சந்திரயான் 2: 'விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் குறைவு'

விக்ரம் லேண்டர்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை வழங்குகிறோம்.

தி இந்து: 'விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் குறைவு'

சந்திரயான் 2 விண்கலத்தின் தரையிறங்கு கலன் (லேண்டர்) விக்ரம் மீண்டும் செய்லபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என வல்லுநர்கள் தெரிவிப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் விழுந்தபோது உண்டான சேதங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு இருக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோமீட்டர் மேல் இருந்தபோது விக்ரம் உடனான தொடர்பாடல் துண்டித்ததாக இஸ்ரோ அறிவித்தது.

எனினும், ஞாயிறு மதியம் விக்ரம் இருக்கும் இடத்தை, சுற்றுவட்டக் கலன் (ஆர்பிட்டர்) கண்டறிந்து விட்டதாகவும், விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த தாங்கள் முயற்சிப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.

நேரம் ஆக ஆக விக்ரம் உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே தெரிகிறது என்று சந்திரயான 2 பணித்திட்டத்தில் பணியாற்றும் பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.

Presentational grey line

தினமணி: இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள் தயார்

ஸ்விஸ் வங்கி

பட மூலாதாரம், FABRICE COFFRINI

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோரின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் தொகுதி விவரங்களை இந்த மாதத்தில் ஸ்விஸ் அரசு இந்தியாவிடம் அளிக்கவுள்ளது என தினமணி நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் தொகுதி விவரங்களை பகிர்வது தொடர்பாக விவாதிப்பதற்கு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குழு ஒன்று கடந்த மாதம் இந்தியா வந்தது. அந்தக் குழு, தில்லியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது. அப்போது, இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் விவரங்களை செப்டம்பர் முதல் பகிர்ந்து கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

Presentational grey line

தினமலர்: டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்

டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்

பட மூலாதாரம், Hindustan Times

போக்குவரத்து விதிகளை மீறிய டிரக் டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்ட திருத்தம் அமலான பின், அதிக அபராதம் விதிக்கப்பட்ட நபர் இவர்தான் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானதை தொடர்ந்து, நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று, நாகாலாந்தை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான டிரக் ஒன்று, சத்தீஸ்கரின் தல்சார் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரக்கை, அசோக் ஜாதவ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிரக், ஒடிசாவின் சம்பல்பூர் வந்த போது போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அசோக் ஜாதவ் டிரக்கை ஓட்டாமல், வேறு நபர் டிரக்கை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து, தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க செய்ததற்காக 5 ஆயிரம் ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், அதிக பாரம் ஏற்றியதற்காக 56 ஆயிரம் ரூபாயும், பொருட்களை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி சென்றதற்காக 20 ஆயிரம் ரூபாயும், பொது விதிமீறலுக்காக ரூ.500 என அசோக் ஜாதவிற்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அசோக் ஜாதவ், அதிகாரிகளுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக மன்றாடி அபராதத்தில் 70 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலான பின்னர், அதிக அபராத தொகை செலுத்திய நபர் என்ற பெயர் அசோக் ஜாதவிற்கு கிடைத்துள்ளது. அவர் அபராதம் கட்டியதற்கான ரசீது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: