1.76 லட்சம் கோடி: இந்திய ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுரஞ்சனா திவாரி
- பதவி, பிபிசி மானிட்டரிங்
இந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் அரசுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்பு இப்படி நடந்துள்ளதா?
ஆண்டுதோறும் அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியளிக்கிறது. முதலீடுகள், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு வழக்கமாக ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதி இருக்கும்.
தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, கூடுதல் நிதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும். ஆனால் கடந்த ஆண்டு அரசுக்கு அளித்ததைவிட, இப்போது இரு மடங்கிற்கும் அதிகமான தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு உபரி நிதி ஆர்.பி.ஐ.க்கு எங்கிருந்து வந்தது?
இந்த ஆண்டு அதிகமான உபரி நிதி எங்கிருந்து வந்தது என்ற தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. சில நேரங்களில், பணப் புழக்கத்தை மேம்படுத்துவதற்காக சந்தையில் ரிசர்வ் வங்கி தலையீடு செய்யும்.
இந்த ஆண்டு பெருமளவில் அரசின் பங்கு பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கியது. அவற்றின் மீதான வட்டி மூலமாக அதிக வருவாய் கிடைத்திருக்கலாம்.
அது ஏன் பிரச்சனையாகக் கருதப் படுகிறது?
தள்ளாடும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோதியின் அரசுக்கு உதவுவதாக இந்த நிதி இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஐந்தாண்டுகளில் மிக மோசமான அளவுக்குக் குறைந்துள்ளது. நுகர்வோர் செலவிடுவதும் குறைந்துள்ளது.
பல்வேறு தொழில் துறைகளையும் சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதாரத்துக்கு உந்துதலை ஏற்படுத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அந்த அறிவிப்புகள் அதிக பயன் தராது என்று சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
``ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிப்பது வழக்கமானதுதான். இது அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்றும் அல்ல. இந்த ஆண்டு உபரி அதிகமாக இருப்பதால், மொத்தத் தொகை பெரிதாகத் தோன்றுகிறது,'' என்று ஐ.டி.எப்.சி. ஏ.எம்.சி.யில் நிரந்தர வருவாய்ப் பிரிவுத் தலைவராக இருக்கும் சுயஷே சவுத்ரி பிபிசியிடம் கூறினார்.
இந்த நடவடிக்கை பங்குச் சந்தைகளுக்கு நல்ல செய்தியை அளிப்பதாக உள்ளது. திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஆரம்பகட்ட வர்த்தகத்திலும் அது நீடித்தது. இந்திய பங்குப் பங்குப்பத்திரங்களின் மதிப்பும் கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்ச அளவை எட்டின. தேவையான சமயத்தில் செலவு செய்வதற்கு அரசிடம் போதிய நிதி உள்ளது என்ற உத்தரவாதம் பங்குச் சந்தைக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?
இந்த நிதியை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதை அரசு இன்னும் வெளியில் கூறவில்லை. நெருக்கடியில் உள்ள தொழில் துறைக்காக வரிகளைக் குறைக்க, கடன்களைக் குறைக்க மற்றும் வீட்டுவசதித் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி அளிக்க இது பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
''அரசின் கடன்கள் தொடர்பான விஷயங்களில் இந்த நிதியை அரசு பயன்படுத்த வேண்டும். வளரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் அளவு அதிகமாக உள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கிய செயல்பாடுகள் போதாது என்பதால், கட்டமைப்பு வசதிகளுக்கு இதில் ஒரு பகுதி செலவிடப்பட வேண்டும்,'' என்று தேசிய அரசு நிதி மற்றும் கோட்பாடு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ராதிகா பாண்டே கூறினார்.
விமர்சகர்கள் என்ன கூறுகிறார்கள்?
காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை சாடியுள்ளது. ``தாங்களாக உருவாக்கிய பொருளாதாரப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்று பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்த யோசனையும் இல்லை. ரிசர்வ் வங்கி பணத்தைத் திருடுவது எந்தப் பயனையும் தராது-
மருந்தகத்தில் இருந்து பிளாஸ்திரியை திருடி துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்தின் மீது ஒட்டுவதைப் போல இது உள்ளது'' என்று கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கியிடம் மிக அதிகமான பணம் உள்ளது என்று நீண்ட காலமாகவே அரசு கூறி வந்தது. ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக தொகையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் புதுடெல்லியில் இருந்து அழுத்தம் தரப்பட்ட காரணத்தால் தான் 2018 டிசம்பரில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகினார் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து, தான் விரும்பியதை அரசு சாதித்துக் கொண்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இதுவே ஒட்டுமொத்த தீர்வைத் தந்துவிடாது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
``ஜிடிபி வளர்ச்சிக்கு கூடுதல் மூலதனம் கிடைப்பதில் இது எந்தவிதமான பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. உண்மையில், தனது செலவினங்களை அரசு கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும். கூடுதலாகக் கிடைத்தபணம், தடைபட்டுள்ள சில பட்டுவாடாக்களை உரிய முறையில் செய்வதற்கு உதவியாக இருக்கக் கூடும். இது பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும், அதனால் சில செயல்திறன்மிக்க ஆதாயங்கள் கிடைக்கும்'' என்று யெஸ் பாங்க் முதன்மை பொருளாதார நிபுணர் சுபடா ராவ் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












