நீட் தேர்வு முறைகேடு: ஆள் மாறாட்டம் செய்த மாணவர் தேனி கல்லூரியை தேர்வு செய்தது ஏன்? -மருத்துவக் கல்லூரி டீனிடம் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "நீட் தேர்வு முறைகேடு: தேனி கல்லூரியை தேர்வு செய்தது ஏன்?"
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவரின் தந்தையும், தேனி மருத்துவக் கல்லூரி அலுவலர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ஆவண சோதனையில் அதிக நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காகத் தேனி கல்லூரியைத் தேர்வு செய்ததாக இங்குள்ள அலுவலர்கள் சிலர் தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தேனி மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் உதித்சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது உறுதியானது. இதையடுத்து க.விலக்கு காவல் நிலையத்தில் போலீஸார் கடந்த 18-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images/ facebook
இந்நிலையில் மாணவர் மாயமானதால் அவரைப் பிடித்து விசாரிக்க ஆய்வாளர் உஷாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவரது வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் தேனி திரும்பிய தனிப் படையினர், இங்குள்ள மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், பேராசிரியர்களைத் தனி இடத்தில் வைத்து நேற்று காலை விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் குறித்துக் கடந்த 11, 13-ம் தேதியே தெரிந்தும் உடனடியாக ஏன் புகார் தரவில்லை, குற்றச்சாட்டு உறுதியானதும் உடனடியாக புகார் கொடுத்திருந்தால் மாணவரைப் பிடித்திருக்கலாம். தாமதத்துக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர்.
அதையடுத்து டீன் ராஜேந்திரனிடம் தனிப் படை ஆய்வாளர் உஷா ராணி, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் நேற்று மாலை விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காவல்துறை கூறிய தாவது: புகார் வந்ததும் மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் கல்லூரி டீன் தலைமையில் கடந்த 13-ம் தேதி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஆள் மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் விடுதியிலிருந்து மாணவர் உதித்சூர்யா சூட்கேசுடன் வெளியேறியதைத் தடுக்காமல் விட்டுள்ளனர். அவரது தந்தையே அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் பிடிபட்டால்தான் முழு தகவல்களும் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இக்கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், பின்புலம் உள்ளவர்கள், திட்டமிட்டுச் செயல்பட்டு ஒதுக்குப்புறமான தேனி கல்லூரியில் சேருவதற்கும் ஒரு காரணம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரது தந்தையும், இங்குள்ள உயர் அலுவலர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ஆவண சோதனை, மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் நெருக்கடி, கண்காணிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளலாம் என்பதற்காக இக்கல்லூரியில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கூறி இருக்கிறோம் என்றனர்.

தினமணி: 'விக்கிரவாண்டியில் திமுக, நான்குநேரியில் காங். போட்டி'
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரியில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி காலமானதாலும், நான்குனேரி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகிவிட்டதாலும் அந்த இரண்டு தொகுதிகளும் காலியாக இருந்து வந்தன. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர், அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் விக்கிரவாண்டி , நான்குனேரி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முன்னோடிகளுடன் கலந்து பேசினோம். அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் எனக் கேட்கிறீர்கள். விருப்பமனு திங்கள்கிழமை பெறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா எனக் கேட்கிறீர்கள். இப்போதுதான் தேர்தல் அறிவித்துள்ளார்கள். அதனால், கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும் என்றார்.

தினத்தந்தி: "தமிழக அரசின் வரலாற்று பாடத்திட்டங்களை மாற்றி எழுதவேண்டும்"

பட மூலாதாரம், TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்த தமிழக அரசின் வரலாற்று பாடத்திட்டங்களை மாற்றி எழுதவேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வைகை கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களை சேகரித்து பழம், பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் கீழடி ஆய்வு நடைபெற்றது. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தை சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதற்காக தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.
கீழடி ஆய்வுகள் குறித்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதியன்று அப்போது, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரியாக இருந்த மகேஷ் சர்மாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். பள்ளி பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாக கற்பித்து வருகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாறை, சேர, சோழ, பாண்டியர்களை புறக்கணித்து வருகிறார்கள். இந்தநிலை இனியும் தொடரக்கூடாது." என்றார்.

ஆபாசமாக பேசுனாதான் 100 ரூவா தருவாங்க
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: நரேந்திர மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் 11-13 ஆகிய தேதிகளில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதால், அங்கு அக்டோபர் முதல் வாரத்திலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
மேலும், சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் ஆதார் விவரங்களைப் பெற்றுள்ளனர். உள்ளூர் வாசிகளுக்கு அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி முடியும்வரை, விருந்தினர்கள் வருவதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் வாசிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வீதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களையும், காலி செய்யுமாறு காவல்துறை கேட்டு கொண்டுள்ளனர். என்று விவரிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












