பொள்ளாச்சி: பண்ணை வீட்டில் கோகைன் போதைபொருள் பயன்படுத்திய கேரள மாணவர்கள்

பட மூலாதாரம், Dailythanthi
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: ‘பொள்ளாச்சி: பண்ணை வீட்டில் கோகைன் போதைபொருள் பயன்படுத்திய மாணவர்கள்’
பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதையில் ஆட்டம் போட்ட கேரள கல்லூரி மாணவர்கள் 150 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மதுவிருந்தில் தடை செய்யப்பட்ட கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
அந்நாளிதழ் செய்தி பின்வருமாறு விவரிக்கிறது,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தென்னை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தென்னந்தோப்புகளுக்கு நடுவே ஓய்வு எடுக்க பண்ணை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சில உரிய அனுமதி இல்லாமல் கேளிக்கை விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல ஏராளமான சொகுசு விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் உள்ளன. இங்கு போதை பொருள் மற்றும் மதுவிருந்து தாராளம், சூதாட்டம், நடன விருந்து என்று இங்கு கேளிக்கை விருந்துகள் அமர்க்களப்படும்.
சுற்றுலா பயணிகள் போர்வையில் இங்கு பலர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் விடுதிகளை ஒட்டிய வனத்திற்குள் இரவு நேரங்களில் வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. ஆனாலும் உள்ளூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் சேத்துமடை அருகே ஒரு சொகுசு விடுதியாக இயங்கிய பண்ணை வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு வரை ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், கார்களில் இளைஞர்கள் செல்வதாகவும், அதிக சத்தத்துடன் பாட்டு வைத்து கூச்சலிடுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆனைமலைக்கு திடீரென்று வந்தார். பின்னர் அவரது தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இதில், சேத்துமடை அருகே அண்ணா நகரில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் தென்னந்தோப்புகளுக்கு நடுவே அக்ரி நெஸ்ட் என்ற சொகுசு விடுதி செயல்படுவது தெரிய வந்தது. அந்த சொகுசு விடுதியை அதிகாலை 3 மணிக்கு போலீசார் சுற்றி வளைத்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் கேரளாவில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் இருப்பது தெரியவந்தது. இதில் ஒருவர் மட்டும் பெண். அவர்கள், 23 கார்கள், 55 மோட்டார்சைக்கிள்களில் வந்துள்ளனர். அவர்கள் வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்காக அங்கு கூடியுள்ளனர்.
இதில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1200 கட்டணமாக வசூலித்ததும் தெரிய வந்தது. 100-க்கும் மேற்பட்டோர் மது அருந்தி உள்ளனர். சிலர் கஞ்சா பயன்படுத்தி உள்ளனர். சிலர் கோகைன் எனப்படும் விலையுயர்ந்த போதை பொருளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த தோட்டத்தில் இருந்து மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள், கோகைன் பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. .
இதற்கான ஏற்பாடுகளை செய்த தோட்டத்தின் உரிமையாளர் கணேசன் (வயது 45), சொகுசு விடுதி உரிமையாளர் அருண் பிரதீப்(48), சேத்துமடையை சேர்ந்த மேலாளர் கமால் என்ற கமாலுதீன் (28) மற்றும் மேடை அமைத்து ஒலிபெருக்கி பொருத்தியவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தவர்கள் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மது போதையில் இருந்த மாணவர்கள் மீது பொது இடத்தில் மது குடித்ததாக வழக்குபதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர்.
சொகுசு விடுதியில் போலீஸ் அதிகாரிகள் சோதனையின் போது வருவாய்த்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர். அப்போது சொகுசு விடுதிக்கு உடனடியாக சீல் வைக்கும்படி கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த சொகுசு விடுதிக்கு நேற்று மதியம் சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூட தேவையில்லை’
இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூட தேவையில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொது செயலாளர் அப்துல் ரஹீம் கூறி உள்ளார். இலங்கை நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு எதிராக அந்த அமைப்பு சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறாக அவர் கூறி உள்ளார்.

இந்து தமிழ்: 'தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை'
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Reuters
'தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்தாததால் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்கள்நலப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. எனவே, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் நடத்த முடியாமல் போனதற்கு, வழக்குகளே காரணம். மேலும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளால் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையமே தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வார்டுகள் மறு வரையறை ஆணையம் தனது பணிகளை முடித்து கடந்த 2018 ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, 99,324 கிராம பஞ்சாயத்து வார்டுகள், 6,471 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வார்டுகள், 655 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் என கிராமப் பகுதிகளில் மட்டும் 1,06,450 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இதேபோல, நகர்ப்புறங்களில் 8,288 டவுன் பஞ்சாயத்து வார்டுகள், 3,163 நகராட்சி வார்டுகள், 919 மாநகராட்சி வார்டுகள் என மொத்தம் 12,370 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
அதன்படி, புதிதாக மறுவரையறை செய்த வார்டுகளில், 2011 மக்கள்தொகை கணக்கின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த பணிகள் முழுமையடைந்து, அதன்பிறகு சமீபத்திய வாக்காளர் பட்டியலை உள்ளாட்சித் தேர்தலுக்காக சரிபார்க்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
எனவே, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும்." எறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: 'இன்று நீட் தேர்வு'
எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து இம்முறை 1.4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துகிறது. இம்முறை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு மாணவர்கள் அரைமணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை கொண்டு வருவது அவசியம். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த அதே புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட், ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் ஆவணத்தை எடுத்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக் கூடத்தில் உதவியாளர்களை அழைத்து வரத் தகுதியுள்ள சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய அனுமதி சான்றுகளைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அரைக்கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்படும். பெண்கள் நகைகளை அணிந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளன.
ஒடிஸாவில் ஒத்திவைப்பு:"பானி' புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












