'கும்பல் கொலைக்கு பயந்தே நீரவ் மோதி இந்தியா திரும்பவில்லை'

பட மூலாதாரம், facebook
இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - 'நீரவ் மோதி ஒரு கலைஞர்'
"எனது கட்சிக்காரர் ஒரு கலைஞர்; ஒரு வடிவமைப்பாளர்; அவர் நாட்டைவிட்டுத் தப்பிச்செல்லவில்லை. அவரது உறவினர் மெகுல் சோக்சி பயப்படுவதைப் போலவே இந்தியா திரும்பினால் கும்பல் கொலை செய்யப்படலாம் என்ற பயத்தில்தான் அவர் நாடு திரும்பவில்லை," என்று பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வைர வியாபாரி நீரவ் மோதியின் வழக்கறிஞர் மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நீரவ் மோதி இந்தியாவைவிட்டு வெளியேறியபோது அவர் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்றும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிமன்றத்தில் கூறினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - யோகிக்கு சவால்விடும் சச்சின் பைலட்

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒரே இஸ்லாமிய வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சச்சின் பைலட் சவால் விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் டாங்க் தொகுதியில் போட்டியிடும் சச்சின் பைலட்டை எதிர்த்து பாஜக முன்னாள் அமைச்சர் யூனுஸ் கானை களமிறங்கியுள்ளது.
"அவர் பிரசாரம் செய்ய வரமாட்டார். ஏனெனில் அவர்கள் கோயில் மற்றும் மசூதியைப் பற்றிப் பேசியே வாக்கு கேட்பார்கள். குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைப் பிரச்சனைகளைப் பற்றி பேசி வாக்கு சேகரிக்க மாட்டார்கள்," என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.

தினமணி - பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மொழிகளில் பயிற்சி

பட மூலாதாரம், NOAH SEELAM
பள்ளிகளில் தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம், உருது, காஷ்மீரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் மாநில ஆட்சி மொழியாகவும் உள்ளன.இந்த மொழிகளை, நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், அனைத்துப் பள்ளிகளிலும், ஏதாவது ஐந்து அலுவல் மொழிகளை ஒவ்வொரு வாரமும் பயிற்றுவித்து, மாணவர்களுக்குப் பிறமொழிகளையும் பரிச்சயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக "பாஷா சங்கம்' என்ற மொழி மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கும், மாநில பள்ளிக் கல்வித் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர் - மாத விலக்கு காலத்தில், பெண்கள், வீதிகளில் நடக்க தடை

பட மூலாதாரம், ANIKET MITRA
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ஒரு கிராமத்தில், மாத விலக்கு காலத்தில், பெண்கள், வீதிகளில் நடக்கவும், மாணவியர் பள்ளிக்கு செல்லவும் அனுமதிக்கப்படாதது குறித்து, விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பிதோராகர் மாவட்டத்தில் உள்ள, செயில் கிராமத்தில், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா - நேபாளம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில், மாத விலக்கு காலங்களில், பெண்கள், சாலைகளில் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டில், சமையல் அறையில் நுழைய தடை விதிக்கப்படும். அவர்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அனுமதி இல்லை.பள்ளி செல்லும் மாணவியர், மாத விலக்கு காலங்களில், 5 - 7 நாட்கள் வரை, பள்ளிக்குள் அனுமதிக்கப்படாததால், கல்வி பயில்வதில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












