கர்நாடக முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார் எடியூரப்பா

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடியூரப்பா

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடியூரப்பாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார் அம்மாநில ஆளுநர். இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்கிறார் எடியூரப்பா.

முன்னதாக இன்று காலை, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார் எடியூரப்பா.

ஆளுநரை சந்திக்கச் செல்லும் முன் ஊடகங்களிடம் பேசிய அவர் பதவியேற்பு விழாவை இன்றே நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன் மூலம் கர்நாடகா அரசியலில் நீண்டநாட்களாக நிலவிய குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி தொடங்கியது.

குமாரசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குமாரசாமி

பாரதிய ஜனதா கட்சி இதன் பின்னணியில் இருக்கிறது, ஆப்ரேஷன் கமலா என்ற பேரில் அவர்கள் ஆட்சியை கலைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்கள் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் இதனை மறுத்திருந்தார். அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும், வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போடுவதும் தங்கள் பதவி விலகலுக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஜூலை 22ஆம் தேதி மாலை 7 மணியளவில் கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்களிப்பில் தோல்வியடைந்ததால் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நான்காவது முறையாக கர்நாடகத்தின் முதலமைச்சராகிறார் எடியூரப்பா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :