வயநாடு: ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதா? BBCFactCheck

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு அடுத்து, பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி சென்ற பேரணியில் பாகிஸ்தானின் கொடிகள் இடம்பெற்றதாகவும், கேரள காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டடம் "பச்சை இஸ்லாமிய நிறத்தில்" உள்ளதாகவும் சில சமூக ஊடக பயனர்கள் கூறியுள்ளனர்.

இந்த மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற இந்து மற்றும் இஸ்லாமிய மத வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த மக்களவைத் தொகுதியிலுள்ள மத அடிப்படையிலான வாக்காளர்கள் பற்றி வியாழக்கிழமை பிபிசி வெளியிட்டது.

இது பற்றிய வதந்திகள் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தன.

ராகுல் காந்தியின் பேரணியில் பாகிஸ்தான் கொடிகள்

வியாழக்கிழமை வயநாடு மக்களவைத் தொகுதியில்வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் நடத்திய பேரணியில், அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை வைத்திருந்தினர் என்று சில சமூக ஊடக கணக்குகள் தெரிவித்துள்ளன.

பாலிவுட் நடிகை கோயனா மித்ராவும் இதே கருத்தை தெரிவித்து, இந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இது ஆயிரத்திற்கு மேலான ட்விட்டுகளையும், 2,500க்கு மேலான லைக்குகளையும் பெற்றது.

ராகுல் பேரணி

பட மூலாதாரம், TWITTER/@INCINDIA

ஷேர்சேட் மற்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

எமது புலனாய்வில் , இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி எடுக்கப்பட்டதாக கண்டறிந்தோம்.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரதேச கட்சியான இந்திய முஸ்லிம் லீக் ஒன்றிய கட்சி (ஐயுஎம்எல்) இந்த மாநிலத்தில் பல பேரணிகளை தொடர்ந்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகள் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் மித்ரா ட்விட் செய்துள்ளார்.

இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குன்காலிகுட்டியால் இந்த பேரணிகள் தலைமைதாங்கி நடத்தப்பட்டன.

கடந்த காலத்தில் கேரள அரசில் இவர் அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2017ம் ஆண்டு மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஐ.யு.எம்.எல்-யின் கொடியும் பச்சை நிறத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் கொடியின் பெரியதொரு பகுதியும் பச்சை நிறத்தில்தான் உள்ளது. ஆனால், இந்த இரண்டு கொடிகளும் குழப்பத்தை விளைவிக்கக்கூடியவையே.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ATUL LOKE/GETTY IMAGES

பச்சை நிறத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டடம்

சமூக ஊடக பதிவுகளில் காட்டப்படும் கட்டடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது அல்ல. இதில் காட்டப்படும் கட்டிடம் ஐ.யு.எம்.எல் கட்சியின் பிரதேச அலுவலகமாகும்.

இந்த புகைப்படத்தை உற்றுநோக்கினால், ஐ.யு.எம்.எல் கட்சியின் சின்னமான ஏணி தெரிகிறது.

இந்த கட்டடத்தில் இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படமும் தெரிகிறது. இந்த படத்தில் இருப்பவர் 2009ம் ஆண்டு இறந்துபோன ஐ.யு.எம்.எல் தலைவர் சையத் முகமது அலி ஷாஹிப் ஆவார்.

மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ள சில சொற்களை, "இக்பால் நகர், லீக் இல்லம்" என்று மொழிபெயர்க்கலாம். இது இடமும், ஐ.யு.எம்.எல் பெரியலான அலுவலகமும் ஆகும்.

ராகுல் காந்தியின் பேரணி காணொளியில் பாகிஸ்தான் கொடிகள்

ராகுல் காந்தியின் பரிவாரங்களில் பாகிஸ்தான் கொடிகளை காண முடிகிறது என்று பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்களும் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

உண்மை என்னவென்றால், ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கலுக்கு ஐ.யு.எம்.எல் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டிருந்தது.

ராகுல் வேட்பு மனு

பட மூலாதாரம், TWITTER/@INCINDIA

காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள பிரதேச கூட்டணியில் ஐ.யு.எம்.எல் ஓர் அங்கமாகும்.

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடும் முடிவை இந்த கட்சி வரவேற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :