நரேந்திர மோதி தேனியில் பிரசாரம் - 'நான் விழிப்புடன் இருக்கும் காவலாளி'

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கரிசல்பட்டிவிலக்கு எனும் இடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் முதல் ராணுவ வீரர்கள் வரை அனைவரும் கௌரவமாக வாழும் புதிய இந்தியாவை தாம் கனவு காண்பதாக தனது பிரசார உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
1979இல் காங்கிரஸ் திமுகவை எவ்வளவு அவமானப்படுத்தியது என்பதையும், சமீபத்தில் 2ஜி விவகாரத்தில்கூட திமுகவினர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். கடந்த கால கசப்புணர்வை மீறி, ஊழலுக்கு ஆதரவாக அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று மோதி பேசினார்.
ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த மோதி சமீபத்தில் திமுக தலைவர் தனது எஜமானை பிரதமராக முன்மொழிந்தார். ஆனால், அவர்களது கூட்டணி நண்பர்கள்கூட அதை ஏற்றுக்கொள்ளவில்லை . ஏனெனில், அவர்கள் அனைவருமே பிரதமராக காத்திருக்கின்றனர் என்றார்.
காங்கிரஸ் கட்சியும் தலைவர்களும் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டிய மோதி, காவலாளியான தாம் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும், யார் திருட்டுச்செயல்களில் ஈடுபட்டாலும் பிடித்துவிடுவேன் என்றும் கூறினார்.
தமிழகத்தை வளமாக்க வேண்டும் என்று மட்டுமல்லாது இலங்கை தமிழர்களின் நலனுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் மோதி பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
தமது அரசு இந்தியாவின் பாதுகாப்பில் எதையும் சமரசம் செய்துகொள்ளாது என்று பேசிய மோதி, இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டபோது மிகவும் குறுகிய நேரத்தில் மீட்கப்பட்டதாகவும், அதையும் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாகவும் கூறினார்.
காங்கிரஸ் அறிவித்துள்ள 'நியாய்' திட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்த மோதி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் இறந்தவர்கள்,போபால் விஷவாயு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், ஒரு குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்பதால் கலைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அரசு, தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு யார் நியாயம் செய்வார்கள் என்று பேசினார் நரேந்திர மோதி.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றரை மடங்கு தமது அரசு அதிகரித்ததாக மோதி பேசினார்.
கங்கை நதியைப்போல வைகையை மாற்றுவேன் என்று மோதி அந்தக் கூட்டத்தில் பேசினார்.
இது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மண். ஆனால் காங்கிரஸ் கட்சியால் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை காங்கிரஸ் கட்சியால் தேர்வுசெய்ய முடியவில்லை என்று விமர்சித்தார்.
தேனியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'மீனவர்களுக்கு தனி அமைச்சகம்'
தேனிக்குப் பிறகு ராமநாதபுரத்தில் பேசிய மோதி வரும் தேர்தலில் வென்றால் மீனவர்கள் நலனுக்கும் நீர் மேலாண்மைக்கு என தனி அமைச்சகங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்.
மோதியை வெறுக்கும் பெயரில் இந்திய நாட்டையே வெறுக்கிறார்கள் என எதிர்க்கட்சிகளை விமர்சித்த மோதி, அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்கி இந்தியா புதிய உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












