கம்பத்தில் கட்டிவைத்து, பெண்ணை தாக்கியவர் கைது - பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

பொதுவெளியில் கட்டிவைத்து, அடிக்கப்பட்ட செல்வியின் தற்போதைய நிலை என்ன?
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

விருத்தாசலத்தில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஊரைவிட்டு வெளியேறியதால், திருமணம் செய்த ஆணின் தாயாரை, பெண் வீட்டை சேர்ந்தவர் பொதுவெளியில் கட்டிவைத்து, அடித்து, துன்புறுத்தியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.

விருத்தாசலம் அருகேயுள்ள விளங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வியின் மகன் பெரியசாமி திருமணத்திற்கு பிறகு ஒரு மாதகாலம் ஆகியும், மனைவியுடன் கிராமத்திற்கு திரும்பவில்லை என்பதால் பெண் வீட்டாரால் தாக்குதலுக்கு ஆளாகியதாக புகார் அளித்துள்ளார் செல்வி.

''என் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. என் இரண்டு மகள்களையும் மில் வேலைக்கு அனுப்பிவிட்டேன். எனக்கு உதவ உள்ளூரில் யாரும் இல்லை. என் மகனும், கொழஞ்சியின் மகளும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இதில் நான் தலையிடவில்லை. தனது மகள் வீடுதிரும்பவில்லை என்பதால், தொடர்ந்து எனக்கு சிரமம் கொடுத்தார் கொழஞ்சி. கடந்த வாரம் பொதுவெளியில் என்னை கட்டிவைத்து, அடித்து, என் புடவையை கிழித்து அவமானப்படுத்தினார்,'' என அழுதுகொண்டே விவரித்தார்.

கம்பத்தில் கட்டிவைத்து, அடிக்கப்பட்ட பெண் - தற்போதைய நிலை என்ன?

தொலைக்காட்சிகளில் செல்வியை கொழஞ்சி அடித்த காட்சியை பார்த்த பெரியசாமி, தனது மனைவியுடன் கிராமத்திற்கு திரும்பியதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார் செல்வி.

''என் மகனும், மருமகளும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பதிலாக கொழஞ்சி வழக்கை சந்திக்கவேண்டும். என் மகனும், கொழஞ்சியின் மகளும் சுயமாக எடுத்தமுடிவுக்காக என்னை கொடுமைப்படுத்தியதை ஏற்கமுடியாது,''என்கிறார் செல்வி.

நாம் செல்வியிடம் பேசிய சமயத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார் அவர்.

மேலும் தான் கிராமத்திற்கு திரும்பினால்,கொழஞ்சி மீண்டும் தாக்குதல் தொடுப்பார் என்ற அச்சத்தில் இருப்பதாக செல்வி பிபிசிதமிழிடம் தெரிவித்திருந்தார்.

செல்வி வெளியேறவேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததால், கிராமத்திற்கு செல்லமுடியாமல் மருத்துவமனைக்கு வெளியே காத்திருப்பதாக கூறினார்.

பொதுவெளியில் கட்டிவைத்து, அடிக்கப்பட்ட செல்வியின் தற்போதைய நிலை என்ன?

செல்வியின் நிலைகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பிபிசி தமிழிடம் பேசினார்.

செல்வி மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் படங்களை பகிர்ந்தோம். ''செல்விக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி தெரிந்துகொண்டேன். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படாமல், பாதுகாப்பாக அங்கே தங்கவைக்கப்படுவார்,''என அவர் உறுதி அளித்தார்.

தற்போது செல்வி மருத்துவமனையில்தான் இருக்கிறார் என்பதை பிபிசி தமிழ் உறுதி செய்தது.

விளங்காட்டூர் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் ஷாஹுல் அமீதிடம் கேட்டபோது, கொழஞ்சி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். ''செல்வி அரசு மருத்துவமனையில் உள்ளார். கொழஞ்சி செல்வியை கட்டிவைத்து அடித்ததை உள்ளூர் மக்கள் உறுதிபடுத்துகிறார்கள்.தாக்குதல் தொடுத்ததாக அறியப்படும் கொழஞ்சியை மீண்டும் விசாரித்து, அவரை கைது செய்து, சிறைக்கு கொண்டுசென்றுள்ளோம். அவர் பெரியசாமி தனது மகளை கடத்தி சென்றதாக பதிவான வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார். செல்வியை துன்புறுத்திய வழக்கை நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை,''என ஷாஹுல் அமீது தெரிவித்தார்.

கொழஞ்சியை நாம் தொடர்புகொள்ள எடுக்கபட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :