"ரஃபேல் ஆவணங்களை நாங்கள் திருடவில்லை" - என். ராம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Marina Lystseva\TASS via Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

"ரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் திருடவில்லை; விலை கொடுத்து வாங்கவில்லை. அதனால் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம்.

பிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவம் ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக நிகழ்ந்த பல்வேறு விதிமுறை மீறல்களை, தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் என். ராம், இந்த ஆவணங்கள் திருடப்பட்டு, வெளியிடப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது குறித்தும் ரஃபேல் விவகாரத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படாதது குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். பேட்டியிலிருந்து:

கேள்வி: தற்போதைய ரஃபேல் ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இதில் என்ன பிரச்சனை என்று விளக்க முடியுமா?

தில்: ரஃபேல் விவகாரம் தொடர்பாக இதுவரை நாங்கள் ஐந்து புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். முதலில், ரஃபேல் விமானத்தின் விலை குறித்த கட்டுரை. அதாவது போருக்குத் தயாராக இருக்கும் ஒரு ரஃபேல் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்ல முதலில் அரசு மறுத்துவிட்டது. அதை நாங்கள் வெளியிட்டோம். தற்போது நாம் வாங்கியிருக்கும் விலையை 2007ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 40 சதவீதம் அதிகம். 2012ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 14 சதவீதம் அதிகம் என்பதை தெரிவித்தோம். பேரம்பேசி விலையைக் குறைத்திருக்கலாம் என்பதை அந்தக் கட்டுரையில் நாங்கள் சொல்லியிருந்தோம்.

இரண்டாவதாக, அரசும் பாதுகாப்பு அமைச்சகமும் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தினோம்.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஓலாந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், BERTRAND GUAY / GETTY IMAGES

படக்குறிப்பு, பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஓலாந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

மூன்றாவதாக, ஊழலுக்கு எதிராக இருந்த விதிமுறைகளை நீக்கப்பட்டது குறித்தது வெளிப்படுத்தினோம்.

நான்காவதாக, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்த நிபுணர்கள் குழுவின் குறிப்புகளை அம்பலப்படுத்தினோம். இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவுக்கு பல விஷயத்திலும் கருத்து மாறுபாடு இருந்தது. விலை அதிகம், வங்கி உத்தரவாதம் தேவை அல்லது அரசின் உத்தரவாதம் தேவை, தஸாலின் நிதி நிலை சரியில்லாமல் இருந்ததால், நமக்கு உத்தரவாதம் தேவை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதை வெளியிட்டோம்.

அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த நிதி ஆலோசகரான சுதான்ஷு மொஹந்தியிடம் இது தொடர்பான கோப்புகள் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். தனக்கு நேரமே இல்லை என்று சொன்ன அவர், சில ஆலோசனைகளைச் சொன்னார்.

"அதாவது விமானம் வந்து சேர்வதற்கு 18 மாதங்களுக்கு முன்பாகவே 60 சதவீதப் பணத்தை நாம் கொடுக்கிறோம். அப்படியிருக்கும் நிலையில், escrow கணக்கு ஒன்றைத் துவங்கி, இரு அரசுகளும் ஒப்புக்கொண்டால்தான் தஸால் ஏவியேஷனுக்கும் ஆயுதங்களை வழங்கும் 'எம்பிடிஏ பிரான்ஸ்' நிறுவனத்திற்கும் பணத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்" என்ற ஆலோசனையை அவர் முன்வைத்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள் இந்த விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்தினாலும் பிரதமர் அலுவலகமும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் இது தொடர்பாக தனியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதால், நம் குழுவின் பேரம்பேசும் திறன் முற்றிலும் இல்லாமல் போனது. எதைக் கேட்டாலும், இது தொடர்பாக ஏற்கனவே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது என்பதே தஸால் தரப்பின் பதிலாக இருந்தது.

ஐந்தாவதாக, சமீபத்தில் வெளியான கட்டுரை. அது வங்கி உத்தரவாதம் தொடர்பானது. இது ஒரு முக்கியமான விவகாரம்.

இலங்கை
இலங்கை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடத்தியபோது பேசப்பட்ட விலைக்கும் தற்போது பேசப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரான்ஸிற்கு பயணம் செய்தபோது திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.

36 ரஃபேல் விமானங்களை பறக்கும் நிலையில் வாங்கப் போவதாக அவர் அறிவித்தார். 'They were on the better terms than the earlier one' என்றார். அதாவது முந்தைய அரசு பேசிய நிபந்தனைகள், விலைகளைவிட மேம்பட்ட பேரத்தோடு இவை வாங்கப்படுவதாக சொன்னார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், DASSAULT RAFALE

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்திய பேச்சுவார்த்தைக் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான வேலையே, நல்ல பேரத்தோடு இந்த ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்பதுதான்.

நல்ல பேரம் என்றால் முன்பு பேசப்பட்ட விலையைவிட தற்போதைய விலை குறைவாக இருக்க வேண்டும். அதற்காக, ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட விலையையும் தற்போதைய விலையையும் ஒப்பிடுகிறார்கள். ஆனால், அதில் ஒரு தந்திரம் செய்கிறார்கள்.

அதாவது 2007ல் முதன் முதலில் ஒப்பந்தம் பேசப்பட்டபோது, வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான அம்சம். அதற்கான செலவு 574 மில்லியன் யூரோவாக இந்திய பேச்சுவார்த்தைக் குழு அதனைக் கணக்கிட்டது. வங்கி உத்தரவாதம் என்பது இரு தரப்புக்கும் ஒரு பாதுகாப்பான உத்தரவாதம்.

தஸால் நிறுவனம் முதலில் முன்வைத்த ஒப்பந்தத்தில் இந்த வங்கி உத்தரவாதம் இருந்தது. விலையோடு சேர்த்து இந்தத் தொகையும் கணக்கிடப்பட்டிருந்தது.

இலங்கை
இலங்கை

ஆனால், 2016ல் செய்யப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் இல்லை. ஆகவே, இரு ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட விலைகளையும் ஒப்பிடவே முடியாது.

அதாவது ஒரு ஒப்பந்தத்தில் 574 மில்லியன் யூரோ மதிப்புள்ள வங்கி உத்தரவாதம் இருக்கிறது. மற்றொரு ஒப்பந்தத்தில் அது இல்லை. இந்த இரண்டையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

சிஏஜி இந்த விவகாரத்தில் விசித்திரமாக நடந்துகொண்டது. சிஏஜி அறிக்கையில் வங்கி உத்தரவாதத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

சிஏ.ஜி அறிக்கை

இரண்டு விலைகளையும் ஒப்பிட்டு, புதிய ஒப்பந்தத்தின் விலை குறைவு என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இது தவிர, இதற்கு முரண்பாடான ஒரு தகவலையும் சிஏஜி சொல்கிறது. "வங்கி உத்தரவாதம் இல்லாததைப் பற்றி அரசிடம் கேட்டோம். அது இந்திய அரசுக்குத்தான் சாதகம் என்றார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. அது பிரெஞ்சு நிறுவனத்திற்குத்தான் சாதகம் என்ற முடிவுக்கு வந்தோம்" என்கிறது சிஏஜி.

அப்படியானால், ஏன் விலையைக் கணக்கிடும்போது வங்கி உத்தரவாதம் என்ற அம்சத்தைச் சேர்க்கவில்லை?

முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு அரசே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு மாற்றப்பட்டது.

அதேபோல, இரு தரப்பு ஒப்பந்தத்தின் இணைப்புப் பகுதியில் இருந்த விதிமுறைகளில்தான் ஊழல் தடுப்பு தொடர்பான விதிகள் இருந்து, பிறகு நீக்கப்பட்டன. ஏன் அவை நீக்கப்பட்டன? கமிஷன் ஏஜென்டுகள் இருந்தார்களா?

நம் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மிக நேர்மையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், அரசுத் தரப்பும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தியதால், இவர்கள் தரப்பு பலவீனமடைந்தது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், Not on better terms என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

என். ராம்
படக்குறிப்பு, என். ராம்

ஆனால், முன்பைவிட சிறப்பான பேரமில்லையென்றால் புதிய ஒப்பந்தத்தை ஏன் செய்ய வேண்டும்? பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையிலேயே இருந்த Make in India இதில் கைவிடப்பட்டது.

கே:இந்த விவகாரத்தில் வங்கி உத்தரவாதம் யாருக்கு சாதகமானதாக இருக்கும்? இந்தியாவுக்கா அல்லது தஸாலுக்கு சாதகமாக இருக்குமா?

:வங்கி உத்தரவாதம் நிச்சயம் விலையை அதிகரிக்கும். அந்த உத்தரவாதத்தை உள்ளடக்கி, ஒரு நியாயமான விலையை எதிர்தரப்பு முன்வைக்கும். ஆனால், தற்போதைய ஒப்பந்தத்தில் அது இல்லை.

விலையை நீங்கள் ஒப்பிட விரும்பினால், வங்கி உத்தரவாதத்திற்கு ஆகும் செலவை நீங்கள் கூட்ட வேண்டும். அப்படிச் செய்தால், முந்தைய ஒப்பந்தத்தில் கூறப்படும் விலையே நமக்கு சாதகமான விலையாக இருக்கும். மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

இலங்கை
இலங்கை

வங்கி உத்தரவாதம் மிகவும் அவசியம். காரணம், தஸால் நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டவர்களுக்கே இன்னும் சப்ளை செய்யவில்லை. நிறைய பாக்கி இருக்கிறது. அவர்களது நிதி நிலை சீராக இல்லை. அதனால், பிரெஞ்சு அரசை உத்தரவாதம் அளிக்கச் செய்திருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக Letter of Comfort என்ற ஒன்றை பிரெஞ்சு அரசாங்கத்தினர் அளித்திருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? இந்திய அரசுக்கும் தஸால் ஏவியேஷனுக்கும் இடையில் பிரச்சனை வந்தால், அது தொடர்பான வாதங்கள், வழக்குகள் ஜெனீவாவில்தான் நடக்கும். அங்கு நடப்பதாலேயே பல வழக்குகளில் நாம் தோற்றிருக்கிறோம்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், EORGES GOBET/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

தவிர, நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால்கூட சட்ட ரீதியான எல்லா வாய்ப்புகளும் இல்லாமல்போன பிறகுதான் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும்.

இந்தியா முன்தொகையாக இவ்வளவு பணத்தைக் கொடுத்திருக்கக்கூடாது. முதல் ரஃபேல் விமானம் செப்டம்பரில்தான் வரும். அதற்கு 18 மாதங்களுக்கு முன்பே 60 சதவீதம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன பாதுகாப்பு?

கே:இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, ரஃபேல் விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டவை என அட்டர்னி ஜெனரல் சொல்லியிருக்கிறார்...

:இந்த ஆவணங்களை நாங்கள் திருடவில்லை. நாங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில ஊடகங்கள் அம்மாதிரி செய்கின்றன. நாங்கள் அதைச் செய்யவில்லை. மிக ரகசியமான தொடர்புகளின் மூலம் அந்த ஆவணங்கள் கிடைத்தன. இதுவரை பல முறை இம்மாதிரி ஆவணங்களை வெளியிட்டிருக்கிறோம்.

போஃபர்ஸ் விவகாரத்தின்போது வெளியிட்டிருக்கிறோம். 1981ல் சர்வதேச நிதியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. Extended fund facility என்ற பெயரில் 5 பில்லியன் எஸ்டிஆர் அதாவது 6.5 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

ஒப்பந்தம்

பட மூலாதாரம், BARCROFT MEDIA

ஆனால், அதற்கு தொழிலாளர் விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. 64 பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத் தொகுப்பு முழுமையாக எங்களுக்குக் கிடைத்தது. அதில் இந்திய அரசின் பல ரகசிய ஆவணங்கள் இருந்தன. அதனை அப்படியே வெளியிட்டோம். அப்போது யாரும் stolen document என்று சொல்லவில்லை.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணே இம்மாதிரி ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார். அன்று நீதிமன்றம் அதனை ஆராய்ந்தது. அப்போது யாரும் stolen document என்று சொல்லவில்லை.

சர்வதேச ரீதியில் பல சட்டங்கள் இதற்கு சாதகமாக இருக்கின்றன. 1970களில் டேனியல் எல்ஸ்பர்க் என்பவர் அமெரிக்காவில் பெண்டகன் பேப்பர்ஸ் எனப்படும் ஆவணங்களை வெளியிட்டார். தானே வெளியிட்டதாக வெளிப்படையாகவும் சொன்னார்.

இலங்கை
இலங்கை

நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. அதேபோல வாட்டர்கேட் ஊழல் விவகாரம், விக்கிலீக்ஸ் விவகாரம் போன்றவற்றிலும் சாதகமாகத்தான் சட்டங்கள் இருந்தன.

விக்கிலீக்ஸ் வெளிவந்தபோது, அமெரிக்கா அவற்றை திருடப்பட்ட ஆவணங்கள் என்றுதான் சொன்னது. ஆனால், அவற்றை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது? அமெரிக்க சட்டங்கள் பாதுகாப்புத் தருகின்றன.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்தின் 19 (1) A சட்டப்பிரிவு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டம் அதில் வராது. அதேபோல, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8 (1) - I மற்றும் 8 - 2 சட்டப் பிரிவுகள், அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறியவையாக இருக்கின்றன.

தவிர, அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டம் இப்போது எதற்காக இருக்க வேண்டும்? 1923ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் நலனைப் பாதுகாக்க அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

அது சுதந்திர இயக்கத்திற்கு எதிராக, பிரிட்டிஷ் அரசின் ஊழல்களை வெளிப்படுத்தாமல் இருக்க கொண்டுவரப்பட்ட சட்டம் அது. இப்போது அந்தச் சட்டம் எதற்கு? அதை நீக்க வேண்டுமென பல புத்தகங்கள் வந்துவிட்டன. அந்தச் சட்டத்தின் வரையறை மிகப் பெரியது. எதனை வேண்டுமானாலும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும்.

ஆனால், அந்தச் சட்டம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டால் அரசுக்கு எதிராக புலனாய்வுச் செய்திகளையே வெளியிட முடியாது.

அதனால்தான் எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட ஊடக நலன் காக்கும் அமைப்புகள் அட்டர்னி ஜெனரலின் கருத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றன. பல இதழ்கள் தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்த விவகாரத்தைச் சந்திக்க தி இந்து தயாராகவே இருக்கிறது.

கே:இம்மாதிரியான விவகாரங்களைக் கையாளும்போது ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என்ன?

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

: தனிநபர்களின் விவகாரங்களை வெளியிடக்கூடாது. தனி நபர்களின் பாலியல் தொடர்பான விவகாரங்களைத் தோண்டியெடுத்து வெளியிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். ஆனால், அதையும் சிலர் செய்கிறார்கள்.

இம்மாதிரி ஒன்றை வெளியிடும்போது அதில் பொதுநலன் இருக்க வேண்டும். Public interest என்றால் not what interests the public. அதாவது மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தை வெளியிடக்கூடாது. ஒரு விஷயம் பொது நலனுக்கு உகந்ததா, இல்லையா என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும்.

உதாரணமாக, நாங்கள் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிடும்போது அதில் ஓர் ஆவணத்தில் ஆஃப்கானிஸ்தானில் பணியாற்றும் சில கன்னியாஸ்த்ரீகளைப் பற்றிய தகவல்கள் இருந்தன. அவை தேவையில்லாத தகவல்கள். அவற்றை நாங்கள் நீக்கிவிட்டோம்.

ஆனால், ரஃபேல் விவகாரத்தில் தனிநபர் சார்ந்த விஷயம் ஏதுமில்லையே? விலை போன்ற அம்சங்கள்தானே இருக்கின்றன. ரஃபேல் விமானங்களில் இந்தியாவுக்காக செய்யப்படும் மாற்றங்கள் குறித்து பல ராணுவ அதிகாரிகள் பேசி, அவற்றை பல இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன.

ரஃபேல் போர் விமானம் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

அவற்றில் உள்ள ரடார், ஹெல்மட்டிலேயே உள்ள டிஸ்பிளே போன்ற அம்சங்களைப் பற்றி எல்லாம் செய்திகள் வெளியாகிவிட்டன. இவையெல்லாம் ரஃபால் விமானத்தில் உள்ள சிறந்த அம்சங்கள் என்று கூறி, பாதுகாப்புத் துறையே இந்தத் தகவல்களை கசியவிட்டது.

எங்களுக்கும் இந்த தகவல்கள் தெரியும். இவையெல்லாம் ஏற்கனவே வெளிவந்த தகவல்கள் என்றாலும் அவற்றை நாங்கள் வெளியிடவில்லை.

கே: அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ், இம்மாதிரி ஆவணங்களை வெளியிடும் ஊடகங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

: எடுக்க முடியாது. எடிட்டர்ஸ் கில்டு அறிக்கையில் ஒரு வரி இருக்கிறது. அதாவது, ஊடகங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் எதிராக இந்தச் சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என அட்டர்னி ஜெனரல் பிறகு சொன்னதாக அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் அடிப்படையில் அது எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தில் அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை; நடவடிக்கை எடுப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திப்போம். ஆனால், அதற்குப் பெரும் எதிர்ப்பு வரும். தேர்தலில் பெரிய விவகாரமாகிவிடும். அதனால், தயங்குவார்கள்.

கே:புல்வாமா தாக்குதலையடுத்து, இதுபோன்ற விவகாரங்களைப் பற்றி எழுதுவது குறைந்துவிட்டதுபோலத் தெரிகிறதே..

கோப்புப்படம்

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images

:இந்தச் செய்திகளின் தாக்கம் குறைந்திருக்கலாம். புல்வாமா தாக்குதல் இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களாக இந்த விவகாரம் பேசப்படும் விவகாரமாக இல்லை என்பது உண்மைதான்.

கே: நான் கேட்க விரும்புவது, இந்த ஆவணங்கள் முன்கூட்டியே கிடைத்து தாக்குதல் தொடர்பான செய்திகளால், இதனை வெளியிடுவதைத் தாமதப்படுத்தினீர்களா என்பதைத்தான்..

:இல்லை. இம்மாதிரி ஆவணங்கள் கிடைத்தால் உடனே போட்டுவிடுவோம். கிடைக்கும் ஆவணங்களை ஆராய்ந்து, உண்மையா இல்லையா என்று பார்ப்பதற்கான காலஅவகாசத்தை மட்டும்தான் எடுத்துக்கொள்வோம். இந்த ஐந்து ஆவணங்களில், நான்கை கிடைத்த நாளிலேயே வெளியிட்டுவிட்டோம். வேறு யாருக்கும் கிடைத்து, அவர்கள் முன்கூட்டியே வெளியிட்டுவிடுவார்களோ என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா?

கே:ரஃபேல் தொடர்பாக வெளியாகும் இம்மாதிரி செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கம் எதையும் ஏற்படுத்துமா?

: கட்டாயமாக ஏற்படுத்தும். ராகுல் காந்தி இது தொடர்பாக மிகத் தீவிரமாக பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் இது முக்கியமான விஷயம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தேர்தலில் எப்போதுமே வாழ்வாதாரப் பிரச்சனைதான் முதல் இடத்தில் வரும். அதற்குப் பிறகு விவசாயிகள் பிரச்சனை. அதற்குப் பிறகுதான் இதெல்லாம் வரும்.

போஃபர்ஸினால்தான் ராஜீவ் காந்தி வீழ்ந்தார் என்கிறார்கள். அது உண்மையல்ல. வேறு பல விவகாரங்களும் இருந்தன.

அதேபோல, 2ஜி விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதனால்தானா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்றது? இல்லை. வேறு விவகாரங்களும் இருந்தன.

எனக்குத் தெரிந்து ஊழல் என்பது எப்போதுமே தேர்தலின்போது 'நம்பர் ஒன்' விவகாரமாக இருந்ததில்லை. ஆனால், கவனப்படுத்தக்கூடிய விவகாரமாக இருக்கும். ஆகவே, ரஃபேல் விவகாரத்திற்கு ஒரு தாக்கம் இருக்கும். ஆனால், அதுவே முதன்மை விவகாரமாக இருக்காது.

கே:இந்தியா போஃபர்ஸ் விவகாரத்தை எதிர்கொள்ளும் விதத்திற்கும் தற்போது ரஃபேல் விவகாரத்தை எதிர்கொள்ளும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா?

:வித்தியாசம் இருக்கிறது. இப்போது பலர் அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். குறிப்பாக டிவி சேனல்கள் அப்படிச் செய்கின்றன. ஆனாலும் சமூக வலைதளங்களின் காரணமாக, போஃபர்ஸைவிட இந்த விவகாரம் அதிகமாகப் பரவியிருக்கிறது. அதற்கு என்ன தாக்கம் இருக்குமென இப்போது தெரியாது.

போஃபர்ஸ் விவகாரம் வெளியானபோது, எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அது தொடர்பான செய்திகளை வெளியிட்டன.

அருண் ஷோரி தலைமையிலான அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதில் தீவிரமாக ஈடுபட்டது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் போட்டியிருந்தது.

ராம் ஜெத்மலானி ராஜீவ் காந்திக்கு தினமும் 10 கேள்விகளை எழுப்புவார். இந்தியா டுடே, ஸ்டேட்ஸ்மேன் போன்றவையும் தீவிரமாக இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன.

இப்போது கேரவான் இதழைத் தவிர்த்துப் பார்த்தால், ஸ்க்ரோல், தி வயர் போன்ற இணையதளங்கள்தான் இந்தச் செய்திகளை வெளியிடுகிறார்கள். போஃபர்ஸோடு ஒப்பிட்டால் அதிகம் பேர் இதைப் பற்றி படித்திருக்கிறார்கள்.

போஃபர்ஸில் முக்கியமான வித்தியாசம், அந்த கமிஷன் முன்பே வழங்கப்பட்டுவிட்டது. எவ்வளவு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.

கே:அந்த காலகட்டத்தில் இருந்ததைப் போல இப்போதும் ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றனவா?

:பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. என்டிடிவி மாதிரி ஊடகங்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் பாய்கின்றன. வருமான வரித் துறை, சிபிஐ போன்றவை விசாரிக்கின்றன.

ரஃபேல் சர்ச்சையின் பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, ரஃபேல் சர்ச்சையின் பின்னணி என்ன?

போஃபர்ஸ் விவகாரத்தின்போது எங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. காரணம் நாங்கள் வேறு எந்த தொழிலிலும் இல்லை. தொலைக்காட்சிகளை நடத்துபவர்களுக்கு வேறு தொழில்கள் இருக்கலாம். போபர்ஸ் காலத்தில் அப்படி இல்லை.

ஆனால், ஒருவர் தைரியமாக ஒன்றை வெளியிட்டால், மற்றவர்களும் வெளியிட வேண்டிய கட்டாயம் வரும். மக்கள் கேட்பார்கள். அதனால் நிலைமை இப்போது மாறிவருகிறது.

தவிர, ஊடகத் துறையின் முகம் வெகுவாக மாறிவிட்டது. லாபம் குறைய ஆரம்பித்திருக்கிறது. அரசு விளம்பரம் கிடைக்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருக்கிறது.

தி ஹிந்து உள்பட எல்லா ஊடக நிறுவனங்களும் அழுத்தத்தில்தான் இருக்கின்றன. முன்பு பத்திரிகைகளின் வருவாயில் 70-80 சதவீதம் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது.

டிஜிட்டல் நியூஸ் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. டிஜிட்டல் செய்திகளுக்கு முன்பே விலை நிர்ணயித்திருக்க வேண்டும். மிகக் குறைந்த விலையாவது வைத்திருக்க வேண்டும்.

ஆனால், யாருக்கும் அந்த துணிச்சல் இல்லை. இப்போது விளம்பரம் குறைந்திருக்கிறது. விரைவில் சர்க்குலேஷனும் குறையும். அதனால், தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை தீவிர தேசப்பற்றுதான் வெற்றிபெறும் என நினைக்கிறார்கள்.

ரஃபேல் விவகாரம்: "எங்கள் பக்கம் உண்மை இருக்கிறது"

காணொளிக் குறிப்பு, “ரஃபேல் விவகாரம்: எங்கள் பக்கம் உண்மை இருப்பதால், பதிலளித்து கொண்டே இருப்போம்”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :