நான்கு தலைமுறைகளாக காலணி அணிவதைத் தவிர்க்கும் தமிழக கிராமம்

காலணிகளுக்கு தடை விதித்த தமிழக கிராமம்

பட மூலாதாரம், KAMALA THIAGARAJAN

    • எழுதியவர், கமலா தியாகராஜன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வீட்டிக்குள்ளே செல்லும்போது காலணிகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்வது இந்தியாவில் இருக்கும் பரவலான வழக்கம்தான். தமிழகத்திலுள்ள அந்தமான் எனும் கிராமத்தில் அதிகம் அறியப்படாத வழக்கம் ஒன்று உள்ளது.

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அந்தமான் கிராமம் . சுமார் 130 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலாளர்கள்.

அந்தமான் கிராமத்தில் நுழையும்போது ஒரு பெரிய வேப்ப மரத்திற்கு அடியில் வழிபாடு செய்து கொண்டிருந்த 70 வயதான ஆறுமுகத்தை சந்தித்தோம்.

பெரிய மரம், அருகில் நீர்தேக்கம், பச்சை பசேலன வயல்கள் மற்றும் கற்கள் நிறைந்த சாலைகள், இங்கிருந்துதான் அக்கிராம எல்லை தொடங்குகிறது. இதே இடத்தில் இருந்துதான், மக்கள் காலணிகளை கழற்றி கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

சில வயது முதிர்ந்த நபர்களை தவிர அந்தமான் கிராமத்தில் யாரும் காலணிகள் அணிவதில்லை. ஆறுமுகமும், காலணிகள் அணிந்திருக்கவில்லை. ஆனாலும், கோடைக்காலம் தொடங்க உள்ளதால், காலணிகள் அணிய திட்டமிட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

காலணிகளுக்கு தடை விதித்த தமிழக கிராமம்

பட மூலாதாரம், KAMALA THIAGARAJAN

காலணிகள் அணிந்து கொள்ளாமல், அவற்றை கைகளை எடுத்துக் கொண்டு, அங்குள்ள சிறுவர்களும் இளைஞர்களும் பள்ளிக்கும் சிலர் வேலைக்கும் செல்கின்றனர். காலணிகளை ஏதோ ஒரு பை போல கைகளில் எடுத்துச் செல்கின்றனர்.

வெறும் கால்களில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அன்புநிதியை நிறுத்தி அவரிடம் பேசினேன். அன்புநிதிக்கு வயது 10. அக்கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

கிராமத்தில் காலணி அணியக்கூடாது என்ற விதியை எப்போதாவது மீறியிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த அன்புநிதி, சக்திவாய்ந்த தெய்வமான முத்யாலம்மா தங்கள் கிராமத்தை காப்பதாகவும், அவரை மதிக்கும் விதமாக இங்கு காலணி அணியக்கூடாது என்றும் தன் அம்மா சொல்லியிருக்கிறார் என்று அவர் கூறினார்.

"நான் வேண்டுமானால் காலணி அணிந்து கொள்ளலாம், ஆனால் அது அனைவருக்கும் பிடித்த ஒரு தோழனை அவமதிப்பதுபோல ஆகிவிடும்," என்கிறார் அன்புநிதி.

இந்த உணர்வுதான், மக்களை இந்த விதியை பின்பற்ற வைக்கிறது என்பதை உணர்ந்தேன். காலணிகள் அணியக்கூடாது என்ற விதியை அங்கு யாரும் நிர்பந்திக்கவில்லை. அது ஏதோ ஒரு மத குறியீடும் கிடையாது. அனைவராலும் மரியாதையோடு பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமாக அது இருக்கிறது.

"இவ்வாறு வாழும் நான்காம் தலைமுறையினர் நாங்கள்" என்கிறார் 53 வயதான கருப்பையா பாண்டே. அவர் அவரது ஷூக்களை கைகளில் எடுத்துச் செல்ல, அவரது மனைவியான வயலில் வேலைப்பார்க்கும் பேச்சியம்மா தனது காலணிகளை அணிந்திருந்தார்.

கிராமத்தினுள் யாரெனும் காலணிகள் அணிந்து வந்தால், இந்த வழக்கம் பற்றிக் கூறுவார்கள். ஆனால், இதைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்கிறார் பேச்சியம்மா.

காலணிகளுக்கு தடை விதித்த தமிழக கிராமம்

பட மூலாதாரம், KAMALA THIAGARAJAN

இது ஒருவரின் விரும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறும் பேச்சியம்மா, அவரின் நான்கு குழந்தைகள் இதை பின்பற்று வேண்டும் என்று அவர்களிடம் கூறியதில்லை என்கிறார். தற்போது வளர்ந்துவிட்ட அவர்கள் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிகிறார்கள். ஆனாலும், கிராமத்துக்கு வரும்போது, காலணிகளை கழற்றிவிட்டே வருவார்கள் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் ஒருகாலத்தில் பயத்தினால் இந்த வழக்கத்தை மக்கள் பின்பற்றி வந்தார்கள்.

"இந்த வழக்கத்தை பின்பற்றவில்லை என்றால் அப்போது கிராமத்தினருக்கு பரீட்சயம் இல்லாத ஒரு வகைக் காய்ச்சல் பரவிவிடும் என்ற கதை உள்ளது," என்கிறார் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பவராக பணிபுரியும் 43 வயதான சுப்பிரமணியம் பிரம்பன்.

"அதற்காக பயந்து நாங்கள் இந்த வழக்கத்தை பின்பற்றவில்லை. நாங்கள் எங்கள் கிராமத்தை புணிதமான இடமாக பார்க்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

இவர் கூறிய கதை எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ள அக்கிராமத்தின் வரலாற்றாசிரியர் ஒருவரை பார்க்குமாறு அங்கிருந்த மக்கள் கூறினார்கள். அவர் பெயர் லக்ஷ்மணன் வீரபத்ரா. அவருக்கு வயது 62.

அவர் கூறிய கதை இதுதான். 70 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தின் வெளியே வேப்ப மரத்துக்கு அடியில், முத்யாலம்மனின் முதல் மண்சிலையை கிராம மக்கள் வைத்தனர். அம்மனுக்கு பூசாரி அலங்காரம் செய்து கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

காலணிகளுக்கு தடை விதித்த தமிழக கிராமம்

பட மூலாதாரம், KAMALA THIAGARAJAN

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஆண் ஒருவர் காலணிகள் அணிந்து அந்த இடத்தை கடந்து சென்றுள்ளார். பூஜையை வெறுப்போடு அந்த மனிதர் பார்த்தாரா என்று தெரியவில்லை, ஆனால், அவர் தவறி கீழே விழுந்து விட்டார். அன்று மாலையே அந்த மனிதருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டுவர மாதங்கள் பல ஆகிவிட்டன.

"அப்போதில் இருந்து இந்த கிராம மக்கள், எந்த விதமான காலணிகளையும் அணிவதில்லை. அதுவே பின்னர் ஒரு வழக்கமாகிவிட்டது" என்று வீரபத்ரா தெரிவித்தார்.

ஒவ்வொரு ஐந்திலிருந்து எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருவிழா நடத்தி, முத்யாலம்மனின் மண்சிலை வேப்ப மரத்தின் கீழ் நிறுவப்படும். மூன்று நாட்கள் அங்கு வைக்கப்படும் அம்மன் அந்த கிராமத்தை ஆசிர்வதிப்பார். பின்னர் அந்த சிலை உடைக்கப்படும்.

வெளியில் இருந்து இக்கிராமத்துக்கு வரும் பலரும் இந்த கதையை ஏதோ மூட நம்பிக்கை என்று எண்ணி புறக்கணித்து விடுவார்கள் என்கிறார் ஓட்டுநராக பணிபுரியும் 40 வயதான சேவகன்.

குறைந்தபட்சம் இந்த வழக்கம், எங்களை ஒன்று சேர்த்துள்ளது, இந்த கிராமத்தை ஒரு குடும்பம் போல உணர வைத்துள்ளது என்றும் சேவகன் தெரிவித்தார்.

பல ஆண்டுகள் கிராமத்தின் வெளியே இருந்திருந்தாலும், இந்த நம்பிக்கையை இன்றும் பின்பற்றுகிறார். இன்றும் கிராமத்தினுள் வெறும் காலில்தான் நடக்கிறார்.

"நாம் யார், எங்கு இருக்கிறோம் என்பதெல்லாம் தாண்டி, நாம் நன்றாக இருப்போம் என்று நினைத்துதான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்திருக்கிறோம். எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனாலும், நாம் வாழகிறோம். எதிர்காலத்துக்காக திட்டமிடுகிறோம். கனவு காண்கிறோம். முன்நோக்கி யோசிக்கிறோம்" என்று கூறுகிறார் வீரபத்ரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :