"நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி தகுதித் தேர்வான நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் பயிற்சி மையங்களில், பெரும் தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் வழக்கில் மருத்துவ மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதில் நீட் பயிற்சி மையங்கள் குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 3081 மாணவர்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீட் பயிற்சி மையத்தில் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, இவ்வளவு கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எப்படி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியுமெனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர். 24 மணி நேரமும் பணியிலிருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது; இது ஆசிரியர்களுக்கான சம்பளத்தைவிட மிகக் குறைவு என்றும் கூறினர்.
மேலும் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த பல திட்டங்களை தற்போதைய அரசு திரும்பப் பெற்ற நிலையில், ஏன் நீட் தேர்வை மட்டும் திரும்பப் பெறக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
தங்களிடமுள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை இன்றுக்குள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்தது.
இவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய எத்தனை நாட்களாகும் என சிபிசிஐடியிடம் கேட்ட நீதிமன்றம், பிற மாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக புகார் ஏதேனும் வந்துள்ளதா என்பது குறித்து மத்திய அரசும் மத்தியப் புலனாய்வுத் துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












