மக்களவை தேர்தல் 2019: தங்களின் வருவாய் குறித்த உண்மையை மறைக்கும் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தல் 2019

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பங்குபெறும் இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் பிராந்திய அரசியல் கட்சிகளின் வருடாந்திர வருவாய் குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆறு தேசியக் கட்சிகள் அல்லாத, 48 பிராந்தியக் கட்சிகளில் 37 கட்சிகளின், 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் 237.27 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 11 கட்சிகள் தங்கள் வருடாந்திர தணிக்கை அறிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு பொது வெளியில் உள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு எனும் பொருள்படும் அஸோஸியேஷன் ஃபார் டெமோகிரெடிக் ரிஃபார்ம்ஸ், (ஏ.டி.ஆர்) இந்தியாவின் மாநிலக் கட்சிகளின் கடந்த ஆண்டுக்கான வரவு செலவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் , அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தி அஸோஸியேஷன் ஃபார் டெமோகிரெடிக் ரிஃபார்ம்ஸ் இயங்கி வருகிறது.

இரண்டாம் இடத்தில் திமுக

அந்த அமைப்பின் அறிக்கையின்படி 2017-18ஆம் நிதியாண்டில், உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி, அதிகபட்சமாக 47.19 கோடி ரூபாய் வாருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது தரவுகள் அறியப்பட்டுள்ள 37 பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும்.

நாடாளுமன்ற தேர்தல் 2019

பட மூலாதாரம், Getty Images

அடுத்ததாக திராவிட முன்னேற்றக் கழகம் 35.74 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 27.27 கோடி ரூபாயுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.

முதல் மூன்று இடத்திலுள்ள கட்சிகள், 37 கட்சிகளின் கூட்டு வருவாயில் 110.27 கோடி, அதாவது 46.45 சதவிகித பங்கைக் கொண்டுள்ளன.

வருவாயில் சரிவைச் சந்தித்துள்ள கட்சிகள்

தரவுகளை சமர்ப்பித்துள்ள 37 கட்சிகளில் 15 கட்சிகளின் வருவாய் முந்தைய நிதி ஆண்டைவிட 2017-18இல் சரிவைச் சந்தித்துள்ளன. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவின் வருமானம் 2016-17இல் 48.88 கோடி ரூபாயாக இருந்தது. இது 2017-18இல் சுமார் நான்கில் மூன்று பங்கு (73.96%) குறைந்து 12.72 கோடியாக உள்ளது.

இதேபோல சிவ சேனா கட்சியின் வருவாயும் 31.82 கோடி ரூபாயில் இருந்து 78.46% குறைந்து 6.85 கோடி ரூபாயாக உள்ளது.

தற்போது பிராந்தியக் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 48 கட்சிகளில், மேகாலயா மாநிலத்திலுள்ள ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மக்கள் கட்சி ஆகியவை முறையே 14 மற்றும் 13 ஆண்டுகளாக தங்கள் தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை என ஏ.டி.ஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

'உண்மையாக இருக்க வாய்ப்பில்லை'

இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஏ.டி.ஆர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பேராசிரியர் ஜக்தீப் சொக்கர், தேர்தல் ஆணையத்திடம் தங்கள் வருவாய் குறித்து அரசியல் கட்சிகள் கொடுத்திருக்கும் தரவுகள் முழுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றார்.

"தவறான தகவல்களை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளைக் கொண்டுவருவது, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் வருவாயில் வெளிப்படைத்தன்மை போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு அரசியல் பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன," என்றார்.

lok sabha elections 2019

பட மூலாதாரம், Getty Images

தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் அரசியல் கட்சிகளையும் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுவில் அனைத்துத் தகவல்களையும் அளிக்காத வேட்பாளர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என 2013இல் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைப் போல, 20,000 ரூபாய்க்கும் மேலான நன்கொடைகள் பெறப்பட்டது தொடர்பான தகவல்களை அளிக்கும் படிவம் 24A-இன் எந்தப் பகுதியும் காலியாக விடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என ஏ.டி.ஆர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

நன்கொடையாளர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது இந்தியாவின் சிறிய அண்டை நாடுகளான நேபாளம், பூடான் போன்ற நாடுகளில்கூட நன்கொடையாளர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கான சட்ட வழிவகைகள் உள்ளன.

குறித்த தேதிக்குள் தங்கள் ஆவணங்களைச் சமர்பிக்காத மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு தரவுகளையே தராத கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் ஏ.டி.ஆர் பரிந்துரைக்கிறது.

தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை

அரசியல் கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. அவர்களின் பதிவை நீக்க அதிகாரம் இல்லை என்கிறார் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி.

1998ஆம் ஆண்டே அந்த அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்தது. எனினும் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1700-1800 இருக்கும் என்று கூறும் கோபால்சாமி, ஆறு தேசிய கட்சிகள் மற்றும் பிற பிராந்தியக் கட்சிகள் உள்பட 100க்கும் குறைவான கட்சிகளே தேர்தல் அரசியலில் முழுமையாக ஈடுபடுகின்றனர். பிற கட்சிகள் வேட்பாளரை மட்டுமே நிறுத்தி வெறும் பெயரளவிலேயே தேர்தலை சந்திக்கின்றன," என்றார் கோபல்சாமி.

இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி, அரசு சாரா அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினால்தான் அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்க வாய்ப்புண்டு என்று அவர் கூறினார்.

தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என இந்திய சட்ட ஆணையமும் மத்திய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :