அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
தாலிபன் அமைப்பினர் உடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தாலிபன் தலைவர்களை சந்திக்க இருந்தார் டிரம்ப். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்ற பிறகு, திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார்.
வியாழனன்று நடந்த அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.

பட மூலாதாரம், AFP / getty images
தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக 2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.
2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 32,000க்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?

வறுமையில் சிக்கி தவிக்கின்ற, அறிவியலை கற்றுக் கொள்ளாத பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய விண்வெளி திட்டம் பிரமிக்கவைக்கும் கதை போல தோன்றலாம்.
ராக்கெட், செயற்கைக்கோள், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் போன்ற சொற்கள் இவர்களுக்கு அந்நியமானவை.
இதற்கெல்லாம் நாம் விடை தேடும் முன்னர், பிரிட்டன் காலனியாதிக்கதில் தனது செல்வங்களை எல்லாம் இழந்துவிட்ட நாடு ஒன்று, விண்வெளி அறிவியலில் செலவு செய்ய முடிவு செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
விரிவாகப் படிக்க: சந்திரயான் 2: விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?

மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி?

பட மூலாதாரம், TWITTER /NARENDRA MODI
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்துப் பேசியபோது காஷ்மீர் விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின்போது மத போதகர் ஜாகிர் நாயக் குறித்து பிரதமர் மோதி குறிப்பாக எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர்.

விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்?

சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
விரிவாகப் படிக்க: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்?’ - மயில்சாமி அண்ணாதுரை பதில்

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமையே நிலவி வருகிறது.
விரிவாகப் படிக்க: இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












