மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு?'
ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னை ஐகோர்ட்டில், சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட 4 சொத்துகளை முடக்கிவைத்துள்ளதாக வருமான வரித்துறையும் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபாவும், தீபக்கும் தான் வாரிசுகள். எனவே, வருமான வரி பாக்கியை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர். எனவே, இவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்க வேண்டும்' என்று கூறினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை மட்டும் நியமிக்க வேண்டும். ஏற்கனவே இந்த சொத்துகள் எல்லாம் சொத்தாட்சியரின் பொறுப்பில் உள்ளது. அதனால் இவர்கள் இருவரும் வாரிசு உரிமையை கோரமுடியாது என்று மனுதாரரின் வக்கீல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீபாவும், தீபக்கும் வாரிசுகள் இல்லை என்றால், ஜெயலலிதாவின் சொத்துகளை எல்லாம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் மனுதாரரின் நோக்கமா? என்று கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகன வக்கீல், 'ஜெயலலிதா மீது தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை' என்று கூறினார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த வீடு மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், 'ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிக்காட்டி மதிப்பு எவ்வுளவு? என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரித்துறை தாக்கல் செய்யவேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக தமிழக அரசும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

தினமணி: 'அமித் ஷாவுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு'
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தெரிவிக்கப்பட்டாலும், இச்சந்திப்பின் போது தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி வந்தார். தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், திங்கள்கிழமை நண்பகல் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார்.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என துணை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவை நிதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார்.


இந்து தமிழ் திசை : 'ஒகேனக்கலில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு'
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரித்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

பட மூலாதாரம், M Niyas Ahmed
மழை தொடர்ந்த நிலையில் அணைகள் இரண்டும் நிரம்பும் நிலையை எட்டின. எனவே, அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்விரு அணைகளிலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 4 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று தமிழக எல்லையான ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேர்ந்தது.
இதற்கிடையில், 2 நாட்களுக்கு முன்னர் பிலிகுண்டுலு சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் சற்றே நீர்வரத்து அதிகரித்து பின்னர் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே காவிரியாற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. காலை 10 மணியளவில் மத்திய நீர் ஆணைய அலுவலகம் சார்பில் பிலிகுண்டுலு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்படி விநாடிக்கு 2,000 கன அடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. அதன் பின்னரும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை விநாடிக்கு 4,500 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கர்நாடகா மாநில அணைகளில் திறக்கப் படும் நீரின் அளவு அதிகரிக் கப்பட்டாலோ, ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தாலோ ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து மேலும் உயரும்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மக்களவையில் நிறைவேறிய தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா'
மக்களவையில் அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இல் பிரிவு 13 மற்றும் 16 இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசல் சட்டத்தில் பிரிவு 13 மத்திய தகவல் ஆணையர் மறும் தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ). இந்த நியமனத்தில் இது போன்ற கால நிர்ணயத்தை மத்திய அரசு பரிந்துரைக்கலாம் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












