தெலங்கானா: பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா: தெலங்கானாவில் பாலியல்வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட கால்நடை மருத்துவர்

27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள சாச்சிபௌலியில் இருந்து அவரது இல்லத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இந்த பெண் மருத்துவர், சாட் நகருக்கும், ஷாம்ஷாட்பாத்துக்கும் இடையில் கொல்லப்பட்டுள்ளார். இறந்த பின்னர் அவரது சடலத்திற்கு குற்றவாளிகள் தீ வைத்துள்ளனர் என்று இந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் எரிந்து கொண்டிருந்த சடலத்தை பார்த்த பால் வியாபாரி உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாக சைபர்பாத் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த இந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரது ஸ்கார்ப் மற்றும் காலணியை வைத்து எரிக்கப்பட்டவர் மகள் தான் என இனம் கண்டனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா கட்சி வெற்றி

மம்தா பேனர்ஜி

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்காள சட்டசபையில் 3 தொகுதிகளுக்கு கடந்த 25-ந் தேதி இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் இம்மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கலியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தாபன்தேவ் சிங்கா தனக்கு அடுத்த படியாக வந்த பாரதிய ஜனதா வேட்பாளர் கமல்சந்திர சர்காரை 2,414 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கரக்பூர் சதாரில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பிரேம் சந்திர ஜாவை 20 ஆயிரத்து 853 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதி ஏற்கனவே பாரதிய ஜனதா மாநில தலைவர் திலீப் கோஷ் வெற்றி பெற்றிருந்த தொகுதி ஆகும். அவர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பீமலேந்து சின்காராய், தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதிய ஜனதா வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரை 23 ஆயிரத்து 910 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த வெற்றி மக்களின் வெற்றி என்று கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி , பாரதிய ஜனதாவின் அராஜகத்தை மக்கள் நிராகரித்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: கோட்சேவை புகழ்ந்த உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி ஏன்? ராகுலுக்கு பாஜக எதிர் கோள்வி

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Reuters

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை 'தேசபக்தா்' என்று புகழ்ந்து எழுதிய சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது ஏன்? என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், கோட்சேவை 'தேசபக்தா்' என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. 'பிரக்யா ஒரு பயங்கரவாதி; பாஜகவின் கொள்கையைத்தான் வெளிப்படுத்தியுள்ளாா்' என்று ராகுல் கடுமையாக விமா்சித்தாா்.

இந்நிலையில், பாஜக செய்தித்தொடா்பாளா் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தி போலியாக பேசி வருவதை முதலில் நிறுத்த வேண்டும். சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. உத்தவ் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் கோட்சேவை தேசபக்தா் என்று ஏற்கெனவே புகழ்ந்து எழுதியுள்ளாா்.

அவருடன் கூட்டணி அமைத்துள்ள நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி கருத்துத் தெரிவிக்க முடியும். இதனால் வெட்கமடைந்துதான் நீங்கள் உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவில்லையா?” என்று தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: