ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை காட்டும் புதிய வரைபடம் - இந்திய அரசு வெளியிட்டது

பட மூலாதாரம், Press Information Bureau
இன்றைய இந்திய நாளேடுகளில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி ஹிண்டு - ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்ட பிறகு இந்தியா வெளியிட்ட வரைபடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பிறகு மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் புதிய எல்லைகளை வகுத்து புது இந்திய வரைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தி ஹிண்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வரைபடத்தில் 28 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்கள் அடங்கி இருக்கின்றன.
அக்டோபர் 30ஆம் தேதி நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம், அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது.
இந்த புதிய வரைபடத்தில், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருக்கும் மிர்பூர் மற்றும் முஸாஃபராபாத் ஆகியன ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும், கில்கிட், கில்கிட் வஸ்ரத், சில்ஹாஸ் மற்றும் 1947ஆம் ஆண்டின் பழங்குடியின பகுதி ஆகியன லடாக் யூனியன் பிரதேசத்திலும் இந்தியா சேர்த்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசம் கார்கில் மற்றும் லே என இரு மாவட்டங்களை கொண்டிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தி ஹிண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: ”ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சரியானது”

பட மூலாதாரம், Narendra Modi
இந்திய அரசு சார்பில் தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்றும், இது தொலைதூரம் வரை எதிரொலித்து வருகிறது என்றும் பாங்காக்கில் இந்தியர்களிடம் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்து குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதமும் விதைக்கப்படுவதற்கு முக்கிய காரணியாக இருந்த ஒரு பிரிவு அண்மையில் நீக்கப்பட்டது. பலரும் இது முடியாத காரணம் என்று நினைத்தார்கள்," என்றார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெறவுள்ள கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி கலந்து கொள்ள உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அந்த செய்தி விவரிக்கிறது.

தினத்தந்தி: தமிழக போக்குவரத்துத் துறைக்கு ரூ. 1580 கோடி வழங்கும் ஜெர்மனி

பட மூலாதாரம், Narendra Modi
போக்குவரத்து துறையை சீரமைக்க தமிழகத்துக்கு ஜெர்மனி ரூ.1,580 கோடி வழங்குகிறது. இதைக்கொண்டு 2,713 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
ஜெர்மனி சேன்சலர் ஏங்கெலா மெர்க்கெல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசிய அவர், 17 ஒப்பந்தங்களில் கையழுத்திட்டுள்ளார். அத்துடன் 5 கூட்டுப் பிரகடனங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது, பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டின் மூலம் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கானது என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது, "தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைப்பதற்காக ஜெர்மனி 200 மில்லியன் யூரோ (சுமார் ரூ.1,580 கோடி) வழங்குகிறது என்று ஏங்கெலா மெர்க்கெல் கூறியதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்தி பயன்படுத்தி முதல் கட்டமாக பி.எஸ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களையும், 500 மின்சார பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பான திட்ட ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், ஜெர்மனி வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னேற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையை மேம்படுத்திட மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை ஏற்படுத்துதல், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகர்களின் உதவியைப் பெறுதல், ரொக்கமில்லா பயண சீட்டு முறை உருவாக்குதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் - முக்கிய இந்திய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதைத் தடுக்க தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான அபு உசாயில் இந்தியா விரைவில் மிகப்பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பஹாவல்புரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், மசூத் அசார், அவனது சகோதரன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கு திரண்டிருப்பதாகவும் உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் தினகரனின் அந்த கட்டுரை விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












