பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி: இந்திய நடனங்களுக்காக உலகளவில் பிரசாரம்

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
- எழுதியவர், ஐஸ்வர்யா ரவிசங்கர்
- பதவி, பிபிசி தமிழ்
பழம்பெரும் பாரம்பரியமும் கலாச்சாரமும் வரலாற்று சிறப்பும் கொண்ட இந்திய நாட்டில் பாரம்பரிய கலைகளுக்கு சில ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துகொண்டே வருகிறது. பழம்பெரும் கலைகளை மீட்டெடுக்கவும் உலக அளவில் இந்த கலைகளை கொண்டு சேர்க்கவும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தரப்பிலும் கலை ஆர்வலர்கள் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் இந்திய பாரம்பரிய நடனங்களால் ஈர்க்கப்பட்டு அதனை முறையாக பயின்று உலக நாடுகள் பலவற்றிலும் அரங்கேற்றி வருகிறார் வெளிநாட்டு பெண்மணி ஒருவர்.
பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் பதினான்கு ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றிய காத்யா தோஷிவாவிற்கு காலப்போக்கில் அந்த வேலை சலிப்பை ஏற்படுத்தியது.
இவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவரது கணவர் ரோசன் கென்கோவ், யோகா கலையை அறிமுகம் செய்துவைத்தார். இந்த சம்பவம்தான் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
இப்போது காத்யா பரதநாட்டியம், ஒடிசி, கதக் போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை ஆர்வத்துடன் கற்று வருவதோடு பல்கேரியாவில் நடன பள்ளி ஒன்றை தொடங்கி இந்த கலைகளை அந்நாட்டு மக்களுக்கு கற்பித்து வருகிறார். இதுகுறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அவரை நேரில் சந்தித்தது.
பாரதநாட்டியத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
யோகாவில் பயிற்சி பெறத் தொடங்கிய நீங்கள் இந்திய பாரம்பரிய நடனங்களை கற்றது எப்படி என்று காத்யாவிடம் கேட்டபோது, ''நான் 2005ஆம் ஆண்டில் பல்கேரியாவில் வசிக்கும் திஹோமிர் மிஹய்லோவ் என்பவரிடம் யோகா பயிலத் தொடங்கினேன். யோகா கலையின் ஆழத்தை அறிந்துகொள்ள இந்தியாவிற்கு 2013ஆம் ஆண்டில் முதல் முறையாக வந்தபோது, இந்தியாவின் கலை, கலாசாரம், உணவு முறை, மொழிகளின் வரலாறு, பாரம்பரிய நடனங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது'' என்று தொடங்கினார்.
''தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட பரத கலையை பற்றி நான் கேள்விப்பட்டவுடன் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், உண்மையில் இந்த நடன அசைவுகள் நான் நினைத்ததைவிட மிகவும் கடினமாக இருந்தன. பரதத்தைக் கற்க ஆர்வம் மட்டும் போதாது, மனதை ஒருமுகப்படுத்தி, முழு கவனத்தையும் நடனத்தின் மீது செலுத்தி கடினமாக பயிற்சி செய்ய வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.

''முதலில் இதை ஒரு பொழுபோக்காகத்தான் கற்கத் தொடங்கினேன். இந்தியாவில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்று பல்கேரியா திரும்பியவுடன் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், வேலையில் என்னால் பழையபடி கவனம் செலுத்தமுடியவில்லை. நடன அசைவுகள், இசையோடு ஒன்றி எப்படி நடனம் ஆடுவது, நான் கற்றுக்கொண்ட நடனத்தோடு தொடர்புடைய மந்திரங்கள் போன்றவற்றில்தான் என் எண்ணம் சென்றது.'' என்கிறார் நடனம் கற்பதற்காக பொறியாளர் பணியை விட்டு விலகிய காத்யா தோஷிவா.
குடும்பத்தினரின் ஆதரவு
''வேலையை விட்டு விலகிய பிறகு எப்படி வருவாய் ஈட்டப் போகிறேன் என்று வருந்திக்கொண்டிருந்தபோது எனது குடும்பத்தினர் எனக்கு பேராதரவாக இருந்தனர். 'உன் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம்; நடனம் ஆடும்போது உன் முகத்தில் தெரியும் அளவில்லா மகிழ்ச்சியை நான் எப்போதும் பார்க்க வேண்டும். கவலைப்படாதே, நாம் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம். பரதத்தை தொடர்ந்து கற்றுக்கொள்' என்று என்னை தட்டிக்கொடுத்தார் என் கணவர் ரோசன்'' என்று உணர்ச்சி போங்க கூறினார் காத்யா தோஷிவா.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
மற்றவர்களைப் போல் பல்கேரியாவின் பாரம்பரிய நடனத்தை கற்ற அனுபவம் தனக்கு இருந்தாலும் வேறு எந்த வகை நடனமும் தனக்கு தெரியாது என்று கூறும் காத்யா, பரதநாட்டியம் கற்ற பிறகு, இந்தியாவின் மற்ற பாரம்பரிய நடனங்களையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். வாரணாசியைச் சேர்ந்த ரவிசங்கர் மிஷ்ரா என்பவரிடம் கதக் நடனத்தையும், புனேவை சேர்ந்த நிவேதிதா பாத்வே என்பவரிடம் பரதநாட்டியமும், ஒடிசி நடனத்தை பெங்களூருவில் வசிக்கும் ஷர்மிளா முகர்ஜியிடமும் இவர் கற்று வருகிறார்.
அதோடு மேற்கத்திய நடனங்களையும் தற்போது பயின்று வரும் காத்யா, தனது படைப்பாற்றல் மூலம் பல வகை நடனங்களை ஒருங்கிணைத்து மேடைகளில் அரங்கேற்றி வருகிறார். யோகாவை அறிமுகம் செய்துவைத்த காத்யாவின் கணவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காத்யா தபேலாவை அறிமுகம் செய்துவைத்தார். 2018ஆம் ஆண்டில் பல்கேரியாவிற்கு அலுவல்பூர்வமாக சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இவரது கணவர் ரோசன் தபேலா வாசிக்க தான் அதற்கு நடனம் ஆடிய அனுபவங்களையும் நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
நான் மிகவும் பெருமையடைகிறேன் - காத்யாவின் கணவர் ரோசன்
காத்யாவின் நடன பயணத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் அவரது கணவர் ரோசன் கென்கோவ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''காத்யா தோஷிவா எனது மனைவியாக அமைந்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன். நான் தபேலா வாசிக்க, அவர் பரதநாட்டியம், கதக், ஒடிசி ஆகிய மூன்று நடனங்களையும் மேடைகளில் ஆடுவார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது'' என்கிறார்.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
இந்திய நடனங்களை உலகளவில் அரங்கேற்றி வருகிறார்
இந்திய மொழிகள் தெரியாமல் நடனங்களை கற்பது எவ்வளவு கடினமாக இருந்தது என்று காத்யாவிடம் கேட்டபோது, ''எந்த பாடலுக்கு நடனம் ஆடப்போகிறோமோ அதில் வரும் வரிகள் குறித்த புரிதல் இருந்தால் நடன அசைவுகளையும் முக பாவனைகளையும் கற்பதற்கு எளிதாக இருக்கும். அந்த வகையில், பாடலில் வரும் கதைகளை எனது நடன குருக்கள் தெளிவாகவும், ஆழமாகவும் ஆங்கிலத்தில் எனக்கு விளக்குவார்கள். அதோடு சில மந்திரங்களையும் ஒரு சில வார்த்தைகளையும் பொருள்புரிந்து கற்றுக்கொண்டதாலும் அவற்றை அடிக்கடி மனதிற்குள் சொல்லிப் பார்ப்பதாலும் நினைவில் வைத்துக்கொள்ளமுடிகிறது'' என்றார்.
பல்கேரியாவில் மட்டுமில்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளான செர்பியா, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்திய பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றி வருகிறார் காத்யா. பல்கேரிய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நாட்டுப்புற நடனம் (ஃபோக் டான்ஸ்), ஃபியூசன், பாலிவுட் போன்ற பல வகை நடனங்களை குழுவாக அரங்கேற்றி வரும் இவர், ''இந்திய பாரம்பரிய நடனங்களை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்க வேண்டும். மேலும் இதனை எனது குழுவினருடன் இணைந்து பெரிய மேடைகளில் அரங்கேற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்கேரியாவின் கலை ஆர்வலர்கள் ஆதரவுடன் இது நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன்'' என்கிறார்.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
பல்கேரியாவில் நடன பள்ளி
பல்கேரிய மக்கள் மத்தியில் இந்திய நடனங்களுக்கான வரவேற்பு குறித்து காத்யாவிடம் கேட்டபோது ''பல்கேரியாவில் பல மேடைகளில் நான் இந்திய நடனங்களை ஆடியிருக்கிறேன். உண்மையில் எங்கள் நாட்டு மக்கள் இந்திய நடனங்களை ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள். குறிப்பாக விதவிதமான நடன அசைவுகள், பாடல் வரிகள், சில கலாசார அடையாளங்களான மருதாணி, கால் சலங்கை போன்றவற்றை வியப்புடன் பார்க்கிறார்கள்'' என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
காத்யா தொடங்கியுள்ள நடன பள்ளி குறித்து கேட்டபோது, "நடனம் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. நான் கற்றுக்கொண்ட இந்த பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட கலைகளை ஆர்வமுள்ள பிறருக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். எனவே பல்கேரியாவில் எனது வீட்டிற்கு அருகே அமைந்துள்ள இந்திரா காந்தி என்னும் பள்ளியில் மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறேன்." என்கிறார்.
அதோடு காயா என்னும் நடன பள்ளியை பல்கேரியாவில் நடத்தி வரும் இவர், ''எனது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நடனத்தையும், இந்திய பாரம்பரியம் மற்றும் கடவுகள்கள் குறித்தும் கற்று வருகிறார்கள். என்னுடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.
இந்திய பெண்களைப் போல் அழகிய ஆடைகள், ஆபரணங்கள் அணிந்துகொள்வது, நடனத்திற்கு ஏற்றவாறு ஒப்பனை செய்துகொள்வது ஆகியவை தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக என்னிடம் கூறுவார்கள்'' என்று புன்னகை ததும்பும் முகத்தோடு கூறுகிறார் காத்யா தோஷிவா.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
"உங்களுக்கும் நடனம் கற்க ஆசையா?"
''என் நடன குருக்களிடம் பயிற்சி பெற்றுவரும் மூத்த மாணவர்களைப் பார்க்கையில் பூரிப்பாக இருக்கும். நடனத்தின்மீது அவர்கள் கொண்ட ஈடுபாடு, தினமும் கடுமையாக பயிற்சி செய்வது, கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஆகியவற்றை நான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்'' என்கிறார் காத்யா.

பட மூலாதாரம், காத்யா தோஷிவா
''கடின உழைப்பும் ஈடுபாடும் இல்லாமல் உங்கள் இலக்கை அடையமுடியாது. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நாம் கற்றதை தயங்காமல் பிறருக்கும் கற்றுத்தர வேண்டும்; ஒற்றுமையே வாழ்வில் பலம் சேர்க்கும்'' என்று தன்னைப்போன்ற வெளிநாட்டவர்களுக்கும் நடனம் பயில விரும்புபவர்களுக்கும் ஆலோசனை கூறுகிறார் காத்யா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












