ஆப்ரேஷன் கமலா 4.0: பதவி விலகும் எம்.எல்.ஏக்கள் - கர்நாடக அரசுக்கு ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அளித்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தல கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தமக்கு வேறு வேலைகள் இருப்பதால் அவர்களது பதவி விலகல் குறித்து செவ்வாயன்றுதான் தம்மால் முடிவெடுக்க முடியும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவர் மற்றும் சுயேச்சை ஒருவரின் ஆதரவும் ஆளும் கூட்டணிக்கு உள்ளது.
சபாநாயகரைத் தவிர்த்தால் அரசை ஆதரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 116ஆக உள்ளது. 11 பேர் பதவி விலகியது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறையும்.
இரு கட்சிகளிலும் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை குறிவைத்து, பாரதிய ஜனதா கட்சி நடத்தும் 'ஆப்ரேஷன் கமலா 4.0' தொடங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பதவி விலகல் கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்களில் மூவர் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவின் ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள்.
இவர்களது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 224இல் இருந்து 213ஆக குறையும்.
அப்போது ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை 107ஆகக் குறையும்.
தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு கர்நாடகாவில் தற்போது 105 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
வரும் ஜூலை 12 அன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போது குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதே எங்கள் திட்டம் என்று பெயர் வெளியிட விரும்பாத மாநில பாஜக மூத்த தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் இன்னும் சில உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, பதவி விலகுவார்கள் என்று பாஜக நம்புகிறது.
பதவி விலகியவர்களில் கடந்த வாரம் வரை மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவராக இருந்த ஏ.எச்.விஸ்வநாத்தும் அடக்கம்.
காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்கு உள்ள முரண்பாட்டைக் கலைத்து, தங்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளவே பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் கட்சியை விட்டு விலகுவார்கள் என்று தாம் கருதவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை மற்றும் மத்தியத் தலைமைக்கு எதிராக தமக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












