அமேசான் காடு: நிலத்துக்குப் போராடிய பழங்குடி செயற்பாட்டாளரை சுட்டுக் கொன்ற மரம் வெட்டிகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் ஒருவர் சட்டவிரோதமாக செயல்படும் மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுதவிர, மேலும் ஒருவரை இந்த கும்பல் காயப்படுத்தியுள்ளது.
மரான்ஹூ மாகாணத்தில் உள்ள அராரிபோ என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பழங்குடி பிரிவைச் சேர்ந்த பெளலோ பெளலினோ குவாஜஜ்ரா வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் சுடப்பட்டார்.
அராரிபோ வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கார்டியன்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட் என்ற வன பாதுகாப்பு குழுவில் பெளலோ உறுப்பினராக இருந்துள்ளார்.
பெளலோவின் கொலை அமேசான் காடுகளை பாதுகாக்க போராடும் பாதுகாவலர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
சர்வைவல் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ நிறுவனத்தின் கூற்றுப்படி, இதற்கு முன்னர் அமேசான் காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறைந்தது மூன்று பேர் தங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து கொல்லப்பட்டனர்.
பூர்வகுடி மக்களின் நலனுக்காக இயங்கிய அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் டபடிங்கா நகரில் கொலை செய்யப்பட்டார்.
பெளலோவின் மரணத்தை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ள பிரேசிலின் நீதித்துறை அமைச்சர் செர்ஜியோ மோரோ, "இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் நிச்சயம் நிறுத்துவோம்," என்று ட்வீட் செய்துள்ளார்.
பெளலோவுக்கு என்ன நடந்தது?
அராரிபோ வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரம் வெட்ட நுழைந்தவர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பெளலோவின் தலையில் குண்டு பாய்ந்தது என்று பிரேசில் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
பெளலோவுடன் இருந்த மற்றொரு பூர்வகுடி இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் மரக் கடத்தல்காரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக பிரேசில் போலீஸார் கூறுகின்றனர்.

2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் ஹாக்கி அணி

பட மூலாதாரம், HOCKEY INDIA
2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாட, இந்தியப் மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 6-5 என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.
மாஸ்கோவில் 1980ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் ரியோவில் விளையாட தகுதி பெற்றது. தற்போது 2020 ஒலிம்பிக்ஸில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது.
விரிவாக படிக்க: ஒலிம்பிக்ஸ் 2020க்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 ஆட்குறைப்பு

பட மூலாதாரம், FOTOKITA / GETTY IMAGES
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் 'கண்டெண்ட் மாடரேஷன்' துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றபோதும், ஊழியர்கள் மத்தியில் வேலை பறிக்கப்படுமோ, அடுத்த வேலைக்கு இப்போதே முயற்சி செய்ய வேண்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

'டிக்டாக்' அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா - விசாரனை நடப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
டிக்டாக் (TikTok) செயலியின் உரிமையைக் கொண்டுள்ள சீன நிறுவனம், மியூசிகலி (Musical.ly) செயலியை வாங்கிய ஒப்பந்தம் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்கான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) 2017ல் மியூசிகலியை ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியது.
நிறுவனங்களை கையகப்படுத்துதலை முறைப்படுத்தும் அமெரிக்க அரசின் அமைப்பால், இந்த ஒப்பந்தத்துக்கு அந்த சமயத்தில் ஒப்புதல் தரப்படவில்லை என்பதால் இந்த மறு ஆய்வு நடக்கிறது என ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. அந்த தகவலை வெளியிட்டவர் குறித்த விவரங்களை ராய்ட்டர்ஸ் வெளியிடவில்லை.

ஐஸ்லாந்தின் கடைசி மெக்டொனால்ட் பர்கர்

பட மூலாதாரம், AFP / ANGELIKA OSIEWALSKA
2009ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது ஒருவர் கடைசியாக பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்க முடிவு செய்தார்.
"மெக்டொனால்டில் வாங்கும் உணவு கெட்டுப்போகாது என்று கேள்விபட்டேன். அது உண்மையா என்பதை பார்க்கவே இதை வாங்கி வைத்தேன்" என ஏஃப்பியிடம் கூறினார் ஜோர்துர் மராசான்.
இந்த வாரத்தோடு இந்த உணவு வாங்கி 10 வருடம் ஆகிறது. ஆனால் இந்த உணவு வாங்கி ஒருநாள் ஆனது போலவே தோன்றுகிறது.
இப்போது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஸ்னொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டியில் உள்ள இந்த பர்கரை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
"அந்த உணவு இங்கு தான் இருக்கிறது. நன்றாகவே உள்ளது" என அந்த விடுதியின் உரிமையாளர் சிக்கி சிகர்துர் பிபிசியிடம் கூறினார்.
விரிவாக படிக்க: பத்து ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத மெக்டொனால்ட் பர்கர்

ஆதி மனிதனின் தாய்நிலம் இதுதான் | Origin of modern humans Traced
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












