You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பா.ஜ.க: தமிழகத்தில் தொடங்கிய Go Back Modi பிரசாரம் அகில இந்திய அளவில் பின்னடைவை ஏற்படுத்துமா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் சமூக வலைதளங்களில் #GobackModi டிரெண்டாகிறது.
ஆங்காங்கே கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறுகின்றன. சமூக வலைதளங்களில் காணப்படும் எதிர்ப்பும் கறுப்புக் கொடி போராட்டங்களும் மக்களின் மனநிலையை உண்மையிலேயே பிரதிபலிக்கின்றனவா?
பிப்ரவரி பத்தாம் தேதியன்று திருப்பூரில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் துவக்கிவைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்திற்கு வந்தபோது அவருக்கு எதிராக #gobackmodi ஹாஷ்டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
வைகோ தலைமையிலான ம.தி.மு.க., திருப்பூரில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தையும் நடத்தியது. பிரதமரின் பேச்சுக்கும் அறிவிப்புகளுக்கும் தேசிய அளவில் கிடைத்த கவனத்தைவிட, இந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த கவனம் அதிகமாகவே இருந்தது.
இப்படி நடப்பது முதல் முறையல்ல. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று சென்னையில் பாதுகாப்புத் துறை தொடர்பான கண்காட்சியான 'டிஃபன்ஸ் எக்ஸ்போ - 2018' சென்னைக்கு அருகில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை முறைப்படி துவக்கிவைக்கவும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் சில பிரிவுகளைத் துவக்கிவைக்கவும் பிரதமர் நரேந்திர மோதி சென்னைக்கு வருகைதந்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அந்த வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவே தான் செல்ல வேண்டிய இடங்கள் அனைத்திற்கும் சென்றார் மோதி. அப்போதும்கூட, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு மோதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சில ஊடகங்கள் இதனை சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜான் சைமன் கமிஷனுக்கு எதிராக நடந்த Simon Go back இயக்கத்துடன்கூட ஒப்பிட்டன.
இது தவிர, #gobackmodi என்ற ஹேஷ்டாக் மூலம் மோதிக்கு எதிரான ட்வீட்டுகளும் சமூகவலை தள பதிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. அன்று உலக அளவிலும் இந்திய அளவிலும் இந்த ஹாஷ்டாக் முதலிடம் பிடித்தது தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தது.
இதற்குப் பிறகு, கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மோதி மதுரைக்கு வந்தபோதும் இதேபோல, #gobackmodi என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் பா.ஜ.கவின் சமூக வலைதள பிரிவு சுதாரித்துக்கொண்டதால், போட்டியாக #TNwelcomesmodi #Maduraithanksmodi போன்ற ஹாஷ்டாகுகள் போட்டிக்காக ட்ரெண்ட் செய்யப்பட்டன. இருந்தபோதும் இந்த முறையும் #gobackmodi தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
2018ஆம் ஆண்டு மோதிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் பெரும்பலான எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட நிலையில், சமூக வலைதளங்களிலும் சாலைகளிலும் திரண்ட எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பிரதமர் மோதி தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் ஏன் இப்படி நடக்கிறது? உண்மையில் தமிழ்நாடு முன்பிருந்த எந்த பிரதமர்களையும்விட அதிகம் வெறுக்கிறதா?
"பிரதமர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தும் மரபு பல ஆண்டுகளாகவே உண்டு. தற்போது பிரதமர் மோதிக்கு எதிராகக் காட்டப்படும் எதிர்ப்பைவிட அதிகமான எதிர்ப்பை ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு எதிராக தமிழகம் காட்டியிருக்கிறது" என சுட்டிக்காட்டுகிறார் அரசியல் விமர்சகரான ஆர். முத்துக்குமார்.
1957ஆம் ஆண்டின் இறுதியில் தமிழக அரசியல் தலைவர்களை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மிக மோசமாக விமர்சித்தார் என்றுகூறி, அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னைக்கு வந்த நேருவுக்கு தி.மு.கவினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலையத்திலிருந்து துறை முகம் வரை நேரு சென்ற வழியெங்கும் தி.மு.கவினர் கறுப்புக் கொடிகளை ஏந்திநின்றனர். சென்னையில் அன்று நடந்த போராட்டத்தில் மட்டும் 25,000 பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறையின் தடியடியில் பலர் காயமடையவும் செய்தனர்.
நெருக்கடி நிலை காலகட்டத்திற்குப் பிறகு, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி சென்னைக்கும் மதுரைக்கும் வந்தபோது அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்படி, பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் எதிராக கடுமையான கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெற்றாலும்கூட, அதற்குப் பின்புவந்த தேர்தல்களில் அவர்கள் வெற்றிபெறவே செய்தனர்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி, செல்லும் வழியில் கறுப்புக் கொடி போராட்டங்களை காவல்துறை அனுமதிப்பதில்லை. எங்கோ ஒரு ஓரங்களில்தான் இந்தப் போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த பின்னணியில்தான் சமூக வலைதளங்களில் நடந்த #GobackModi டிரெண்டிங்கைப் பார்க்க வேண்டும்.
"பிரதமர் மோதியின் ஆட்சிக்காலத்தில் ஊழல் குறைந்துள்ளது. யாராலும் ஊழலில் ஈடுபட முடியவில்லை. அதனால்தான் இங்கிருப்பவர்கள் இப்படி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைகின்றன. ஆகவே மக்களின் ஆதரவு மோதிக்கு இருக்கிறது. இந்த போராட்டங்களை வைத்து மக்களின் மனநிலையை மதிப்பிட முடியாது" என்கிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன்.
மத்திய அரசுக்கு எதிரான இந்த உணர்வின் துவக்கப் புள்ளியாக 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைச் சொல்லலாம். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான தடையின் பின்னணியில் பா.ஜ.க. அரசு இருந்ததா இல்லையா என்பதைவிட, இந்தப் போராட்டங்களின்போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்த கருத்துகளே அவர்களை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகத் திருப்பின.
இதற்குப் பிறகு, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு விவகாரம் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள், அதன் தொடர்ச்சியாக அனிதா என்ற மாணவி தற்கொலைசெய்து கொண்டது ஆகியவை பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தின.
இதன் பிறகு, டெல்டா பகுதிகளில் மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம் ஆகியவையும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான உணர்வுகளைக் கூர்மைப்படுத்தின.
குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வேண்டுமென ஆளும் அதிமுக அரசை வலியுறித்தி போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தப் போராட்டங்கள் குறித்து கடுமையான மொழியில் பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்த கருத்துகள், போராட்ட உணர்வை பா.ஜ.கவுக்கு எதிரானதாக ஆக்கியது.
இந்தப் பின்னணியில்தான் பிரதமர் மோதிக்கு எதிராக போராட்டங்கள் தமிழகத்தில் உருப்பெற ஆரம்பித்தன.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்தக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பை இந்தப் போராட்டங்களும் பா.ஜ.கவுக்கு எதிரான எதிர்ப்புணர்வும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவுடனும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும் கூட்டணி அமைத்த பா.ஜ.கவுக்கு கன்னியாகுமரி என்ற ஒரு தொகுதிமட்டுமே கிடைத்தது. 5.5 சதவீத வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஓரளவுக்காவது காலூன்றிவிட்டது. இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் கேரளாவில்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பா.ஜ.க பெற்றது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கட்சியால் இதுவரை பெற முடியவில்லை.
பா.ஜ.க. அடிப்படையில் ஒரு இந்துத்துவக் கட்சியாக பார்க்கப்படுவது தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட பிராமணரல்லாதோர் இயக்கமும் அதனைத் தொடர்ந்த சுயமரியாதை இயக்கமும் வைதீக இந்து மதத்திற்கு எதிராக வலுவான உணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தின.
இதற்குப் பிறகு பெரியாரின் திராவிடர் கழகம் கடவுள் மறுப்பைப் பேசியதோடு, வைதீக மதங்களைக் கடுமையாகச் சாடியது. இவற்றின் தொடர்ச்சியான திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்கும் நிலையில், பா.ஜ.கவின் இந்துத்துவ அடையாளம் அதற்கு மிகப் பெரிய பிரச்சனையாக நீடிக்கிறது.
"பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் வந்த பிரச்சனைகளை விட்டுவிடலாம். ஆனால், தமிழ்நாடு தொடர்பான பிரச்சனைகளில் அந்தக் கட்சி எப்போதும் எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் எப்போதும் தமிழ் உணர்வுகளுக்கு எதிராகவே பேசுகிறார்கள். அப்படியிருக்கும்போது எப்படி அக்கட்சிக்கு வாக்களிக்க முடியும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் பல்கலைக்கழக மாணவரான முனீஸ்.
ஆனால், மதம் சார்ந்த விவகாரங்களைப் பெரிதுபடுத்துவது, இந்து உணர்வுகளைத் தூண்டுவது ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து தன் இருப்பை விரிவுபடுத்த முயன்றுவருகிறது பா.ஜ.க. அதில் எந்த அளவுக்கு வெற்றிகிடைக்கும் என்பதற்கு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பதிலளிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :