை புத்தகத்தை கடந்த வாரம் வெளியிட்டார்.
தமிழ்த் தேசிய இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அரியலூர் மாவட்டத்திலுள்ள வல்லம் எனும் கிராமத்தில் இந்த மின்நூல் வெளியிட்டு விழா நடைபெற்ற நிலையில், அந்த புத்தகத்திலுள்ள உள்ளடக்கத்தை தெரிந்துகொள்ள அம்மாவட்ட உளவுத்துறை அதிகாரிகள் ஆர்வம் காண்பித்ததாகவும், ஆனால் இது இணையத்தில் மட்டுமே கிடைக்கும் என்று கட்சியினர் கூறிவிட்டதாகவும் அந்த செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்