சஞ்சீவ் பட்: கைதியின் மரணத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும், அதன் பின்னணியும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினித் கரே
- பதவி, பிபிசி இந்தி
குஜராத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாம்நகர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்து 29 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. சஞ்சீவ் பட் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்ற விசாரணை குறித்து தங்களுக்கு திருப்தி இல்லை என்று சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் அல்லது அவருக்கு கீழ் பணியாற்றியவர்களின் காவலில் கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 133 பேரும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
பிரபுதாஸ் மாதவி வைஷ்ணனி என்பவர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்றும், காவலில் இருந்த வைஷ்ணனியை துன்புறுத்திய புகார் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு, கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளிக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அரசு வழக்கறிஞர் துசார் கோகனி தெரிவித்தார்.
''மனித உரிமைகள் விவகாரத்தில் இது முக்கியமான தீர்ப்பு,'' என்று துஷார் கோகனி வரவேற்பு தெரிவித்தார். துன்புறுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மற்ற ஐந்து பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறினார்.
பல முறை முயற்சி செய்தபோதிலும் சஞ்சீவ் பட் தரப்பு வழக்கறிஞர் ஐ.எச். சய்யீத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கருத்தைப் பெற முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சஞ்சீவ் பட் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். 1988ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான அவர் குஜராத் மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
அனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2015ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
''27 ஆண்டு கால ஐ.பி.எஸ். பணிக்குப் பிறகு நான் நீக்கப்பட்டிருக்கிறேன். நான் இன்னும் பணியாற்ற ஆயத்தமாக இருக்கிறேன். யாரும் பணிக்கு எடுத்துக் கொள்வார்களா?'' என்று 2015 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சஞ்சீவ் பட் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
நரேந்திர மோதி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் மோதிக்கு பங்கு இருந்ததாகப் புகார்கள் கூறியதால் இவர் முதன்முதலில் செய்திகளில் இடம் பிடித்தார்.
குஜராத் கலவரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நரேந்திர மோதி எப்போதும் மறுத்து வந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
போதை மருந்துகள் வைத்ததாக எழுந்த புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில் இருந்து வருகிறார்.
பொய் வழக்குகளில் தன்னை சிக்க வைத்துவிட்டார்கள் என்று சஞ்சீவ் பட் புகார் கூறி வருகிறார்.
1990ல் ஜாம்நகரில் காவல் துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் போலீஸ் காவலில் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் இப்போது சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபுதாஸ் மாதவி வைஷ்ணனி உள்ளிட்ட 113 பேர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது இந்த வழக்கு. பிறகு அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
தடா சட்டத்தின் விதிமுறைகள் கடுமையானவை. அதனால் மனித உரிமை மீறல் கொடுமைகள் அதிகம் நடந்ததாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர்.
1990ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் அயோத்தி ரத யாத்திரை பிகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்ட காலமாகும்.
எல்.கே. அத்வானி கைது செய்யப்பட்டதை அடுத்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. பல இடங்களில் கலகக்காரர்கள் பொருட்களை சூறையாடி, தீ வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 39 வயதான பிரபுதாஸ் மாதவி வைஷ்ணனியும் ஒருவர். 1990 அக்டோபர் 30ஆம் தேதி வைஷ்ணனியின் மூத்த சகோதரர் அம்ரித் பாய் வீட்டில் இருந்தார்.
பிரபுதாஸின் குடும்பம், மனைவி மற்றும் நான்கு, ஆறு, எட்டு வயதில் மூன்று குழந்தைகளையும் கொண்டது.


``இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், அவருடைய இரு சகோதரர்களை அழைத்துச் சென்றுவிட்டனர். எதற்காக அவர்களை அழைத்துச் சென்றார்கள் என்பது இப்போது வரை எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம் சட்டம் பற்றியோ காவல் துறையினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றோ எங்களுக்கு அதிகம் தெரியாது. காவல் துறையினரைப் பார்த்து மக்கள் மிகவும் அச்சப்படுவார்கள். என் சகோதரர்களை எதற்காக அழைத்துச் சென்றீர்கள் என்று கேட்பதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லை. அவர்களும் எதையும் சொல்லவில்லை. அவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக, பிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம்,'' என்று அம்ரித் பாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AMRUTIBHAI
தன் சகோதரர்களைக் கைது செய்வதற்கு அன்றைய தினம் தங்கள் வீட்டுக்கு வந்த காவல் துறையினரில் சஞ்சீவ் பட்டும் இருந்தார் என்று அம்ரித் பாய் குறிப்பிட்டார். மற்றொரு சகோதரரின் பெயர் ரமேஷ் பாய்.
கைது செய்யப்பட்ட ஆண்களை காவல் துறையினர் தடியால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர், தோப்புக்கரணம் போடச் செய்தனர் என்று அம்ரித் பாய் தெரிவித்தார்.
``தடியால் அடித்ததாலும், தொடர்ந்து தோப்புக்கரணங்கள் போட்டதாலும் அவர்களுடைய சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. என் இரு சகோதரர்களுக்கும் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்பட்டன,'' என்றார் அம்ரித் பாய்.
சிறுநீரகப் பாதிப்பு காரணமாக நவம்பர் 18ஆம் தேதி பிரபுதாஸ் மரணம் அடைந்தார். மற்றொரு சகோதரர் ரமேஷ் பாய், மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்குப் பிறகு 15 - 20 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
இருந்தபோதிலும், இருவருக்கும் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு பற்றி அம்ரித் பாய் உடனான எங்களது உரையாடலின்போது எதையும் உறுதி செய்ய முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சகோரதாரரின் மரணத்தில் சந்தேகமடைந்து உடற்கூறு ஆய்வறிக்கை தரும்படி சப்-டிவிஷன் மாஜிஸ்ட்ரேட்டிடம் அம்ரித் பாய் விண்ணப்பித்திருக்கிறார்.
"சப்-டிவிஷன் மாஜிஸ்ட்ரேட் எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார். அந்த விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பினார். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தனர்,'' என்று அவர் சொல்கிறார்.
இந்த வழக்கில் சி.ஐ.டி. காவல் துறையினர் 1990ல் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தாமதம் ஏற்பட்டதால் வழக்கு இழுத்துக் கொண்டே போனது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய 1994-95ல் அரசின் ஒப்புதல் கிடைத்தது என்று அரசு வழக்கறிஞர் துஷார் கோகனி தெரிவித்தார்.
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடர்நதனர். தாமதம் குறித்து உயர் நீதிமன்றம் கண்டித்த பிறகு, 2012ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணை 2015ல்தான் தொடங்கியது என்று அவர் கூறினார்.
பிரபுதாஸ் மரணத்துக்குப் பிறகு அவருடைய குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பை, அவருடைய மற்ற சகோதரர்கள் எடுத்துக் கொண்டனர் என்று அம்ரித் பாய் தெரிவிக்கிறார்.
"குடும்பத்தின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இன்னமும் அதைச் செய்து வருகிறோம். எங்களால் இயன்றதை நாங்கள் செய்கிறோம். அவருடைய குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு, சட்டப் போராட்டமும் நடத்துவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. இரண்டு வகைகளில் நாங்கள் போராட வேண்டியுள்ளது,'' என்று அவர் சொல்கிறார்.
ரமேஷ் பாய் ஜாம்நகரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார்.
தங்கள் வழக்கறிஞருடன் பேசிய பிறகுதான் தீர்ப்பு பற்றியோ அல்லது எதிர்கால செயல் திட்டம் பற்றியோ தம்மால் கருத்து தெரிவிக்க முடியும் என்று சஞ்சய் பட்டின் மனைவி ஸ்வேதா பட் பிபிசியிடம் கூறினார்.
பிபிசியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஜாம்நகரில் இருந்து அகமதாபாத் நகர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












