இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? -பிபிசி களஆய்வு

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை பிரிக்கும் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அங்கு நிலவும் சூழலை காண பாகிஸ்தான் ராணுவம் அழைத்து சென்ற பத்திரிகையாளர்களில் பிபிசியின் சஹர் பலோச்சும் ஒருவர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கொடு அருகே பாகிஸ்தான் நிர்வாகத்தின் கட்டுபாட்டில் உள்ள சகோத்தி பகுதி மக்களிடம் உரையாடிய சஹர் பலோச் இந்த கட்டுரையை பதிவு செய்துள்ளார்.
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சகோத்தி பகுதி. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது நடந்துவரும் மோதல் மற்றும் பதற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக பல சிரமங்களை சந்தித்து வந்தாலும், இப்பகுதியில் பணியில் உள்ள அதிக அளவிலான ராணுவத்தினரால் தங்களின் கவலைகளைக்கூட இவர்களால் மெதுவான குரலில்தான் கூறமுடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவர்கள் வெளிப்படையாக கூறுவது, தங்கள் நாட்டுக்குக்காக இறக்கவும் தாங்கள் தயார் என்பதும், தற்போது தாங்கள் அமைதியான சூழலில் வாழ்ந்து வருவதாகவும்தான்.
75 வயதான நூர் முகமது, சகோத்தி பகுதியில் கடந்த 36 ஆண்டுகளாக ஒரு சிறிய அங்காடியை நடத்தி வருகிறார். தற்போது அவருடன் அவரின் மகன்கள் மற்றும் மருமகன்கள் கடை நிர்வாகத்தில் உதவுகின்றனர்.
தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டபோது கவலை தோய்ந்த முகத்துடன் பேசிய நூர் முகமது, ''ஒரு காலத்தில் ராவல்பிண்டியில் வாழ்ந்துவந்த நான், அங்கு அதிக செலவாகிறது என்பதால் இந்த இடத்துக்கு வந்தேன். நான் வந்தபோது இங்கிருந்த நிலை வேறு, தற்போது முற்றிலும் வேறு'' என்று கூறினார்.
இந்த நகரில் 5 கிலோமீட்டர் சுற்றளவில்தான் பாதுகாப்பாக வாழமுடியும் என்றும், அதற்கு அதிக அளவில் செலவாகும் என்பதும் ஒரு முக்கிய விஷயம் என்று நூர் முகமது தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''அதேவேளையில் எட்டு கிலோமீட்டருக்கு அப்பால் மலைப்பகுதியின் அருகே வாழ்வது இன்னும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அங்குள்ள மக்கள் எங்களை கண்டவுடன் அதிக அளவு வீட்டு வாடகையை கூறி எங்களை திகைக்க வைக்கின்றனர்'' என்று வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார்.
இவரது கடைக்கு சற்று அருகேயுள்ள இடத்தில் வசிக்கும் முகமது அமீனுக்கு 30களில் வயது இருக்கலாம். இங்குள்ள கடினமான சூழலை கருத்தில் கொண்டாலும், அவர் இப்பகுதியை விட்டு வெளியேற விரும்பவில்லை.
''எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பகுதி இது. இங்கிருந்து எங்களால் வெளியேற முடியாது'' என்றார்.
''அதேவேளையில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்துதான் ஆகவேண்டும்'' என்று அமீன் மேலும் கூறினார்.
சகோத்திக்கு வருகை தரும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் வெளியேற இந்தியாவே காரணம் என்று மீண்டும், மீண்டும் அழுத்தமாக கூறிவருகின்றனர்.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA
அதேவேளையில் ஏன் பாகிஸ்தான் தங்களின் மக்களை எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு மிக அருகில் இருந்து இடம்மாற்ற முயற்சிக்கவில்லை என்பதற்கு அவர்கள் விளக்கமாக பதில்கூறவில்லை.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை போல பாகிஸ்தானும் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, இல்லை என்பது பாகிஸ்தான் தரப்பு பதிலாக உள்ளது.
''இங்கிருந்து மக்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம். எங்களால் அவர்களை பாதுகாக்க முடிகிற வரையில் நாங்கள் அவர்களை இங்கு வாழ அனுமதிப்போம். தங்கள் நாட்டை மிகவும் நேசிக்கும் எங்கள் மக்கள் வேறு இடத்துக்கு செல்ல விரும்பமாட்டர்'' என்று ஒர் அதிகாரி கூறினார்.
இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழ்வது எந்த வகையிலும் எளிதானது அல்ல. 2015 முதல் எல்லை தாண்டிய மோதல்களால் ஏறக்குறைய 70 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மட்டும் 27 பேர் இறந்துள்ளனர்.

பட மூலாதாரம், ABID BHAT
இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழ்வது எந்த வகையிலும் எளிதானது அல்ல. 2015 முதல் எல்லை தாண்டிய மோதல்களால் ஏறக்குறைய 70 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மட்டும் 27 பேர் இறந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஒரு 3 வயது சிறுமியும், 45 வயது நபர் ஒருவரும் துப்பாக்கி சூட்டில் இறந்தனர்.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம், இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இதுவரை பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் இருதரப்பு பிரச்சனை என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தியாவுடன் போர் அபாயம் இருப்பது குறித்து சகோத்தியில் கேட்டால் மக்களிடம் வெவ்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன.

பட மூலாதாரம், ABID BHAT
கடைவீதியில் ஊடகத்தினரை கண்ட ஒரு முதியவர் நாட்டுக்காக தான் சாகவும் தயார் என்று கூறினார். அவர் அருகே இருந்த ஒர் இளைஞர் எதிர்காலம் குறித்த கவலையை வெளிப்படுத்தினார்.
அதே வேளையில் இது குறித்து பேசிய நூர் முகமது கூறுகையில், ''எல்லைக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு நான் ஏன் கெடுதல் நினைக்க வேண்டும்? அவர்களும் எங்களை போலத்தானே!'' என்றார்.
''வயதான நாங்கள் இறந்தால் பெரிய நட்டமில்லை. ஆனால் போரினால் இளம் பருவத்தினர் சாகக்கூடாது. இறந்த சடலங்களை இனியும் எங்கள் காண முடியாது'' என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












