டெல்லி மாசுபாடு: இந்திய தலைநகரில் காற்றின் தரம் மேம்படுகிறதா? #BBCRealityCheck

பட மூலாதாரம், PRAKASH SINGH
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்திய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகரில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு அதிக வேலைகளை இன்னும் செய்ய வேண்டியிருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளாக டெல்லியின் காற்று மாசுபாடு தீவிர பிரச்சனையாக இருந்து வந்தது. குளிர் காலங்களில் அது மிகவும் மோசமாகியது.
2018ம் ஆண்டு டெல்லியின் மாசுபாடு, உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள காற்று மாசுபாட்டு பாதுகாப்பு வரையறையை விட 20 மடங்கு அதிகமாகியது.
விரைவாக அதிகரித்து வளர்ந்து வரும் வாகன போக்குவரத்து, கட்டுமானங்கள், தொழிற்துறை செயல்பாடுகள், குப்பைகளை மற்றும் பதர்களை எரித்தல், பண்டிகை காலத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்துதல், மாசுபாடான காற்றை நீண்டகாலம் வளிமண்டலத்தின் தாழ்வான பகுதியிலேயே இருக்கச் செய்கின்ற காலநிலை ஆகியவற்றால் இந்நிலை உருவாகிறது.

மேம்பட்டுள்ளது என்ன?
25 சதவீத மாசுபாடு குறைந்துள்ளது என்று குறிப்பிட்டபோது, எத்தகைய மாசுபாடு குறைந்துள்ளது என்று கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை.
ஆனால், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆய்வில் கிடைத்த அதிகாரபூர்வ தரவுகளின்படி, மிகவும் மோசமான மாசுபாடுகளில் ஒன்றான பிஎம்2.5 துகளின் சராசரி அளவு, 2012 முதல் 14 வரை இருந்ததைவிட 2016 முதல் 18 வரையான மூன்று ஆண்டுகளில் 25 சதவீதம் குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் குறிப்பிடுபவை
- தினமும் பிஎம்2.5 துகள் உயர்வாக இருந்த நிலை தற்போது குறைந்துள்ளது.
- தீவிர மாசுபாடு நிறைந்த நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- பிஎம்2.5 துகள் மாசுபாடு குறைவாக .இருந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க நகராட்சி அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுத்தமான எரிசக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு மாறுதல், குறிப்பிட்ட நேரங்களில் வாகன பயன்பாட்டில் கட்டுப்பாடு, மாசுபாடு உருவாக்கும் எரிசக்தியை தொழிற்துறை பயன்படுத்தத் தடை, அதிக மாசுபாட்டை வெளியேற்றும் வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தடுத்தல், சில மின் நிலையங்களை மூடுதல் எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
டெல்லியின் பிஎம்2.5 மாசுபாடு குறைதல்

மத்திய அரசும் இதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தலைநகரில் நுழையாமல் செல்ல டெல்லியின் கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு முக்கிய சாலைகளைத் திறந்தது, கரி வெளியேற்ற புதிய வரையறையை வெளியிட்டது ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
ஆனால், தேசிய அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காற்று மாசுபாடு வரையறையை நிவர்த்தி செய்ய தற்போதைய பிஎம்2.5 துகள் மாசுபாட்டின் அடர்த்தியை 65 சதவீதம் இன்னும் குறைக்க வேண்டியுள்ளது என்பதை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய அளவில் காற்றுத்தரம் 40ஆக இருக்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் இருக்கலாம் என்று ஆண்டு சராசரி வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
சிறிய துகள்கள் குறைவான அடர்த்தியுடன் இருந்தாலும் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அது தெரிவிக்கிறது.
பிற மாசுபாட்டு காரணிகள் என்ன?
பிஎம்2.5 துகள் உடல் நலத்திற்கு ஆபத்தானதாக இருந்தாலும், பிரச்சனைகளை உருவாக்கும் காரணி இது மட்டுமல்ல.
பிஎம்10 அளவுள்ள துகளும் மூக்கு, தொண்டையைக் கடந்து நுரையீரலுக்குள் சென்று ஆஸ்துமா உருவாக காரணமாகலாம்.

டெல்லியில் பிஎம்10 துகள் அளவு அப்படியே இருக்கிறது அல்லது குறைந்துள்ளது என்பதற்கு சில சான்றுகளே உள்ளன என்பதை சுர்ரே பல்கலைக்கழகத்தின் சுத்தமான காற்று ஆய்வுக்கான உலக மையத்தின் பிரசாந்த குமார் நான்கு இடங்களில் நடத்திய ஆய்வு தரவுகள் காட்டுகின்றன.
ஆனால், பிஎம்2ஃ.5 துகளை போல பிஎம்10 துகளின் தற்போதைய நிலையும், தேசிய மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைக்கு உயர்வாகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
சுத்தமான மற்றும் மாசுபாடு குறைந்த எரிசக்திக்கு மாறியிருப்பது இந்த பிரச்சனைக்கான தீர்வின் ஒரு பகுதிதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். பிரேக் மற்றும் டயர் தேய்தல் ஆகியவற்றாலும் பிஎம்10 துகள்கள் உருவாகின்றன.
டெல்லியில் பிஎம்10 துகள் மாசுபாடு

மேலும், 100 நானோமீட்டர் விட்டத்திற்கும் குறைவான அல்ட்ராபைன் துகள்களில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்கிறார் குமார்.
நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் ஓசோன் வாயுக்கள் போன்ற, வாகனங்கள் மற்றும் தொழிற்துறையின் வெளியேற்றத்தால் வருகின்ற பிற தீங்கு உருவாக்கும் பொருட்களும் உள்ளன.
டெல்லியின் ஓசோன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களின் அளவு அதிகமாகியுள்ளதாக கூறும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தை சோந்த அனுமித்தா ராய் சௌத்திரி, கோடைகாலங்களில் வெளியாகும் ஓசோன் வாயு, வளர்ந்து வரும் பிரச்சனையாகும் என்கிறார்.
பிற நகரங்களை விட டெல்லி சிறந்ததா?

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images
இதனை ஒப்பிடுவது மிகவும் கடினம். இந்தியாவின் பிற நகரங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியின் காற்றுத்தரம் நன்றாக கண்காணிக்கப்படுகிறது.
டெல்லியில் 38 தனிப்பட்ட காற்றுத்தர சோதனை நிலையங்கள் உள்ளன. ஆனால், சிறிய நகரங்களில் சில நிலையங்களே உள்ளன. அதுவும் மிகவும் பழைய நிலையங்களாக உள்ளன.
இந்நிலையில், 2016ம் ஆண்டை, 2018ம் ஆண்டோடு ஒப்பிடுவதற்கு இந்திய அரசின் தரவுகளையும், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்த இவ்வாண்டு அறிக்கை ஒன்றில், டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் பிற நகரங்களிலும் பிஎம்2.5 துகளின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லிக்கு வெளியிலுள்ள தொழிற்துறை பகுதிகளில் பிம்2.5 மற்றும் பிஎம்10 துகள்களின் அடர்த்தி இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும் இது சுட்டிக்காட்டுகிறது.
2024ம் ஆண்டுக்குள் பிஎம்2.5 மற்றும் பிஎம்10 துகள்களை முறையே 20%, 30% குறைப்பது உள்பட, இந்தியாவின் மாசுபாடு பிரச்சனையை சமாளிப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு டெல்லியின் உள்ளூர் அதிகாரிகளும், மத்திய அரசும் உறுதி எடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












