தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நன்கொடை - உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நன்கொடை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நன்கொடைகள் குறித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவற்றின் மூலம் மே 15 வரை பெறப்படும் நன்கொடை விவரங்களை மே மாதம் 31ஆம் தேதிக்குள் சீலிடப்பட்ட கவர்களில் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்க வழங்கப்பட்ட ஐந்து கூடுதல் நாட்களை ரத்து செய்ய நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன?

மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதன்படி, இந்தப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், ஒரு தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்பு ஒன்றால் வாங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்குக் கிடைக்கும்.

வங்கி மூலமாகவே அதை அவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம். எனினும், அந்தப் பத்திரங்களில் அதை வாங்கியவரின் பெயர் இருக்காது.

வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று அரசியல் கட்சிக்குத் தெரியாது. ஆனால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.

அதற்கான சட்டத்திருத்தங்களையும் இந்தப் பத்திரங்களை அறிமுகம் செய்தபோது மத்திய அரசு செய்தது.

வழக்கு விவரம் என்ன?

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு எனும் பொருள்படும் அசோசியேஷன் ஃபார் டெமோகிரடிக் ரிஃபார்ம்ஸ் மற்றும் காமன் காஸ் ஆகிய அமைப்புகள் இந்தத் திட்டம் அரசியல் சாசன சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்று நீதிமன்றம் முடிவு செய்யும் வரையில், தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.

எனினும் தற்காலிகமாக அவற்றின் விற்பனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

பெயர் தெரியாமல் நன்கொடை அளிப்பது முறைகேட்டுக்கு வழி வகுப்பதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

"வாக்காளர்களுக்கு அவர்கள் வேட்பாளர்கள் குறித்து அறிந்துகொள்ள உரிமை உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று அவர்களுக்கு ஏன் தெரியவேண்டும்," என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

தாங்கள் நன்கொடை வழங்காத கட்சிகளால் நன்கொடையாளர்கள் பலிகடா ஆக்கப்படலாம் என்பதால்தான் அவர்கள் பெயர்கள் அந்தப் பத்திரங்களில் இடம்பெறுவதில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்கிறது அந்தச் செய்தி.

இந்தத் திட்டம் மூலம் நன்கொடை வழங்குவது குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம், பெயர் வெளியிடாமல் நன்கொடை வழங்குவதை எதிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :