காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - ‘நீட் தேர்வு ரத்து’ : முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ராகுல் காந்தி, ''ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் எங்கள் கட்சி குழுவினரிடம் மூடிய கதவுகளுக்கு பின்னர் அறிக்கையை தயாரிப்பது நோக்கம் அல்ல. மக்களின் எண்ணத்தை எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினேன்'' என்று தெரிவித்தார்.
''மேலும் இந்த தேர்தல் அறிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்'' என்றார் ராகுல்காந்தி.
நியாய் திட்டம், அதாவது குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம், மாதம் 6000 ரூபாய் குறித்து ராகுல் வெளியிட்ட திட்டம் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ள சூழலில் இன்று தேர்தல் அறிக்கையை தலைமை கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார் ராகுல்.
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் முன்னதாக பேசிய ப. சிதம்பரம், ''வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம்'' என்றார்.
''முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும்'' என்று அவர் மேலும் கூறினார்.

5 முக்கிய அம்சங்கள்
1. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
2. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
3. மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
5. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

- தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
- ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
- பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
- தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.
- 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
- 2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
- மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
- காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

வயநாட்டில் ஏன் போட்டி?
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி ''தென் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதுமே காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. நான் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவது அதற்கு ஒரு சான்றுதான்'' என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ''நீட் தேர்விற்கு பதிலாக மாநில அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். மாநிலத்தின் விருப்படி மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்தப்படும்'' என்றும் ராகுல்காந்தி கூறினார்.
சாத்தியமில்லாதது
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்கள் சந்திப்பில், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல நிறைவேற்ற முடியாத அம்சங்கள் உள்ளன. நிறைவேற்றக்கூடியதாக அக்கட்சி தெரிவித்த வாக்குறுதிகள் நாட்டின் நலனுக்கு ஆபத்தானவை. காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய முயற்சி செய்கிறது.” என்றார்.
பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













