மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: இழந்த கோட்டையை மீண்டும் பிடிப்பாரா தயாநிதி மாறன்?

சென்னை

பட மூலாதாரம், Getty Images

(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)

ஆயிரம் விளக்கு, எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.

சென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போன்ற பகுதிகள் அடங்கியதுதான் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.

மத்திய சென்னையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, ஏழு முறையும், காங்கிரஸ் கட்சி இரு முறையும், அதிமுக மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றிப்பெற்றுள்ளது.

1980, 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திமுகவின் கலாநிதி, 1996, 1998,1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுகவின் முரசொலிமாறன் தொடர்ந்து வெற்றிப் பெற்றார். அவரை தொடரந்து 2004, 2009ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் அடுத்தடுத்தாண்டுகள் வெற்றி பெற்றார். இருப்பினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

2014ஆம் ஆண்டு முதல்முறையாக அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.

திமுகவின் கோட்டை

இந்த தொகுதியை பொருத்தவரை இது திமுகவின் கோட்டை என்றே கூறப்படுகிறது. 1980, 1984 ஆகிய ஆண்டுகளிலும், 1996ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இந்த தொகுதி திமுக வசமே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் திமுகவின் முக்கிய தலைவர்களான கலாநிதி, முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய சென்னை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொகுதியின் பிரச்சனை

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், சென்னையின் முக்கிய இரண்டு ரயில் நிலையங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் பாதை இணைப்பு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் சென்னையின் மிக முக்கிய பகுதிகள் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் மக்கள் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

வாக்குகள் யாருக்கு

இந்த பகுதியில் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பது திமுகவிற்கு பலம் என்று கூறப்பட்டாலும் இந்த தேர்தலில் அந்த வாக்குகள் பிரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது விஐபி தொகுதியாகவும் கருதப்படுகிறது.

திமுகவின் வேட்பாளராக தயாநிதி மாறன், அதிமுக கூட்டணி சார்பாக பாமகவை சேர்ந்த சாம் பால், மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

டிடிவி தினகரின் அமமுக கூட்டணியின் சார்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தெஹ்லான் பாகவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரையில் பெரும்பாலும் இந்த தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :