மோதி அரசால் 200 டன் தங்கம் வெளிநாடுகளுக்கு ரகசியமாக அனுப்பப்பட்டதா? #BBCFactCheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து 200 டன் தங்கத்தை ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டதாக வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு பகிரப்பட்டு வரும் செய்தி குறித்த உண்மைத்தன்மையை அறிய விரும்புவதாக பிபிசிக்கு வாட்சப் வழியே நேயர்கள் கோரிக்கை விடுத்தனர்.
"மற்றொரு மிகப் பெரிய முறைகேடு… இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 200 டன் தங்கம் திருடப்பட்டுள்ளது. #ChowkidarChorHai" என்று பரப்பப்பட்டு வரும் அந்த செய்திக்கு கீழ், இதுகுறித்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இணைய செய்தியின் லிங்க் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய இளையோர் நாடாளுமன்றத்தின் தெற்கு டெல்லி உறுப்பினரான நவ்நீத் சதுர்வேதியின் குற்றச்சாட்டை மையாக கொண்டு இந்த கட்டுரை உள்ளது.
"மோதி அரசு ரகசியமாக ரிசர்வ் வங்கியின் 200 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்திற்கு 2014ஆம் ஆண்டு கொண்டு சென்றதா? தங்கத்தை பரிமாறிக் கொண்டதற்கு இணையாக அரசு திரும்ப பெற்றது என்ன? இந்த பரிவர்த்தனை பற்றிய தகவல் பொதுவெளியில் அறிவிக்கப்படாதது ஏன்?" என இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய பல்வேறு ட்விட்டர் பக்கங்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அந்த பதிவை ரீட்வீட் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், TWITTER
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. "2014ஆம் ஆண்டோ அல்லது அதற்கு பிறகு இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்கும் தங்க பரிமாற்றம் மேற்கொள்ளப்படவில்லை" என்று ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவித்துள்ளார்.
செய்தியின் மூலம்
தன்னைத்தானே புலனாய்வு பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் நவ்நீத் சதுர்வேதி தனது லிங்க்ட்- ன் பக்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி, மோதி அரசாங்கம் 200 டன் தங்கத்தை ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டும் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்த தகவல்களை மோதி அரசு, எதிர்க்கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரியாத வண்ணம் வைத்துக்கொண்டதாகவும், அந்த தங்கம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நவ்நீத், "கடந்த 2018ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நான் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதிலின் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அதாவது, இந்தியாவுக்கு சொந்தமான 268.01 டன் தங்கம் மிகவும் பாதுகாப்பாக பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் சென்டில்மென்டில் வைக்கப்பட்டிருப்பதாக எனக்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு வரும் ஒன்றல்ல. இது குறித்த தகவல்களை 2018ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தனது இணையதளத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு குறித்த கணக்கு மேலாண்மை முறையில் 2014-2015க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.
2014ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெளிநாடுகளில் இந்தியா வைத்துள்ள தங்கத்தின் எடை பூஜ்யமாக இருந்த நிலையில், அதற்கு பிறகு திடீரென 200 டன்னுக்கு மேலாக எப்படி அதிகரிக்கும்?" என்று நவ்நீத் கேள்வி எழுப்புகிறார்.
இந்த விவகாரம் பெரிதாகவே, கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. "ஒரு நாட்டின் மைய வங்கி, பாதுகாப்பு காரணங்களுக்கான மற்ற நாடுகளின் மைய வங்கிகளில் தங்களது தங்க கையிருப்புகளை வைத்திருப்பது என்பது சாதாரண நடைமுறை" என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த பொருளாதார வல்லுநரிடம் பேசியபோது, "எந்த நாட்டில் இருந்தாலும், அது நமக்கு சொந்தமானது. ஒரு நாடு தனக்கு சொந்தமான தங்கத்தை மற்ற நாடுகளின் மைய வங்கிகளில் வைத்திருப்பது என்பது ஒரு சாதாரணமான நடைமுறை. அவ்வாறு வைக்கப்படும் தங்கம் அடமானம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, அமெரிக்கா அல்லது பிரிட்டனிலிருந்து இந்தியா வாங்கும் தங்கம் நாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அவசியமில்லை. அந்தந்த நாடுகளின் மைய வங்கிகளிலேயே அது இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியா 586.44 டன் தங்க இருப்புகளை கொண்டுள்ளது, இதில் 298.14 டன் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












