சிவன் பேட்டி: 'சந்திரயான் 2இன் லேண்டருடன் தொடர்புகொள்ள இஸ்ரோ 14 நாட்கள் முயலும்'

பட மூலாதாரம், MANJUNATH KIRAN
"சந்திரயான் 2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. நாம் வெற்றிக்கு மிக அருகில் சென்றிருக்கிறோம்," என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் இருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமைக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சந்திரயான் 2 திட்டம் முழுவதுமாக செயல்படுத்த முடியாதது குறித்தும், அடுத்து வைத்திருக்கும் திட்டங்கள் குறித்தும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியுள்ளார்.
அடுத்த 14 நாட்களில் (நிலவின் இது ஒரு நாள்) விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றும் நேற்று, சனிக்கிழமை, அவர் தெரிவித்துள்ளார்.


சிவன் என்ன கூறினார்?
சந்திரயான் 2 விண்கலன் நிலவின் மேற்பிரப்பில் இறங்குவதற்கு முன்பு நான்கு கட்டங்கள் உள்ளன. அதாவது வேகமாக சென்று படிப்படியாக வேகத்தை கட்டுப்படுத்துவது என்பது நான்கு கட்டங்களாக நடைபெறும்.
லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தை கடக்க வேண்டும். இதற்குள் இந்த நான்கு கட்டங்களும் முடிவடைந்து மெதுவாக தரையிறங்குவதே திட்டம்.
முதல் மூன்று கட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தன. ஆனால், கடைசி கட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போதுதான் லேண்டரிடம் இருந்து வந்த தகவல் துண்டிக்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI
அடுத்து என்ன?
சந்திரயான் 2 பின்னடைவை சந்தித்தை அடுத்து, பிரதமர் நரேந்திர மோதி பேசியது எங்களுக்கு ஊக்கத்தை தந்துள்ளது. அப்போது அவர் கூறிய ஒன்று என் கவனத்தை பெற்றது.
''அறிவியல் என்பது சோதனை. அதில் முடிவுகளை எதிர்பார்க்கக் கூடாது. சோதனைதான் முடிவுகளை தரும்,'' என்று கூறினார். அவரின் பேச்சு எங்கள் அனைவருக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.
அறிவியலும் தொழில்நுட்பமும்
சந்திரயான் 2 திட்டம் இரு விஷயங்களை உள்ளடக்கியது. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்ப செயல்பாடு. ஆர்ப்பிடர் என்பது அறிவியல் சார்ந்தது. லேண்டரின் தரையிறக்கம் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் தொழில்நுட்ப செயல்பாட்டை சார்ந்தது.
இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர்களைவிட இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வித்தியாசமானது. இது நமக்கு அதிகப்படியான தகவல்களை அளிக்கும்.


தொழில்நுட்ப செயல்பாட்டில்கூட, மொத்தம் 30 கிலோ மீட்டரில் 2 கிலோ மீட்டர் தூரம் முன்புதான் சிக்கல் ஏற்பட்டது. அதுவரை எங்களால் போக முடிந்துள்ளது. கடைசி கட்டத்தைதான் ஒழுங்காக செயல்படுத்த முடியவில்லை.
அப்போதுதான் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலும் 90-95 சதவீதம் தொழில்நுட்ப செயல்பாட்டை நாம் செய்துவிட்டோம். சந்திரயான் 2 திட்டம் இறுதி வெற்றி நிலைக்கு மிக அருகில் சென்றுள்ளது.
அது புதிய அறிவியல் எல்லைகளுக்கு நம்மை இட்டுச்செல்லும். தற்போது ஆர்பிட்டர் நல்ல நிலையில், சிறப்பாக செயல்படுகிறது. சந்திரயான் 2 திட்டத்தில் அறிவியல் சார்ந்து நமக்கு என்ன தேவையோ அது பூர்த்தியாகிவிட்டது.
ஆர்பிட்டர் தரும் தகவல்களை இந்த உலகம் எப்படி பார்க்கும்?

நிலவை சுற்றி போலார் சுற்றுவட்ட பாதையில், ஆர்பிட்டர் சென்று கொண்டிருக்கிறது. அது தரும் தரவுகளை வைத்து பல ஆராய்ச்சிகளை செய்ய முடியும். இத்திட்டத்தினால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த தரவுகள் கிடைக்கப்பெறும்.
மேலும் புகைப்படங்கள் எடுக்கக்கூடிய உள்கட்டமைப்பும் இதில் இருக்கிறது என்பதால், அந்த புகைப்படங்களும் உலக விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும்.
ஆர்பிட்டரின் ஆயுட்காலம்
நாங்கள் இத்திட்டத்தை செயல்படுத்திய தொடக்கத்தில் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டாக இருந்தது. தற்போது ஆர்பிட்டரில் அதிக எரிபொருள் இருப்பதால், தற்போது ஏழறை ஆண்டுகள் அதன் பணி தொடரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது தரும் புகைப்படங்களை வைத்து, சந்திர மண்டலத்தை குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
இந்த பின்னடைவால் அடுத்துள்ள திட்டங்கள் பாதிக்கப்படுமா?
இதனால், நாங்கள் வைத்திருக்கும் எந்த திட்டமும் பாதிக்கப்படாது. ரிசாட் 2BR மிஷன் திட்டமிட்டது போல் செயல்படுத்தப்படும். ககன்யான் திட்டத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறோம்.
இவ்வாறு சிவன் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இஸ்ரோ அறிக்கை
இந்நிலையில் சந்திராயான் 2 திட்டம் தொடர்பாக இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சந்திரயான் 2 திட்டம் மிகவும் நுட்பமான பணித்திட்டம். இதற்கு முன் இஸ்ரோ முன்னெடுத்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இது ஒரு பெரிய படிக்கல். ஜூலை 22, 2019ல் சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து இந்தியா மட்டுமல்ல இந்த உலகமே ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்புகளுடனும், இதன் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வந்தது. இது நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மொத்த நிலவையும் ஆராய்வதற்கான நோக்கம் கொண்ட வித்தியாசமான திட்டம் இது.
சரியான சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் ஆர்ப்பிட்டர், நிலவில் ஏற்படும் மாற்றங்கள், துருவங்களில் நீர் மற்றும் கனிமங்கள் எங்கு இருக்கிறது என்பது குறித்து நாம் அதிகம் புரிந்து கொள்ள உதவும். இத்திட்டம் 90-95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது," என்று தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












