"தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல்": எச். ராஜா

எச். ராஜா

பட மூலாதாரம், Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல்: எச்.ராஜா கண்டனம்

தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்தை தவறாக புரிந்துகொண்டதாகவும், தானும் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

எனினும், அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷாவின் கருத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த திமுக, அமித் ஷாவின் விளக்கத்துக்கு பிறகு தனது அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல் என்பதை உணர்வோம்'' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: பாகிஸ்தானுடன் போருக்கு தயார்

பாகிஸ்தானுடன் போருக்கு தயார்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் என்று இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா என்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

நான் 2017-ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றபோது, எனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதில், நமது எதிரி போர் புரிய முடிவெடுத்தால், குறுகிய இடைவெளியில் போருக்கு தயாராக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.

இருந்தாலும், பாகிஸ்தான் மக்களை கவரவே அந்நாட்டு தலைவர்கள் அப்படி பேசி வருகிறார்கள். பாகிஸ்தானின் போர்த்திறன் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இது இருமுனை போராக இருக்காது.

நம்மிடம், சுகோய்-30 ரக விமானங்களும், 'பிரமோஸ்' சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது.

'ரபேல்' போர் விமானம் வந்த பிறகு, விமானப்படையின் வலிமையில் பெரும் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, 50 பேர் கொண்ட சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழுவினர் மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

" சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 3 நாள் பயணமாக வருகை தர உள்ளனர்.

இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனர்.

அவர்கள், சீன அதிபர் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். வெண்ணை உருண்டைப்பாறை, அர்ச்சுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்துரதம் ஆகிய இடங்களில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்ததுடன், அதுகுறித்து குறிப்புகளும் எடுத்தனர்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :