நீரவ் மோதி: இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன், லண்டனில் ஆடம்பர வாழ்க்கை

நீரவ் மோதி

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, நீரவ் மோதி
    • எழுதியவர், ஷஷாங்க் சௌகான்
    • பதவி, பிபிசி

இந்தியாவில் சுமார் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக குற்றச்சாட்டப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக உள்ள நீரவ் மோதியை கடந்த வியாழக்கிழமை, லண்டன் நகர வீதிகளில் பார்த்த பிரிட்டனின் மூத்த செய்தியாளரான மைக் பிரவுன் நேர்காணல் செய்ய முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடக்கத்தில் உற்சாகமாக கேள்வி கேட்க ஆரம்பித்த அவர், நீரவ் மோதியின் தெளிவற்ற பதில்களால் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே சென்றுவிட்டார்.

இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்றான 'தி டெலிகிராப்' நாளிதழின் மூத்த செய்தியாளரான மைக் பிரௌனை பிபிசி மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டது

இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரியான நீரவ் மோதி, தன்னுடைய கேள்விகளுக்கு 'கருத்து இல்லை' என்பதை மட்டுமே தொடர்ந்து பதிலாக அளித்ததாக மைக் தெரிவிக்கிறார்.

லண்டன் நகர வீதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த நீரவ் மோதியை மைக்கும், 'தி டெலிகிராப்பை' சேர்ந்த மற்றொரு சக செய்தியாளரும் இணைந்து காணொளி எடுத்ததுடன், அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

"நாங்கள் நீரவ் மோதியை கண்டுணர்ந்து அணுகியபோது அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். எனது கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து ஒரே வகையில் மறுப்புத் தெரிவித்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், இதை அணுகுவதற்கு வேறு வழியேதுமில்லை" என்று மைக் கூறினார்.

லண்டன் நகரின் வீதிகளில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த நீரவ் மோதியிடம், நாடு கடத்தப்படுவது, பிரிட்டனில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பார் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அனைத்திற்கும் 'மன்னிக்கவும், கருத்து எதுவும் இல்லை' என்பதையே பதிலாக அளித்தார்.

டெலிகிராப் செய்தியாளர் தொடர்ந்து கேள்விகளை கேட்பதும், அதற்கு நீரவ் மோதி சரிவர பதிலளிக்காமல் அவ்வப்போது விலகி, டாக்ஸியை பிடிப்பதற்காக நடந்து செல்வதுமாக 'தி டெலிகிராப்' வெளியிட்ட 2 நிமிடங்கள் 13 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளி உள்ளது.

நீரவ் மோதி

பட மூலாதாரம், FACEBOOK

"நாங்கள் எடுத்த இந்த காணொளிக்கு, குறிப்பாக இந்தியாவிலிருந்து கிடைத்த மறுமொழியை பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நீரவ் மோதி விவகாரம் இந்தியாவில் முக்கியத்தும் வாய்ந்தது என்று தெரிந்திருந்தாலும், அது இந்தளவுக்கு செல்லும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை" என்று மைக் கூறுகிறார்.

மைக் மேற்கொண்ட இந்த காணொளி நேர்காணல் தற்செயலாக நடந்தது அல்ல. லண்டனில் வசிப்பதாக கூறப்பட்டு வந்த நீரவ் மோதியின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் முதலே தான் திட்டமிட்டு வந்ததாக மைக் கூறுகிறார்.

"நீரவ் மோதி தான் திட்டமிட்டவாறு ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறார். அதாவது, தினமும் வீட்டிலிருந்து, அவர் கூட்டு சேர்ந்துள்ளதாக நாங்கள் கருதும் ஒரு அலுவலகத்துக்கும், திரும்பவும் வீட்டுக்கும் என அவரது செயல்பாடு உள்ளது."

நீரவ் மோதியுடனான இந்த சந்திப்பு குறித்து மைக் புரௌனும், ராபர்ட் மெண்டிக்கும் எழுதியுள்ள கட்டுரையில், லண்டன் நகரத்தின் வெஸ்ட் எண்டு பகுதியில், சுமார் 8 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டில் தங்கியுள்ளதாகவும், அவர் புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

48 வயதாகும் நீரவ் மோதி தங்கியுள்ள வீட்டின் மாத வாடகை கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், நீரவ் மோதியை நாடு கடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

"நீரவ் மோதி லண்டனில் இருப்பது குறித்து எங்களுக்கு தெரியும் என்பதால்தான் அவரை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் அரசாங்கத்தை தொடர்பு கொண்டோம்" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ரவீஷ் குமார் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நீரவ் மோதி

பட மூலாதாரம், Getty Images

மேலும், நீரவ் மோதியை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக பிரிட்டன் அரசாங்கத்திற்கு இருவேறு கோரிக்கைகள் அனுப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான பதிலை எதிர்நோக்கி இருப்பதாகவும், விஜய் மல்லையா விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த விவகாரத்திலும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

"பொதுவெளியில் நீரவ் மோதி தென்பட்டுவிட்டார் என்பதனால் மட்டும், அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட முடியாது" என்று ரவீஷ் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லண்டனில் வசித்து வரும் நீரவ் மோதி, பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்து தெரியவில்லை.

குறிப்பாக, இந்த காணொளியில் நீரவ் மோதி அணிந்திருந்த மேலாடையின் விலை சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து மைக்கிடம் கேட்டபோது, "அந்த காணொளியில் நீரவ் மோதி அணிந்திருப்பது நெருப்புக்கோழியின் பதப்படுத்தப்பட்ட தோலில் தயாரிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க ஆடை என்பதை எங்களது அலுவலக ஊழியர் கண்டறிந்தார்" என்று மைக் கூறினார்.

நீரவ் மோதி லண்டனில் எங்கு, என்ன செய்கிறார் என்பது குறித்து தங்களது செய்தித்தாள் தொடர்ந்து எழுதவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :