திருவள்ளூர் மக்களவைத் தொகுதி: ஆக்கிரமிப்புக்கு தீர்வு கேட்கும் மக்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images
(நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளின் விவரங்கள் குறித்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதி குறித்து பார்க்கவிருக்கிறோம்.)
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), பூந்தமல்லி(தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.
ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் சேர்த்து 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதி சீரமைப்புக்குப்பின் இரண்டு முறை நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டபின் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் அதிமுகவின் பி.வேணுகோபால், திமுகவின் காயத்ரியை விட 31,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதன்பின் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் 6,28,499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் 3,05,069 வாக்குகளையே பெற்றார்.
அதிமுகவே இரண்டு முறையும் இந்த தொகுதியில் வென்றுள்ளது. ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாத அதிமுக தனது வெற்றியை திருவள்ளூர் தொகுதியில் நிலைநாட்டிக் கொள்ளுமா என்று தெரியவில்லை.
தொகுதியில் விவரம்
ஆந்திரமாநிலத்தின் எல்லையை ஒட்டி இந்த தொகுதி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம். மேலும் இங்கு ஆதிதிராவிட மக்களும் வன்னியர்களும் கணிசமாக உள்ளனர்.
கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரண்டின் அம்சங்களையும் கலவையாக கொண்டதுதான் திருவள்ளூர் தொகுதி. திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரை பல தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.
தொழிற்சாலைகள் பல உள்ளபோதிலும் இந்த தொகுயின் பெரும்பகுதி விவசாயத்தை நம்பி உள்ளது. நெல், பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை ஆகியவை இந்த பகுதியின் முக்கிய பயிர் வகைகளாக உள்ளன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்த தொகுதியில் பல நீர்நிலைகள் இருந்தாலும் குடிநீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உள்ளது.
அடையாறு மற்றும் கூவம் ஆற்றைக்காட்டிலும் பெரிய ஆறாக சொல்லப்படுகின்ற கொசஸ்தலை திருவள்ளூரில்தான் உள்ளது.
அந்த ஆற்றின் இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதும், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதும் இந்த பகுதியின் நீண்டநாள் பிரச்சனையாக உள்ளன.
அதுமட்டுமல்லாமல் ஆறு பகுதி கடலில் சேரும் இடமான கழிமுகப் பகுதி அழிவின் விளிம்பில் இருப்பதால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி விடுகிறது. அந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
போட்டியிடும் வேட்பாளர்கள்
அதிமுக கூட்டணி சார்பில் இந்தமுறையும் பி.வேணுகோபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸை சேர்ந்த ஜெயக்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிச் செல்வி இங்கு போட்டியிடுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












