அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு இதுதான் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், CIA
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது.
அதில் ஒரு மேஜையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும்.
இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
விடை என்ன?

பட மூலாதாரம், CIA
உதாரணமாக, 2 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது.
3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.

இலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி?

அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர்.
வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர் பிறந்து வளர்ந்த ஊர்தான் காத்தான்குடி.
இலங்கையின் கிழக்கு மாகாகணம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் மக்களின் பிரதான தொழில் வியாபாரமாகும். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இங்குள்ள ஏராளமான கடைகள் இன்றுவரை திறக்கப்படவில்லை.
சஹ்ரானின் மனைவி பிள்ளைகளுக்கு என்னானது என்பது குறித்து தெரியவில்லை.

நரேந்திர மோதியைப் பிரதமர் பதவியில் இருந்து இறக்குவாரா ராகுல் காந்தி?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் நிலைமை கிட்டத்தட்ட அவ்வளவுதான் என்று சென்ற தேர்தலின் தோல்வியின்போது பேசப்பட்டது.
ஆனால், தடுமாறும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டியதோடல்லாமல் அவர் தனது தெளிவான எதிர்ப் பிரசாரங்களின்மூலம் ஒரு செயல்திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்.
பிபிசியின் கீதா பாண்டே அவரது தொகுதிக்கு நேரில் சென்று அவரால் பிரதமரை வீழ்த்த முடியுமா என்று ஆராய்கிறார்.
48 வயதாகும் ராகுல் காந்தி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் இந்தத் தொகுதியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். தற்போது நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார்.

பொள்ளாச்சி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு வழக்கு

பட மூலாதாரம், AFP
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது காவல்துறையின் சிபிசிஐடி பிரிவினர் பாலியல் வல்லுறவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி , ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக , பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் அண்ணன் கொடுத்த புகார் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












