புற்றுநோயை அன்பால் வென்ற ஐஷ்வர்யா - நம்பிக்கை பகிர்வு #iamthechange
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 12வது அத்தியாயம் இது.)
வாழ்க்கை நிரந்தரமற்றதுதான். ஆனால் எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென உங்கள் வாழ்க்கை முடிந்துபோகும் அளவிற்கு ஒரு நோய் உங்களை வாட்டினால்... நிலைகுலைந்துதானே போவீர்கள்?
ஆனால் ஐஷ்வர்யா அவ்வாறு நிலைகுலைந்து போகவும் இல்லை வாழ்க்கையை வெறுத்துவிடவும் இல்லை மாறாக தான் பெற்ற வலியை வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்ப்பதற்கான உந்து சக்தியாய் மாற்றியுள்ளார் அவர்.
தணிக்கையாளரான ஐஷ்வர்யாவின் இன்றைய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கை நிறைய சம்பளம், நல்ல நண்பர்கள், சுதந்திரமான வாழ்க்கை .ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் வாழ்க்கை இப்படியானதாக இல்லை.
அதனைத் தெரிந்துகொள்வதற்கு முன் இப்போது ஐஷ்வர்யா செய்து வரும் பணிகளைத் தெரிந்துகொள்வோம். இந்த வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அது அளிக்கலாம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் ஐஷ்வர்யா, "அவர்கள் வாழ்க்கை என்றைக்கு வேண்டுமானாலும் முடியலாம். ஆனால் அவர்கள் அதுவரை ஏன் வலியிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்க வேண்டும்" என்று கேட்கிறார்.
அவர்களுக்கு இன்னும் ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டோ என்று மருத்துவர் சொல்வதுண்டு. ஆனால் நமது வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம்? நிரந்தரமில்லா வாழ்க்கை இது. எனவே முடிந்த வரை நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடனே பேசுகிறார் ஐஷ்வர்யா.
பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட கேள்வி
இது அனைத்தும் தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தொடங்கியதாகக் கூறுகிறார் அவர்.
"கோட்டூர்புரம் அண்ணா ஜெம்மில் படித்த அவருக்கு அடையாரில் தனது நண்பர்களுடன் பெற்றோருக்காகக் காத்திருந்த அந்த சமயம் தனது வாழ்க்கையில் முக்கிய பல தருணங்களை ஏற்படுத்தும் என்று தெரியாது."
சாலையில் சிறிது நேரம் கொசுக்கடிக்கு மத்தியில் நின்றிருந்த ஐஷ்வரியாவும் அவரது நண்பர்களும், அங்கு அதே கொசுக்கடியில் படுத்திருப்பவர்களைப் பார்த்துள்ளனர்.
அவர்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தங்கள் உறவினர்களைச் சேர்க்க வந்தவர்கள் என்பதும், அன்று அந்த நாளில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்காமல் அவர்கள் அங்கு படுத்துள்ளனர் என்பதும் ஐஷ்வர்யாவுக்கு அப்போது தெரியாது. யாரோ வீடற்றவர்கள் அங்குப் படுத்திருப்பதாகவே அவர் கருதினார்.

அவர்கள் தங்குவதற்குத் தனது நண்பர்களுடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். வீட்டை வாடகை கேட்டுச் சென்ற பள்ளி மாணவர்களைச் சந்தேகத்துடன் பார்த்த அந்த வீட்டு உரிமையாளர் அவர்களின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். பின் நடந்தவற்றைத் தெரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளரும் உதவிக்கு முன் வந்ததில் தொடங்கியது ஐஷ்வரியாவின் பணி.
பின்புதான் அவர்கள் அனைவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்; சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள்; தங்க இடமின்றி தவிப்பவர்கள் என அவருக்குத் தெரிந்திருக்கிறது.
தேவை போஷாக்கு
ஆரம்பத்தில் தங்கும் இடம், பின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு வழங்குவது என்று தொடர்ந்தார் ஐஷ்வர்யா. பிறகு, உணவு வழங்கினால் மட்டும் போதாது அவர்களுக்கு உணர்வு ரீதியாக ஓர் ஆதரவு தேவை என்று உணர்ந்து கொண்டிருக்கிறார்.
"ஏனென்றால் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்படும்போது அந்த மொத்த குடும்பமும் துயரத்தின் விளிம்பிற்கு சென்றுவிடும். அதற்கு மேல் பணக்கஷ்டம் வேறு என்றால் அவர்கள் மொத்தமாக உடைந்துவிடுகின்றனர்," என்கிறார் ஐஷ்வர்யா.
"புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி வழங்குவார்கள். அது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை மட்டுமல்லாமல் பிற நல்ல செல்களையும் அழிக்கக்கூடும். எனவே அந்த சமயத்தில் குழந்தைகளுக்குப் போஷாக்கான உணவு தேவை," என்கிறார் ஐஷ்வர்யா.
ஒரு முறை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த குழந்தை ஒரு ஆப்பிள் கேட்டதால் அதை வாங்கிக் கொடுக்க இயலாத அதன் அம்மா அந்த குழந்தையை அடித்துள்ளார். தனது குழந்தைக்குப் புற்றுநோய் வந்த துயரம், ஒரு ஆப்பிள்கூட வாங்கிக் கொடுக்க முடியாத இயலாமை என அனைத்தும் சேர்த்து அந்த குழந்தையை அந்த தாய் அடித்துள்ளார். இதனைப் பார்த்த தனக்கு வாழ்க்கையின் மீது ஒரு பெருங்கோபமே வந்ததாகக் கூறுகிறார் ஐஷ்வர்யா.
மாற்றம் ஏற்படுத்திய அந்த கணம்
தனது வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சியுடன் பேசும் ஐஷ்வர்யாவின் பேச்சை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, தனது வாழ்க்கை முடிந்தே போய்விட்டது என்ற நினைத்த தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"எனது வாழ்க்கை லட்சியமாக நான் கருதிய அந்த தேர்வு எழுத சென்ற அந்த தருணத்தில் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நான் சிஏ படிக்க வேண்டும் என்பது எனது ஒன்பதாம் வகுப்பில் நான் எடுத்த முடிவு. எனவே மருத்துவர்கள் எனக்கு புற்றுநோய் என்று கூறியதும் வாழ்க்கை எப்படியும் அது பாதையில் செல்லப்போகிறது, அது எனது கனவை நிறைவேற்றிவிட்டு செல்லட்டுமே என முடிவெடுத்து எனது தேர்வை நிறைவு செய்தேன்," என்கிறார் ஐஷ்வரியா.

எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களுடன் செயல்படும் எனக்கு, அடுத்த நிமிடம் நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்கு நாம் என்ன செய்து கொண்டிருப்போம் என்பதை ஏன் முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகத் தோன்றியது.
அந்த கனம் எனது வாழ்க்கை குறித்த சிந்தனை அத்தனையும் மாறியது. எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் நான் செய்தேன். எனக்கு எது மகிழ்ச்சியளித்ததோ அதை செய்தேன். அது உணவோ எதுவோ அந்த மகிழ்ச்சிதான் இந்த குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.
இவர்களின் வாழ்க்கை ஓரிரு வருடங்களில் முடிந்து போகலாம். ஆனால் அது வரைக்கும் இவர்கள் ஏன் வலியை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று கேட்கிறார் ஐஸ்வர்யா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













