தென்னிந்திய மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன?

பட மூலாதாரம், Hindustan Times
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "தற்போதைய பாஜக அரசாங்கம் தங்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று தென்னிந்திய மாநிலங்கள் நினைப்பதால் அங்கு எனக்கான தேவை உள்ளது. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி தங்களை விரோத போக்குடன் நடத்துவதாக தென்னிந்திய மாநிலங்கள் கருதுகின்றன" என்று தெரிவித்தார்.
"நாட்டில் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளில் தாங்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை" என்று அவர்கள் கருதுகிறார்கள்.
"எனவே, காங்கிரஸ் கட்சியும், நானும் தென்னிந்திய மக்களுக்காக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காகவே, நான் கேரளாவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று அவர் கூறினார்.
’நீட் தேர்வு நீக்கப்படும்’
நீட் தேர்வு நீக்கப்படுமெனவும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமென்றும் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
நீட் தேர்வு குறித்து கல்வி என்ற பிரிவின் கீழ் வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், "நீட் தேர்வானது சில மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. மேலும்அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களைச் சேர்க்கும் மாநிலங்களின் உரிமையிலும் இது தலையிடுகிறது. ஆகவே, நாங்கள் நீட் தேர்வை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். பதிலாக, அதே தரத்தில் மாநில அளவிலான தேர்வை அறிமுகப்படுத்துவோம்." என்று கூறியுள்ளது.
மேலும் பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும், உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தத் தேர்வு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பிரதீபா என்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் இதேபோல நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருப்பது தமிழகத்துக்கு ஆதரவான நிலைபாடு என்று கூறப்படுகிறது.
அதேபோல இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A பிரிவு நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













