அசோக் லேலண்ட்: 'வேறு வேலை தெரியாது' - கட்டாய விடுப்பால் கலங்கும் தொழிலாளர்கள்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
பொருளாதார சரிவு காரணமாக சென்னையில் உள்ள முன்னணி கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை அளித்துள்ள நிலையில், பல தொழிலாளர்கள் சிரமத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுரேஷ்(42) அக்டோபர் மாதம் தீபாவளிக்கு தனது இரண்டு மகள்களுக்கும் பட்டாசு வாங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.
கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் சுரேஷ் - உதயரேகா தம்பதியை சந்தித்தோம்.
ரூ.35,000 மாத சம்பளம் பெற்றாலும் சுரேஷ் - உதயரேகா தம்பதி வாடகை வீட்டில் வசிப்பதால், ரூ.12,000 வரை வாடகை மற்றும் மின்சார கட்டணத்திற்கு அவசியம் செலவிடவேண்டும்.
அன்றாட போக்குவரத்து, குழந்தைகளின் கல்விசெலவு, தாயாருக்கு மருத்துவச் செலவு, மளிகை பொருட்கள் என தவிர்க்க முடியாத செலவுகளில் எதை குறைக்க முடியும் என தீவிரமாக ஆலோசிப்பதாக சொல்கிறார்கள் சுரேஷ் - உதயரேகா தம்பதியினர்.
கடந்த ஆண்டு வரை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் உதயரேகா. இரண்டு குழந்தைகளுக்கும் நேரம் செலவிடவேண்டும் மற்றும் உடல் நலனில் கவனம் தேவை என்பதால், வேலையில் இருந்து விலகிவிட்டார்.

''நடுத்தர குடும்பத்தில் இரண்டு பேரும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்கமுடியும். குடும்பவேலைகள் கருதி, ஆசிரியர் வேலையில் இருந்து நின்றுவிட்டேன். ஆனால், என் கணவருக்கு வேலைநாட்கள் குறைந்துவிட்டதால், அவருக்கு கிடைக்கும் இன்சென்டிவ் தொகை ரூ.5,000 வரை குறைந்துவிட்டது. இந்த ஆண்டு தீபாவளியை சிக்கனமாக கொண்டாடவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். பட்டாசு கட்டாயம் வாங்கவேண்டுமா என யோசிக்கிறேன்,''என்கிறார் உதயரேகா.
''முடிந்தவரை சிக்கனமாக இந்த ஆண்டு தீபாவளி இருக்கவேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு என்ன விலை கொடுக்கமுடியும்? ஆனால் தினசரி செலவுகளுக்கு போகத்தான் பண்டிகை செலவு செய்யமுடியும் என முயற்சிப்பேன். அடுத்தஆண்டு சிறப்பாக கொண்டாடலாம். இந்த ஆண்டு சிக்கனமான தீபாவளி,''என்கிறார் உதய ரேகா.
2008ல் இதுபோல பொருளாதார சறுக்கல் ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்கள் நெருக்கடியை சந்தித்தாக கூறுகிறார் சுரேஷ்.
''வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்தான் அவருக்கு வேலை இருக்கும் என்பதால் எல்லா செலவுகளையும் குறைத்துக்கொண்டோம். எங்களுக்கு திருமணமான இரண்டாவது ஆண்டு அது. நானும் வேலையில் இருந்தேன். அப்போது அத்தியாவசய பொருட்களின் விலை சமாளிக்ககூடிய அளவில் இருந்தது. இப்போது வாடகை, குடிநீர், பால், மின்சாரம் போன்ற செலவுகளுக்கு எடுத்துவைக்க வேண்டிய பணமே பாதி பட்ஜெட் ஆகிவிடுகிறது,'' என வருத்தத்தோடு பேசுகிறார் அவர்.

பட மூலாதாரம், ashokleyland.com
பத்தாண்டுகளுக்கு முன்னர் நெருக்கடி நிலையை சமாளிக்க பகுதி நேர வேலைக்கு சென்றதாகவும், தற்போது தனது உடல்நலன் ஒத்துழைக்காது என்பதால் விடுமுறையை வீட்டில் கழிப்பதாக கூறுகிறார் சுரேஷ்.
2007ல் வாங்கிய சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடனை கட்ட ஆறு ஆண்டுகள் ஆனது. வேலை நாட்கள் குறைந்ததால், கடனை கட்ட பல மாதங்கள் ஆகிவிட்டது என்றும் இந்த முறை எந்த கடனும் வாங்கக் கூடாது என்றும் முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார் சுரேஷ்.
''குடும்பத்துடன் வெளியில் செல்லும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை குறைத்துவிட்டோம். பெட்ரோல் செலவைக் குறைக்க பேருந்தில் செல்வது, மளிகை பொருட்களில் எதையாவது குறைக்க முடியுமா, அசைவ உணவை குறைக்கலாமா என ஒவ்வொரு நாளும் கணக்கு பார்க்கிறோம்,'' என்கிறார் சுரேஷ்.
சுரேஷ் நிறுவனத்தில் வேலைநாட்கள் அறிவிப்பு வருவதை பொருத்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, வேலைக்கு செல்லலாமா என முடிவு எடுக்கவுள்ளார் உதயரேகா.
''ஆண்டு வருமானத்தில் வரி செலுத்துகிறோம். ஆனால் வரி செலுத்தியது போக மீதமுள்ள பணத்தில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்துகிறோம். நுகர்வோர் பொருட்களுக்கு செலவிடும் பணத்தில் சுமார் 20 சதவீதம் வரி செலுத்தும்நிலையில் இருக்கிறோம். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்,''என்கிறார் சுரேஷ்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நிரந்தர ஊழியரான சுரேஷின் நிலையைவிட ஒப்பந்த ஊழியராக இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் நிலையை அறிந்துகொள்ள பலரிடம் பேசியபோது, தங்களது வேலைக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் பேசமறுத்துவிட்டனர். மௌனமான தொழிலாளர்களின் குரலாக நம்மிடம் பேசியவர் முரளி.
கடந்த மாதம்வரை பொருளாதார சரிவு பற்றிய செய்தியை மற்றொரு செய்தியாக கடந்துபோனவர் சென்னை அசோக் லேலேண்ட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த முரளி.
அந்த சரிவின் காரணத்தால் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், தனது மனைவி மற்றும் தனது பத்து மாத மகனையும் தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டிய நிலை வந்தபோதுதான் இந்திய பொருளாதாரம் தன்னை, தன் குடும்பத்தை நேரடியாக பாதித்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார்.
''மனைவி சசிபிரியாவை குழந்தையுடன் புதுச்சேரிக்கு அனுப்பிவிட்டேன். மாதத்தில் பாதி நாட்கள்தான் வேலை இருக்கும். சம்பளம் முழுமையாக கிடைக்காது. அவரது அம்மா வீட்டில் இருந்தால் எனக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் ஏதாவது மிச்சமானால்தான் அனுப்பமுடியும். அன்றாட செலவுக்கு பணம் இப்போது தருவது கஷ்டம்,'' என்கிறார் முரளி(34).

பட மூலாதாரம், ashokleyland.com
18 ஆண்டுகளாக அசோக் லேலேண்ட் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் முரளி, பொருளாதார சரிவு சீராகும் காலத்திற்காக காத்திருக்கிறார். நம்மிடம் பேசும்போது, தொழிலாளர் சங்க கூட்டத்திற்காக தயாராகிக்கொண்டிருந்தார்.
மாத சம்பளமாக ரூ.18,000 பெற்ற முரளிக்கு இந்த மாதம் என்ன சம்பளம் கிடைக்கும் என்பது யோசனையாக உள்ளது. ''எங்களுக்கு கிடைக்கும் அலவன்ஸ் தொகை கிடையாது. வேலைநாட்கள் குறைவு என்பதால், சம்பளம் குறையும். நிறுவனத்தில் உதவுகிறார்கள். ஆனால் பழையபடி வேலை இருந்தால்தான் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு வாழமுடியும்,''என்கிறார்.
''எங்கள் நிறுவனத்தில் இரண்டு வகையான ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். எங்கள் உணவகத்தில் 230 பேர் வேலைசெய்கிறோம். எங்களுக்கு சங்கம் உள்ளது. தூய்மை பணி உள்ளிட்ட இதரவேலையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் கிடையாது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்ச ஊதியத்தை பெற்றுள்ளோம். ஆனால் சங்கம் இல்லாத ஊழியர்களின் நிலை மோசம்,''என்கிறார் முரளி.
''இந்த மாதத்தில் பாதி நாட்கள் வேலை இல்லை. நான் ஒரு நபராக சென்னையில் செலவுகளை பார்த்துக்கொள்ள ஊதியம் கிடைக்கும் என நம்புகிறேன். அவ்வப்போது புதுச்சேரிக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவர முடியும். அடுத்த வாரம் அவர்களை சந்திக்கச் செல்வேன். குடும்பத்தைப் பிரிந்து, வேலையில்லாமல் இந்த நகரத்தில் வசிக்கும் என்னை போன்ற தொழிலாளர்கள் வெறுமையாக உணர்கிறோம். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு எங்களை குடும்பத்திடம் இருந்து பிரிந்துவாழும் நிலைக்கு தள்ளிவிட்டது,''என வருத்தத்துடன் பேசுகிறார் முரளி.

பட மூலாதாரம், ashokleyland.com
அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 4,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்று கூறிய முரளி, ''இந்தியா முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன என கேள்விப்பட்டேன். தொழிலாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்களை எங்களைப் போன்றவர்களுக்கு குறைந்தவிலையில் கொடுக்க அரசு ஏதாவது திட்டம் கொண்டுவரவேண்டும்,''என்கிறார்.
அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம். நாராயணனிடம் பேசியபோது தொழிலாளர்கள் பழையபடி முழுநேர வேலையை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்தார்.
''எண்ணுர் ஆலையில் 1,800 நிரந்தர ஊழியர்கள் வேலைசெய்கிறோம். தேவைக்கு ஏற்றபடி அவ்வப்போது ஒப்பந்த ஊழியர்களின் பங்கேற்பு இருக்கும். சுமார் 4,000 பேர் வரை ஒப்பந்த தொழிலாளர்கள் இருப்பார்கள். 16 நாட்கள் விடுமுறை என்றாலும் நிரந்தர ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்கப்படுகிறது. வேலைக்கு வந்தால் தரப்படும் ஊக்கத்தொகை மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. நிர்வாகத்தோடு எங்கள் சங்கத்திற்கு நல்ல உறவு இருப்பதால், விரைவில் இந்த விடுமுறை முடிவுக்கு வரும் என நம்புகிறோம்,'' என்றார்.
செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை அளித்தது போல அக்டோபர் மாதம் வேலைநாட்கள் குறைக்கப்படுமா என தெளிவாக தெரியவில்லை என்றும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதால் ஊழியர்களின் பிரச்சனைக்கு நிறுவனம் முழுகவனம் அளிப்பதாக தெரிவித்தார்.
ஊழியர் சங்கம் சாராத ஒப்பந்த ஊழியர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் அலை முழு செயல்பாட்டுக்கு வரும் என நம்புவதாக கூறுகிறார்கள். பெயர் சொல்லவிரும்பாத ஒப்பந்த ஊழியர் ஒருவர், ''10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலை செய்துவிட்டேன். எனக்கு பிற தொழிலோ, கடைகளில் வேறு வேலையோ செய்ய தெரியாது. என்னை போன்ற ஒப்பந்த ஊழியர்கள் பலர் சம்பளம் இல்லாததால், தினசரி வாழக்கையை நடத்த சிரமப்படுகிறோம். இரண்டு மாதத்தில் இந்த விடுமுறை பிரச்சனை முடிவுக்கு வரும் என தகவல் வருகிறது. ஆனால் எங்களால் எதையும் உறுதியாக நம்பமுடியவில்லை,'' என்கிறார் அந்த தொழிலாளி.
தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனை மற்றும் ஆலை எப்போது முழுவீச்சில் செயல்படும் என்பது தொடர்பாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேச முயன்றபோதிலும் பதில் கிடைக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












