தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு - தென்னாப்பிரிக்காவை வீழ்த்துமா?

பட மூலாதாரம், Getty Images
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
இந்து தமிழ்: "இந்திய அணி அறிவிப்பு"
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஹர்திக் பாண்டியா அணிக்குள் திரும்பியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை, ரிஷப் பந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி இடம்பெறவில்லை, ஜஸ்பிரித் பும்ரா பெயரும் இடம்பெறவில்லை.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குருணால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமெட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "விரைவில் தனியார் மயம் ஆகிறது ஏர் இந்தியா" - மத்திய அரசு தீவிரம்

பட மூலாதாரம், Getty Images
ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வலுவான தனியார் துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும்" என்று குறிப்பிட்டார். ஏர் இந்தியாவை நாங்கள் தனியார் மயமாக்கினாலும், அது இந்தியர்களின் கைகளில்தான் இருக்கும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: வனத்துறை அமைச்சர் வெளிநாடு பயணம்

பட மூலாதாரம், Facebook
சரணாலயங்கள் மேம்பாடு, வன உயிரினப் பாதுகாப்பு ஆகியவற்றின் நவீன திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உயரதிகாரிகள் குழு இந்தோனேசியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழக வனத் துறையின்கீழ் செயல்படும் சரணாலயங்கள், பூங்காக்கள், வன உயிரின பாதுகாப்பு மற்றும் வண்டலூர் பூங்காவில் இரவு நேர சுற்றுலா ஏற்படுத்துவது மற்றும் தீத் தடுப்பு முறைகளில் உள்ள நவீன திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வனத்துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தோனேசியாவுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, இக்குழுவினர் சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் உள்ள சரணாலயங்கள் மற்றும் பூங்காக்களைப் பார்வையிட உள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












