பாஜக அமைச்சர் வி.கே.சிங்: 'இந்திய ராணுவத்தை மோதியின் ராணுவம் என்பவர்கள் தேசத் துரோகிகள்'

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சரும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவம் மோதியின் ராணுவம் என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவம் நாட்டுக்கே சொந்தமானது. எந்த ஒரு தலைவருக்கும் சொந்தமானது அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது, "காங்கிரஸ் கட்சியினர் தீவிரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கின்றனர். மோதிஜியின் ராணுவம் அவர்களை சுட்டுத் தள்ளுகிறது," என ஆத்யநாத் பேசினார்.
அவ்வாறு கூறுவது சரியானதா என பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், வி.கே.சிங் உடன் மேற்கொண்ட நேர்காணலின்போது கேட்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
"பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரத்தில் அனைவரும் ராணுவம் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் எந்த ராணுவத்தைக் குறிப்பிடுகின்றனர். இந்திய ராணுவத்தையா, கட்சியின் தொண்டர் படையையா? இது எந்தப் பொருளில் பேசப்படுகிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை யாரேனும் இந்திய ராணுவம் மோதியின் ராணுவம் என்று கூறினால் அது தவறு மட்டுமல்ல, அப்படிப் பேசுபவர் துரோகியும்கூட. இந்திய ராணுவம், இந்தியாவுக்கே சொந்தமானது. எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"இந்தியப் படைகளில் இருப்பவர்கள் நடுநிலையாக இருக்கின்றனர். அரசியலில் இருந்து விலகி இருப்பவர்கள். நீங்கள் இந்திய ராணுவத்தைப் பற்றிப் பேசினால் இந்திய ராணுவம் குறித்து மட்டும் பேசுங்கள். அரசியல் கட்சியினர் பற்றிப் பேசினால் அவர்கள்தான் மோதியின் படை அல்லது பாஜவின் படை என்று அழைக்கப்படுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது," என்றார் சிங்.
இந்தியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் வடக்கத்திய படைப்பிரிவுக்கு தலைமை வகித்த ஜெனரல் ஹூடா ஆகியோர் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
"அவர்கள் இது அரசியலாக்கப்படுவதாகக் கூறவில்லை. இந்த சாதனைகள் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவே கூறினார்கள். இது செய்யக்கூடாது என்று டி.எஸ்.ஹூடா கூறியுள்ளார், " என்று பதிலளித்தார் சிங்.
இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து இந்தித் திரைப்படம் எடுக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிங், எல்லா விவகாரங்கள் குறித்தும் படம் எடுக்கப்படுவதாகவும், 1990களில் 'ப்ரஹார்' என்று தீவிரவாதம் குறித்த படம் ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படைவீரர்களின் படங்கள் அரசியல் ஊர்வலங்களில் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங், "அவர்கள் படம் உள்ள பதாகையை வைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி அரசியலாக்குவதாகும். அதை அரசியல் செய்வது என்று சொல்பவர்கள், அரசியலாக்குவது என்றால் என்ன என்பது குறித்து பாலபாடம் படிக்க வேண்டும்," என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












