தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்

சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: செடிகளாக வளரும் விநாயகர் சிலைகள்: தமிழக அரசு அறிமுகம்

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம்.

விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

சிலைகள் அனைத்தும் சேப்பாக்கம், செம்மொழிப் பூங்கா மற்றும் மாதவரம் தோட்டக்கலைத் துறை பூங்காவில் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மண் பானை ஒன்றில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் ரூ.200-க்கு விற்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "அபராதம் பன்மடங்கு உயர்கிறது"

மோட்டார் வாகனச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலாவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000, அதிவிரைவாகவும், பொறுப்பற்ற வகையிலும் வாகனம் ஒட்டினால் ரூ. 5,000, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000 என அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000, வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போது அலைபேசி பயன்படுத்தினால் ரூ. 5000, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்பவர்களுக்கு ரூ. 20,000 மேலும் ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ. 2,000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பொருந்தும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: