மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால சபாநாயகர் தலைமையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பாக இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துமுடியும் வரை, எந்த கொள்கை ரீதியிலான முடிவையும் தேவேந்திர பட்னவிஸ் அரசு எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு கடந்த 2 தினங்களாக விசாரித்து வந்தது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று (திங்கட்கிழமை) மாலை மும்பை கிராண்ட் ஹயாத் ஓட்டலில், மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக "162 எம்.எல்.ஏ.க்கள்" திரட்டப்பட்டு பத்திரிகையாளர்கள் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், ANI

சிவசேனையை சேர்ந்த 56 எம்.எல்.ஏ.க்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் இருந்ததாக சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர்.

மொத்தம் உள்ள 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் உள்பட இரண்டு பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றாலே ஆட்சியமைக்க முடியும்.

இந்நிலையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் 145 எம்.எல்.ஏ.க்கள் இருந்ததைப் போலதெரியவில்லை என்று பாஜக தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: