இஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள்- பதற்றத்தில் வடக்கு கரை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனியர்கள் வீடுகளை இடித்து தகர்த்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கரை பகுதியை பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே இந்த வீடுகள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதால் இடிக்கிறோம் என்று கூறுகிறது இஸ்ரேல்.

பட மூலாதாரம், Getty Images
700 இஸ்ரேலிய போலீஸ் மற்றும் 200 ராணுவத்தினர் இந்தப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். பாலத்தீனிய நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்தே தாங்கள் வீடுகள் கட்டியதாக கூறுகிறார்கள் அந்த மக்கள். இஸ்ரேல் வடக்குகரை நிலத்தை முழுவதும் ஆக்கிரமிக்கப்பார்ப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் அம்மக்கள். ஆனால், பாலத்தீனிய மக்கள் சட்டத்தை மீறி கட்டடங்களை கட்டி உள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images
1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரை அடுத்து இஸ்ரேல் வடக்கு கரையை கைப்பற்றியது. பின் கிழக்கு ஜெருசலேம் பகுதியை கைப்பற்றியது. சர்வதேச சட்டம், இரண்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் இதனை மறுக்கிறது.

வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் -2: என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டிற்கான இருபது மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43க்கு துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணிகள் துவங்கின. இந்தப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

கம்பத்தில் கட்டிவைத்து, பெண்ணை தாக்கியவர் கைது - பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

விருத்தாசலத்தில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஊரைவிட்டு வெளியேறியதால், திருமணம் செய்த ஆணின் தாயாரை, பெண் வீட்டை சேர்ந்தவர் பொதுவெளியில் கட்டிவைத்து, அடித்து, துன்புறுத்தியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. விருத்தாசலம் அருகேயுள்ள விளங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வியின் மகன் பெரியசாமி திருமணத்திற்கு பிறகு ஒரு மாதகாலம் ஆகியும், மனைவியுடன் கிராமத்திற்கு திரும்பவில்லை என்பதால் பெண் வீட்டாரால் தாக்குதலுக்கு ஆளாகியதாக புகார் அளித்துள்ளார் செல்வி.

இலங்கையில் அவசர காலச் சட்டம் மூன்றாவது முறையாக நீட்டிப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்னவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:இலங்கையில் அவசர காலச் சட்டம் மூன்றாவது முறையாக நீட்டிப்பு

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்"

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
விரிவாகப் படிக்க:"தவறு செய்துவிட்டேன்" - ஓர் அம்பயரின் ஒப்புதல் வாக்குமூலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












