'ராகுல் காந்தி முஸ்லிம் வாக்குகளுக்காகவே வயநாட்டில் போட்டியிடுகிறார்' - பாஜக கூட்டணி வேட்பாளர்

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

தினத்தந்தி - வயநாடு தொகுதியில் இன்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, இன்று (வியாழக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவுடன் வாகன பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி நடத்துவார் என தெரிகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல் நலக்குறைவு காரணமாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாரத் தர்ம ஜனசேனா தலைவருமான துஷார் வெல்லப்பள்ளி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காகவே ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக குற்றம் சாட்டினார்.

இலங்கை

தி இந்து - வெடிபொருட்களுடன் கைதான 71 வயது முதியவர்

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், வெடிகுண்டு தயாரிப்பதற்கான உபகாரங்கள் மற்றும் வேதிப்பொருட்களை தனது வீட்டில் வைத்திருந்த 71 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜாராம் அபாங் எனும் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், 59 டெட்டனேட்டர் பாகங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

"தனது மனைவிக்கு திருமணத்துக்கு வெளியேயான உறவு இருப்பதாக சந்தேகப்பட்ட அவர் 2003இல் அவரது மனைவியை வெடிபொருட்களை வெடிக்கச் செய்து கொல்ல முயன்றார். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. பின்னர் கைதுசெய்யப்பட்ட அவர் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார்," என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை

தினமணி - மோதிக்கு சவால்விடும் மம்தா

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Hindusta times via Getty

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நாங்கள் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை நான் நிரூபிக்கிறேன்; என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த பிரதமர் மோதி தயாராக இருக்கிறாரா? என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கூச்பிஹாரில் புதன்கிழமை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

பிரதமர் மோதி காலாவதியான அரசியல் தலைவர். விரைவில் அவர் முன்னாள் பிரதமராகி விடுவார். மேற்கு வங்கத்தில் மாநில அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோதி என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறாரா? தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்ட மேடையானாலும் சரி. நான் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

நான் பிரதமர் மோதி போன்று பொய் பிரசாரம் மேற்கொள்பவர் அல்ல. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அவர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். அவரது ஆட்சியில்தான் நமது நாட்டில் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றார் மம்தா.

இலங்கை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - வரி செலுத்துவதை நிறுத்திய 88 லட்சம் பேர்

வருமான வரி

பட மூலாதாரம், Getty Images

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவதை நிறுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

பணமதிப்பு நீக்கத்துக்கு முந்தைய நிதியாண்டான 2015-26இல் நாடு முழுதும், வருமான வரி தாக்கல் செய்தவதை நிறுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8.56 லட்சமாக இருந்தது. இது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016-17ஆம் நிதியாண்டில் 88.04 லட்சமாக அதிகரித்துள்ளது என வருமான வரித்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நடவடிக்கைகள் குறைந்ததால் உண்டான வேலையிழப்பு அல்லது வருவாய் இழப்பு ஆகியன வரிக் கணக்கைத் தாக்கல் செய்தவதை நிறுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 85.75 லட்சத்தில் இருந்து, 106.95 லட்சங்களாக அதிகரித்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :