நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல்

சுனில் அரோரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனில் அரோரா

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதே போன்று புதுவையிலுள்ள காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அதே தேதியில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி, வரும் 30ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை அக்டோபர் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என்றும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை அக்டோபர் 3ஆம் தேதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளையும் அறிவித்தார்.

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவிலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு மகாராஷ்டிராவில் மொத்தம் 8.94 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

அதேபோன்று, 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஹரியானாவிலும் அக்டோபர் 21ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவை பொறுத்தவரை, மொத்தம் 1.82 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :