கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய மீனவர்கள் கோட்டாபயவிடம் கோரிக்கை

கோட்டபாய ராஜபக்ஷ
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த பல வருடங்களாக நீடித்து வரும் இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டாபய ராஜபஷ நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு விட்டு மாற்று தொழில் தேடி வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதால் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவ தொழிலாளர்கள் இல்லாமல் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் எதிர்வரும் காலங்களில் மீன்பிடி தொழிலாளர்கள் இல்லாமல் பாரம்பரிய மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோதி, புதிதாக பதவி ஏற்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ ஆகிய இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைப்பதுடன் இலங்கை - இந்திய இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரிய கடல் பகுதியில் பிரச்சனையில்லாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலை போடும் மீனவர்

பட மூலாதாரம், MAJORITY WORLD / GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

இது குறித்து இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசு ராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தடைபட்டு இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. எனவே,புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்தையை மீண்டும் நடத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று இந்தியா வரவுள்ள இலங்கை ஜனாதிபதி இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்தையை துரிதபடுத்தி இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையில் செய்தால் தமிழக மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். எனவே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க இலங்கை ஜனாதிபதி நிச்சயமாக ஒத்துழைப்பு தருவார் என நம்புவதாக தெரிவித்தார்.

இது குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்கத்தை சேர்ந்த எமரால்ட் பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய மீனவர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எல்லை தாண்டுவதற்கு முக்கிய காரணம் குறுகிய கடல் பரப்பு. குறிப்பாக, ராமேஸ்வரத்தில் இருந்து 16 நாட்டிக்கல் தூரத்தில் இந்திய இலங்கை எல்லை உள்ளது எனவே இரு நாட்டு அரசுகளும் அமர்ந்து பேசி எல்லை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எல்லை விரிவாக்கம் செய்தால் இரு நாட்டு மீனவர்களும் பிரச்சனையின்றி மீன் பிடிக்க உதவியாக இருக்கும்.

அதேபோல் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இரு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவு கடல் பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மீனவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இது குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சகாயம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்துள்ளது. புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசு கச்சத்தீவு பகுதி குறுகிய எல்லை பகுதியாக உள்ளதால் இரு நாட்டு மீனவர்களும், அரசும் இணைந்து பேசி பாரம்பரிய எல்லை பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கை காரணமாக இந்திய அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு கொண்டு செல்ல தயார்படுத்தி வருகிறது.

இதற்கு ராமேஸ்வரம் மட்டும் அல்லாமல் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தயராகி வருகின்றனர். எனவே ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு தங்களது படகுகளை கொண்டு செல்லும் வரை கச்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க இலங்கையின் புதிய அரசு உதவி செய்ய வேண்டும் என கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :