VVPAT மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரையிலிருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்டதில் முறைகேடா?

பட மூலாதாரம், Getty Images
செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி மாவட்டத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதால், முறைகேடு நடந்திருக்கலாம் என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. இது வழக்கமான நடைமுறை என்கிறது தேர்தல் ஆணையம்.
செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு சுமார் 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கின. இந்தத் தகவல் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்குத் தெரியவந்ததும் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
எதற்காக வாக்குப் பதிவு எந்திரங்கள் வந்து இறங்கியுள்ளன, வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்றுவதற்கு சதி நடக்கிறதா எனக் கூறி போராட்டத்திலும் இறங்கினர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இன்று தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புதிதாக வந்திறங்கிய வாக்குப் பதிவு எந்திரங்களைத் திருப்பி எடுத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இன்று காலையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்த தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரினார்.
இந்நிலையில், வழக்கமான ஒரு நடைமுறையாகவே வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி தொகுதிக்கு 50 வாக்குப் பதிவு எந்திரங்களும் ஈரோடு தொகுதிக்கு 20 VVPAT (விவிபேட்) எனப்படும் பதிவான வாக்குகளை அச்சிடும் எந்திரங்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன.
"வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்களித்துப் பார்ப்பார்கள். அதிகபட்சம் ஐம்பது வாக்குகள்வரை இம்மாதிரி வாக்களித்து சோதிப்பார்கள். அதற்குப் பிறகு அந்தத் தரவுகளை அழித்துவிட்டு, வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்படும். ஆனால், சில இடங்களில் தரவுகளை அழிக்காமல் வாக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்திருக்கிறது" என செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 46 வாக்குப் பதிவு எந்திரங்களில் இந்தத் தவறுகள் நடந்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகக் கூறினார். சில இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் தரவுகள் அழிக்கப்பட்டு, விவிபேட் எந்திரங்களில் தரவுகள் அழிக்கப்படாமல் இருக்கலாம்.
சில இடங்களில் விவிபேட் எந்திரங்களில் தரவுகள் அழிக்கப்பட்டு, வாக்குப் பதிவு எந்திரங்களில் தரவுகள் அழிக்கப்படாமல் இருக்கலாம். சில இடங்களில் இரு தரவுகளுமே அழிக்கப்படாமல் இருக்கலாம். இப்படியான தவறுகள் தமிழகத்தில் 46 இடங்களில் நடைபெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
"இதற்கு முன்பு நடந்த தேர்தல்களிலும்கூட இம்மாதிரி நடந்திருக்கிறது. ஆனால், அப்போது விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதால், வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல்கட்சியின் முகவர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டு வாக்குகள் எண்ணப்படும். ஆனால், இந்த முறை விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்படலாம் என்பதால் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார் சாஹு.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து இடங்களில் விவிபேட் பதிவையும் வாக்குப் பதிவையும் சரிபார்க்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய சாஹு, அப்படி தேர்வுசெய்யும்போது தவறு நேர்ந்த எந்திரங்கள் இதற்கென பரிசோதிக்கப்பட்டால் பிரச்சனை ஏற்படும் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
இந்தியாவின் பல இடங்களிலும் இதேபோன்ற தவறுகள் நடந்திருக்கிறது என்பதால், அகில இந்திய அளவில் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்குமெனவும் அவர் கூறினார்.
"அப்படி தவறுகள் நடந்த இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்தால் தயார் நிலையில் இருப்பதற்காகவே தேனி மாவட்டத்திற்கும் ஈரோட்டிற்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஈரோட்டில் 54 வாக்களிக்கும் எந்திரமும் 37 கட்டுப்பாட்டி எந்திரமும் இருப்பில் இருக்கிறது. ஆனால் VVPAT எந்திரம் ஒன்றுகூட இல்லை. ஆகவே அங்கு 20 VVPAT எந்திரம் அனுப்பப்பட்டது. அதேபோல, தேனியில் 72 கட்டுப்பாட்டு எந்திரமும் 50 VVPAT எந்திரமும் இருப்பில் உள்ளது. ஆனால், வாக்களிக்கும் எந்திரங்கள் இல்லை. ஆகவே அங்கு 50 வாக்களிக்கும் எந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இது ஒரு வழக்கமான நடைமுறை" என செய்தியாளர்களிடம் கூறினார் சத்யபிரதா சாஹு.
தமிழ்நாட்டில் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு, வாக்குப் பதிவு எந்திரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓரிடத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. தேர்தல்களுக்கான ஏற்பாடுகளின்போது அந்தந்த மாவட்டங்களுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களைப் பரிசோதிக்கும்போது, இயங்காத எந்திரங்கள், உடைந்த எந்திரங்கள் இருந்தால் அவற்றுக்குப் பதிலாக வேறு எந்திரங்களை அளிக்க எதுவாக கூடுதல் எந்திரங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்படும். சில மாவட்டங்களில் கூடுதலான எந்திரங்கள் இயங்காதவையாக இருந்தால், அங்கு வேறு மாவட்டங்களில் இருந்து எந்திரங்கள் கொண்டுவரப்படும்.
தேனி, ஈரோடு மாவட்டங்களுக்கு இதன் அடிப்படையிலேயே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் போட்டியிடுகின்றனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












