'அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள் பக்கவாதம் ஏற்படக்கூடும்'- எச்சரிக்கும் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
நீண்ட நேரம் பணிபுரிவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணிநேரங்களுக்கு மேலாக வேலை செய்தலே பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டநேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக நீண்ட நேரம் பணிபுரிந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீண்டநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின் கீழ் உள்ளவர்கள் தங்களது வேலைநேரத்தின் இடையே உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுகளை உண்பது போன்றவற்றை கடைபிடித்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்று பிரிட்டனின் பக்கவாத தடுப்பு அமைப்பு கூறுகிறது.
ஏஞ்சர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், 143,000 க்கும் மேற்பட்டவர்களின் வயது, புகைபிடித்தல் மற்றும் வேலை நேரம் குறித்த தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
அதாவது, மேற்குறிப்பிட்டோரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தவர்களில் 1,224 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
'இன்னும் திறமையாக வேலை செய்யுங்கள்'

பட மூலாதாரம், Getty Images
குறுகியகாலத்திற்கு நீண்டநேரம் வேலை செய்தவர்களுக்கு 29 சதவீதமும், 10 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டநேரம் வேலை செய்தவர்களுக்கு 45 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சி தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ஸ்ட்ரோக்' எனும் சஞ்சையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊழியர்களும், நீண்டநேரம் பணிபுரிய தொடங்குவதற்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட்டவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
"10 ஆண்டுகளுக்கு நீண்டநேரம் பணிபுரிந்த 50 வயதுக்கு குறைவானவர்களுக்கே பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிறிதும் எதிர்பாராத இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மென்மேலும் ஆராய வேண்டியுள்ளது" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானியான மருத்துவர் அலெக்சிஸ் டெஸ்கத்தா.
"திட்டமிட்டு, திறம்பட பணியாற்றி வேலை தக்க நேரத்தில் முடிக்குமாறு நோயாளிகளிடம் கூறுவேன். அதை நானும் பின்பற்றுகிறேன்."
வெறும் தரவுகளை மட்டுமே முதலாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சொந்த தொழிலை மேற்கொள்பவர்கள், தலைமை செயலதிகாரிகள், மேலாளர்கள் உள்ளிட்டோர் நீண்டநேரம் வேலை செய்தாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதில்லை என்றும், அதே சமயத்தில் முறையற்ற நேரத்திலும், இரவு நேரத்திலும் நீண்டநேரம் பணிபுரிபவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரியவந்துள்ளது.
"நீங்கள் நீண்டநேரம் வேலை செய்வதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிப்பதற்கான சில வழிகள் இருக்கின்றன" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை மருத்துவர் ரிச்சர்ட் பிரான்சிஸ்.
"திட்டமிடப்பட்ட உணவுப் பழக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப்பழக்கத்தை நிறுத்தி தேவையான அளவு உணவு உண்பது உங்களது உடல்நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடும்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












