சென்னையில் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்பனை
சில இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

பட மூலாதாரம், ARUN SANKAR
வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் வராமல் நிரம்பவில்லை. இதனால் இந்த கோடையில் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 2 ஏரிகள் வறண்டுவிட்டன. பூண்டி ஏரியில் 222 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 161 மி.கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 3 மி.கன அடியும், சோழவரத்தில் 18 மி.கன அடியும் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. 4 ஏரிகளிலும் சேர்த்து 402 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதனால் சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுவதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமணி: அதிமுக எம்எல்ஏ-க்கள் மீது புகார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் மீது சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார் என்கிறது தினமணி செய்தி.
இந்த புகாரை தொடர்ந்து மூன்று எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்க சட்டப் பேரவைத் தலைவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், சம்பந்தப்பட்ட கட்சியில் இருந்து மாறி வேறொரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று விவரிக்கிறது அச்செய்தி.

தி இந்து தமிழ்: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் திருத்தம்

பட மூலாதாரம், LAURENE BECQUART
சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது என்கிறது தி இந்து தமிழ் செய்தி.
தமிழகத்தில் பிளாஸ்டிக் கைப்பைகள், உறிஞ்சு குழல்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் அறிவுப்புக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த தடை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த அரசு, தடையை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தி வரும் உள்ளாட்சி அமைப்புகளும், உணவு பாதுகாப்புத் துறையினரும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தடையை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என தெரிவிக்கிறது தி இந்து தமிழ் செய்தி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: வைப்பு நிதியாக 10 ரூபாய் நாணயங்களை கொண்டு 10,000 ரூபாய் தொகையை செலுத்திய வேட்பாளர்
சூலூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு நேற்று 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வைப்பு நிதியாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு பத்தாயிரம் ரூபாய் தொகையை செலுத்தியதாக தெரிவிக்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
மக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதை மாற்றவே தான் இவ்வாறு செய்ததாக கருத்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் தெரிவித்தார்.
அந்த தொகை பெரும்பாலும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது என்றும், அந்த தொகுதியை சேர்ந்த ஒவ்வொரிடமும் சென்று ஒரு ரூபாய் கேட்டதாகவும், சூலூரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பேர் இந்த தொகையை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












