நூறு கிலோ தங்கம் மோசடி: காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தங்கம் மோசடி: காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது

பட மூலாதாரம், தினத்தந்தி

தினத்தந்தி: 'தங்கம் மோசடி - காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது'

காஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பின்வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது,

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் ராஜப்பாவுக்கு (வயது 87) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். இதனால் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விமான நிலைய போலீசார், ராஜப்பா குருக்களை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராஜப்பா குருக்களை மும்பையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு போலீசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜர் வீட்டுக்கு ராஜப்பா குருக்களை அழைத்து சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ராஜப்பா குருக்களை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

Presentational grey line
Presentational grey line

தினமணி: 'காங்கிரஸ் தலைவராகிறார் அசோக் கெலாட்?'

அசோக் கெலாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து உறுதியாக உள்ளதால், அக்கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக் கெலாட் தலைவராவதற்கு, பல்வேறு மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது என்கிறது தினமணி நாளிதழ்.

அண்மையில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலைவிட வெறும் 8 இடங்களே அக்கட்சிக்கு அதிகம் கிடைத்தன. அதுமட்டுமன்றி, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.

80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.

அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அவரது தோல்வி, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதவி விலகுவதில் உறுதி: மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. "கட்சித் தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும்; கட்சியை அமைப்புரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கு அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது' என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று பல்வேறு மூத்த தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்தினர். ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதால், அப்பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுவார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அசோக் கெலாட் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு தில்லி காங்கிரûஸச் சேர்ந்த பல தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டாலும், ராஜஸ்தான் முதல்வராக அவர் தொடர்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line

இந்து தமிழ்: 'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி'

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி

பட மூலாதாரம், இந்து தமிழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வரை சுமார் 600 கி.மீ தொலைவுக்கு நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி, மரக்காணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடலூரில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிதம்பரத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தில் எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் உள்ளிட் டோரும், நாகையில் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும், திருவாரூர் கொற்கையில் தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன், எம்எல் ஏக்கள் பூண்டி கலைவாணன், ஆடலரசன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும், மனித சங்கிலியில் தி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்று, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விரைவில் கலந் தாலோசித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதிக்குள்ளாகும் கர்ப்பிணி பெண்கள்

தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதிக்குள்ளாகும் கர்ப்பிணி பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

திருச்சி துறையூர், மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் 10 - 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மூன்று இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது.

இதனால், அங்கு வரும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இதில் மிகவும் மோசமாக இருப்பது துறையூர் ஆரம்ப சுகாதார நிலையம்தான். நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை என்பதால், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் நிதியில் தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கப்படுகிறது.

இருந்தும் தண்ணீர் பற்றாகுக்குறையை சமாளிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

"போதிய தண்ணீர் இல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது கடினம். தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்தே நாங்கள் கர்ப்பிணி பெண்களை இங்கு அனுமதிக்கிறோம். மீதமுள்ள நபர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்" என்று அங்குள்ள பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :